Pages

Showing posts with label இராமாயணம். Show all posts
Showing posts with label இராமாயணம். Show all posts

Sunday, 17 January 2016

கம்பனின் உவமைகள் 15 - திருமால் தோன்றும் காட்சி

கம்பனின் உவமைகளில் சில துளிகள் -15 

திருமால் தோன்றும் காட்சி 

--- அன்பு ஜெயா, சிட்னி


அயோத்தி மன்னனின் சிறப்பைப் பற்றிக் கூறிய கம்பரிடம், “ஐயா, அயோத்தி நகரைப் பற்றியும், மக்களைப் பற்றியும் மன்னனைப் பற்றியும் கூறினீர்கள். கதையின் நாயகனாக உதித்த நம்ம திருமாலைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன் என்று கேட்டேன். “சரி வா, தேவர்களெல்லாம் திருமாலின் வரவிற்காகக் காத்திருக்கிறார்கள். அவர் தோன்றுகின்ற காட்சியை உனக்குச் சொல்லுகிறேன்”, என்று கூறி, அந்தக் காட்சியை விவரித்தார் கம்பர்.

அந்தக் காட்சியை நீங்களும் காணுங்கள்.




“கருமையான நீலமேகத்தினில் செந்தாமரை மலர்க்கூட்டம்  மலர்ந்துள்ளது போன்ற தோற்றத்துடன், நீண்ட இரு சுடர்களை தன் இரண்டு பக்கங்களிலும் ஏந்திக்கொண்டு, தாமரை மலரால் தாங்கப்பட்டுள்ள இலக்குமி அம்மையுடன் திருமால் ஒரு செம்பொன் மலைமீது ஏறி வருவதுபோல, கருடாழ்வாரின்மேல் ஏறிக்கொண்டுவந்து காட்சி அளித்தார்.

கம்பனின் அந்தப் பாடல்:

கரு முகில் தாமரைக் காடு பூத்து, நீடு
இரு சுடர் இரு புறத்து ஏந்தி, ஏந்து அலர்த் 
திருவொடும் பொலிய, ஓர் செம்பொன் குன்றின்மேல்
வருவதுபோல், கழலுன்மேல் வந்து தோன்றினான்.


(பாலகாண்டம், திருவவதாரப் படலம் பாடல் 12)

இந்தப் பாடலில், நீலமேகமானது திருமாலுக்கும், தாமரை மலர்க் கூட்டமானது கை, கால், கண், வாய் போன்ற திருமாலின் அங்கங்களுக்கும், இரு சுடர்கள் சங்கு சக்கரங்களுக்கும், செம்பொன் குன்று கருடனுக்கும் உவமையாகச் சித்தரிக்கின்றார் கம்பர்.

* இரு சுடர் என்பதை சூரிய சந்திரராகவும் சில உரையாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். விஷ்வவீரட் சொரூபத்தில் இரண்டு பக்கங்களில் சூரிய சந்திரரைக் காணலாம்.

(உவமைகள் தொடரும்)


Wednesday, 27 August 2014

கம்பனின் உவமைகள் 14 - அயோத்தி மன்னனின் சிறப்பு

கம்பனின் உவமைகளில் சில துளிகள் -14 

அயோத்தி மன்னனின் சிறப்பு
--- அன்பு ஜெயா, சிட்னி
   
அயோத்தி வாழ் மங்கையர், மக்கள் இவர்களின் சிறப்பைக் கூறிய கம்பனிடம், ஐயா கவிச்சக்ரவர்த்தி, அந்த நாட்டில் வாழ்கின்ற குடிமக்களின் சிறப்பையெல்லாம் கூறினீர்கள்.  அவர்கள் அனைவரும் சிறப்புப் பெற்று இருக்கின்றார்களென்றால் அந்நாட்டை ஆளுகின்ற மன்னனும் நிச்சயம் சிறப்புடையவனாகத்தானே இருக்கவேண்டும். அவனுடைய சிறப்பைப் பற்றியும் கொஞ்சம் கூறுங்களேன்,’ என்று கேட்டேன். அதற்குக் கவிச்சக்ரவர்த்தி தன்னுடைய பாணியில் உவமைகளுடன் கூறிய மறுமொழி என்னவென்று பார்க்கலாம்.




படம்: வரைந்து அதை கூகுளில் வெளியிட்டவருக்கு நன்றி.


“ஒரு தாய் எவ்வாறு தன் பிள்ளைகள் அனைவரிடமும் வேறுபாடின்றி அன்பு பாராட்டி அரவணைத்துக் காப்பாளோ அதுபோல அயோத்தியை ஆண்ட  தசரதச் சக்கரவர்த்தியும் தன் மக்களைப் பாகுபாடின்றி அரவணைத்துக் காப்பாற்றுகின்றான். அதனால் அவன் ஒரு தாயைப் போன்றவன். தவம் என்பது அதைச் செய்பவனுக்கு எப்படி வேண்டிய நன்மைகளைத் தருகின்றதோ அதுபோலத் தசரதன் மக்களுக்கு வேண்டிய நன்மைகளைப் புரிவதால் தவத்திற்கு ஒப்பானவன்.  பிள்ளை ஒருவன் தான் செய்யும் இறுதிச் சடங்குகளின் மூலம்  தன் தாய்தந்தையரை உயர்கதி பெறச் செய்கின்றன். அதுபோல, இம்மன்னன் நாட்டில் தீய செயல்களை ஒழித்து நல்ல செயல்கள் பெருக உதவுகின்றான்.  அதானால் அவன் ஒரு பிள்ளைக்கு ஒப்பானவன்.  மருந்து எப்படி ஒரு நோயைப் போக்குகின்றதோ அதேபோலத் தன் மக்களுக்குத் தீங்கிழைக்கும் தீயசக்திகளை மன்னன் விரைந்து அழித்து மக்களைக் காப்பாற்றுவதால் அவன் மருந்துக்கு ஒப்பானவன்.  அறிவு என்பது நுட்பமான பொருளைக்காண முற்படுவது.  தசரதச் சக்ரவர்த்தியும்  நுட்பமான நூல்களின் பொருளினை ஆராய்ந்தறிய முற்படுபவன். அதனல் அவன் அறிவுக்கு ஒப்பனாவன்,” என்று கவிச்சக்ரவர்த்தி கூறினார்.

கம்பனின் அந்தப் பாடல்:

தாய் ஒக்கும் அன்பின்; தவம் ஒக்கும் நலம் பயப்பின்;
சேய் ஒக்கும். முன் நின்று ஒரு செல் கதி உய்க்கும் நீரால்;
நோய் ஒக்கும் என்னின் மருந்து ஒக்கும்; நுணங்கு கேள்வி
ஆயப் புகுங்கால், அறிவு ஒக்கும்; எவர்க்கும், அன்னான்.

    (பாலகாண்டம், அரசியற்படலம் பாடல்  4, நூல் பாடல் – 172.)


இந்தப் பாடலில் தசரதச் சக்கரவர்த்தியைக் கவிச்சக்ரவர்த்தி ஒரு தாயுக்கும், பிள்ளைக்கும், மருந்திற்கும், அறிவிற்கும் ஒப்பிட்டு அயோத்தி மன்னனின் சிறப்பை வெளிப்படுத்துகின்றார்.

(உவமைகள் தொடரும்)


Sunday, 20 July 2014

கம்பனின் உவமைகள் 13 - அயோத்தி மக்களின் கல்விச்சிறப்பு

கம்பனின் உவமைகளில் சில துளிகள் – 13

அயோத்தி மக்களின் கல்விச்சிறப்பு 
    - அன்பு ஜெயா, சிட்னி

அயோத்தி மாநகர் வாழ் மங்கையரின் சிறப்பைக் கூறிய கம்பனிடம், அங்குள்ள மங்கையர் மட்டும்தான் சிறப்புடையவர்களா கம்ப நாடரே என்று கேட்டேன். அதற்குக் கம்பன், அயோத்தி வாழ் மக்கள் அனைவரும் சிறப்பு வாய்ந்தவர்கள்தான். ஏன், அம்மாநகரமும்கூடச் சிறப்பு வாய்ந்ததுதான் என்று விளக்கினான். கம்பன் என்ன சொன்னான் என்று கேளுங்களேன்.



அயோத்தி மாநகர், ஒரு விதை முளைத்துப் பூமியிலிருந்து மேலே எழுந்து வருவதைப்போல, கல்வியில் மேலோங்கி வளர்ந்து இருந்ததாம். மரத்தில் வலிமையான கிளைகள் வளர்ந்து பரவுவதுபோல மக்களிடம் எண்ணற்ற நூல்களின் கேள்வி அறிவு பெருகி வளர்ந்ததாம்.  அந்தக் கிளைகளில் இலைகள் தழைத்து வளருவதைப்போல கல்வியின் பயனால் மக்களிடம் நல்ல குணங்கள் நிறைந்து இருந்தனவாம். அவ்வாறு வளருகின்ற மரக்கிளைகளில் அரும்புகள் அரும்புவதுபோல எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்தும் குணம் அயோத்தி மக்களிடம் அதிகமாகக் காணப்பட்டதாம். அந்த அரும்புகள் மலர்வதுபோல், அயோத்தியில் அறச்செயல்கள் பெருக ஆரப்பித்தனவாம். அச்சிறப்புகள் அனைத்தும் அங்கே இருந்ததால், பழங்கள் பழுத்து செழிப்பதாப்போல அயோத்தி மக்களிடம் போகம் என்னும் இன்ப அனுபவம் பெருகி, அயோத்தி நகர் ஒரு பழுத்த மரத்தைப்போல சிறந்து விளங்கியது என்று கம்பன் விளக்கிக் கூறினான்.

கம்பனின் அந்தப் பாடல்:

ஏகம் முதல் கல்வி முளைத்து எழுந்து, எண் இல் கேள்வி
ஆகும் முதல் திண் பணை போக்கி, அருந் தவத்தின்
சாகம் தழைத்து, அன்பு அரும்பி, தருமம் மலர்ந்து,
போகங் கனி ஒன்று பழுத்தது போலும் அன்றே.

        (பாலகாண்டம், நகரப் படலம் பாடல் 75, நூல்பாடல் - 168)

(ஏகம் முதல் – ஒரு வித்து; பணை – கிளை; சாகம் – இலைகள்; போகம் – இன்பம், நில அனுபவம்)

இந்தப் பாடலில் கம்பன் கல்வியை ஒரு விதைக்கும், கேள்வி அறிவைக் கிளைகளுக்கும், நல்ல குணங்களை இலைகளுக்கும், அன்பை அரும்புக்கும், அறச்செயல்களை மலருக்கும், இன்ப அனுபவத்தைப் பழத்துக்கும் ஒப்பிட்டுக் கூறுகின்றான்.

கல்வியால் அடக்கம்வருகிறது. அடக்கத்தால் நல்வாழ்வு கிடைக்கிறது. அவ்வாழ்வில் நல்ல வழிகளில் பொருள் சேருகிறது. அப்பொருளால் தருமம் செய்ய முடிகிறது. அந்த தருமத்தால் போகம் என்னும் இன்ப அனுபவம் கிடைக்கிறது என்று இப்பாடலுக்குப் பொருள் கூறுகிறார்கள் உரையாசிரியர்கள்.

கொசுறு 1: பூவின் 6 பருவங்கள்/நிலைகள் – அரும்பு, முகை, போது, மலர், வீ, செம்மல்.
கொசுறு 2: எட்டு வகையான போகங்கள்: பெண், ஆடை, அணிகலன், உணவு, தாம்பூலம், நறுமணப்பொருள், பாட்டு, பூம்படுக்கை.

                              (உவமைகள் தொடரும்)

Saturday, 5 July 2014

கம்பனின் உவமைகள் - 12 : அயோத்தி மாநகர் வாழ் மங்கையர்

கம்பனின் உவமைகளில் சில துளிகள் - 12

அயோத்தி மாநகர் வாழ் மங்கையர்
                     - அன்பு ஜெயா, சிட்னி

அயோத்தியின் அழகை வருணித்த கம்பன், இப்போது அங்கு வாழ்கின்ற மங்கையர் பற்றி ஏதோ சொல்வதற்கு அழைக்கிறான். வாருங்கள் கேட்போம்.

அயோத்தியில் வாழும் பெண்களை மூன்று வகைப்படுத்திக் கூறுகிறான் கம்பன். பருவம் நிரம்பாத பெண்கள், பருவ மங்கையர் மற்றும் பருவம் முதிர்ந்த மங்கையர்.



கூந்தலை வாரி முடிக்கக்கூட முடியாத இளம் பெண்களின் குதலைச் சொற்கள் புல்லாங்குழலில் இருந்து வருகின்ற இனிய இசையைப் போல இருக்குமாம்.

மங்கைப் பருவத்து மகளிரது மழலைச் சொற்கள் மகர யாழின் கீதத்தை ஒத்திருக்குமாம் (கம்பா, பருவ மங்கையிரின் சொற்கள் மழலையா – சரியான ஆளப்பா நீ!!!).

பருவம் முதிர்ந்த மகளிரது இனிய சொற்களாகிய இன்னிசை, கள் விற்பவர்களின் சேரியிலே பாடுகின்ற கூத்தர்களின் பாட்டின் இசையை ஒத்திருக்குமாம்.

கம்பனின் அந்தப் பாடல்:

குழல் இசை மடந்தையர் குதலை, கோதையர்
மழலை, அம் குழல் இசை; மகர யாழ் இசை,
எழில் இசை மடந்தையர் இன்சொல் இன் இசை
பழையர்தம் சேரியில் பொருநர் பாட்டு இசை.

           (பாலகாண்டம், நகரப் படலம், பாடல் - 136)

 
பெண்களின் பருவங்களான பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்ற ஏழு பருவங்களையும் மூன்றினுள் அடக்கிவிட்டான் கம்பன். ஒரு வேளை அவற்றிற்கான உவமைகள் அவனுக்குக் கிடைக்கவில்லையோ?! அவன் திறமையே திறமைதான்.

     (உவமைகள் தொடரும்)


Thursday, 5 June 2014

கம்பனின் உவமைகள் - 11 : அகழியைச் சூழ்ந்த சோலை

கம்பனின் உவமைகளில் சில துளிகள் 11

அகழியைச் சூழ்ந்த சோலை
- அன்பு ஜெயா, சிட்னி

அயோத்தி மாநகரின் அகழியை நமக்கு அறிமுகப் படுத்தும்போது சக்கரவாள மலையைப்பற்றி அறிமுகப்படுத்தினான் கம்ப நாட்டான். அந்தச் சக்கரவாள மலை இந்தப் பூமண்டலத்தைச் சுற்றி உள்ளது என்றும், அதைச் சுற்றிப் பெருங்கடலொன்று இருப்பதைப் பற்றியும் அறிந்தோம். அந்தப் பெருங்கடலை அடுத்துப் பேரிருள் சூழ்ந்துள்ளது என்று புராணங்கள் கூறுகின்றனவாம்.

அயோத்தி மாநகரின் அகழியைச் சுற்றி அடர்ந்த காடு போன்ற சோலை ஒன்று அமைந்திருப்பதாகக் கூறுகின்றான் கம்பன். அந்தச் சோலையைப் பற்றி அவன் என்ற கூறுகின்றான் என்று கேட்போம்.



நீண்டு உயர்ந்த மதிலினால் சூழப்பட்ட அயோத்தி நகரம் பூமண்டலத்தை ஒத்து இருக்கின்றதாம். அந்நகரத்தைச் சூழ்ந்திருக்கின்ற மதில் சக்கரவாள மலையைப் போல இருக்கின்றதாம். அதைச் சுற்றி உள்ள அகழி சக்கரவாள மலையைச் சுற்றி இருக்கின்ற பெருங்கடலைப் போல இருக்கின்றதாம். அகழியைச் சூழ்ந்து உள்ள சோலை பெருங்கடலைச் சுற்றியுள்ள பேரிருளை ஒத்து உள்ளதாம்.
இந்தக் காட்சி, தூரத்திலிருந்து பார்ப்பவர்களின் கண்ணுக்குக் கருத்த நிறத்திலுள்ள மதிலைச் சூழ்ந்துள்ள சோலை, அந்தப் பொன் போன்ற மதிலுக்குத் திருஷ்டிப் பரிகாரம் செய்வதற்காகப் போர்த்தப்பட்ட (கரு)நீல ஆடையைப் போலக் காட்சி அளிக்கின்றதாகக் கூறுகின்றான் கம்பன்.

கம்பனின் அந்தப் பாடல்:

அன்ன நீள் அகன்
கிடங்கு சூழ்கிடந்த ஆழியைத்
துன்னி, வேறு சூழ்கிடந்த தூங்கு,
வீங்கு, இருட் பிழம்பு
என்னலாம், இறும்பு சூழ்கிடந்த
சோலை, எண்ணில், அப்
பொன்னின் மா மதிட்கு உடுத்த
நீல ஆடை போலுமே.
           (பாலகாண்டம், நகரப் படலம், பாடல் - 114)

தூரத்திலுருந்து பார்க்கும்போது நமக்கும் அந்தச் சோலை கருத்த நிறத்தில் தான் தெரிந்தது. அருகில் வர வரத்தான் அந்தச் சோலை, பல நிறங்களில் அழகாகத் தோன்றுகின்றது. இதையெல்லாம் தன் மனக்கண்களிலேயே கண்டுவிட்ட கம்பனின் கற்பனை வளத்தைப் போற்றுதற்குச் சொற்கள் கிடைக்கவில்லை.

(உவமைகள் தொடரும்)


Saturday, 24 May 2014

கம்பனின் உவமைகள் - 10 : அயோத்திய மாநகரின் அகழி

 கம்பனின் உவமைகளில் சில துளிகள்  10

அயோத்தி மாநகரின் அகழி
- அன்பு ஜெயா, சிட்னி

அயோத்தி மாநகரின் மதிலின் அருகில் செல்வதற்கு நம்மை அழைக்கிறான் கம்பன். வாருங்கள் மதிலின் அருகில் சென்று பார்ப்போம்.

இதென்ன! இந்த மதிலைச் சுற்றி இவ்வளவு அகலமான, ஆழமான, தண்ணீர் உள்ள ஓர் அமைப்பு இருக்கிறதே! பண்டைக் காலத்தில் கோட்டையின் பாதுகாப்பிற்காக அகழி என்று ஒன்றை அமைப்பார்களே அதுதானா இது!  சற்றுப் பொறுங்கள் இந்த அகழியைப் பற்றி கம்பன் என்ன சொல்கிறான் என்று பார்க்கலாம்.



- அகழி -

புராணங்களில் கூறப்பட்டுள்ள, ஏழு தீவுகளையும் சூழ்ந்துள்ள ஏழு கடல்களுக்கும் அப்பால் அவற்றையெல்லாம் சுற்றித் தன்னுள் அடக்கிச் ‘சக்கரவாள கிரி’ என்னும் மலை இருக்கின்றது. அந்த மலையைப் போலவே ஓங்கி உயர்ந்துள்ள இந்த அயோத்தி மாநகரின் மதில் உள்ளதாம். அந்தச் சக்கரவாள கிரியையும் சுற்றி எப்படி ஒரு பெருங்கடல் உள்ளதோ அதேபோல, அயோத்தி மாநகரின் மதிலைச் சுற்றி அதனுடைய அகழி அமைந்திருக்கிறதாம். விலைமகள் ஒருத்தியின் மனம், தன்னிடம் வருவோரின் செல்வம் அனைத்தையும் கவரும் எண்ணத்துடன், எவ்வளவு கீழ்மையாக இருக்குமோ அதேபோல அந்த அகழியின் ஆழம் உள்ளதாம். இழிவான பாடல்கள் போல அகழியின் தண்ணீரும் தெளிவில்லாமல் இருக்கின்றதாம். கம்பன் காலத்திலும் இப்போது வரும் சில திரைப்படப் பாடல்கள் போலச் சிலர் எழுதியிருப்பார்களோ!

மேலும் அந்த அகழி, எவரும் நெருங்க இயலாத நற்குல மங்கையரின் கற்பைப் போலப் பாதுகாப்பானதாம். அதுமட்டுமல்ல,  ஐம்பொறிகளின் வயப்பட்டுத் தீய நெறியில் செல்லும் மானிடரின் மனம் போல, அகப்பட்ட பொருளை விரைவாகக் கவ்விக்கொண்டு மற்றவர்களைத் துன்புறுத்தும் முதலைகள் பல இருக்கும் இடமாம் அந்த அகழி.

இவ்வாறு, அந்த அகழியைச் சக்கரவாள மலையைச் சுற்றியுள்ள பெருங்கடலுக்கும், அதன் ஆழத்தை விலை மகளின் மனத்திற்கும், அதில் உள்ள கலங்கலான தண்ணீரை தெளிவில்லாத இழிவான பாடலுக்கும், அகழியின் பாதுகாக்கும் திறனை நற்குல மகளிரின் கற்பிற்கும், அகழியில் உறைகின்ற முதலைகளை மானிடரின் ஐம்பொறிகளுக்கும் உவமையாகக் கூறி அயோத்தி மாநகரைச் சுற்றியுள்ள அகழியின் சிறப்பைக் கம்பன் நமக்கு உணர்த்தியுள்ளான்.

கம்பனின் அந்தப் பாடல்:

அன்ன மா மதிலுக்கு ஆழி மால் வரையை
அலைகடல் சூழ்ந்தன அகழி,
பொன் விலை மகளிர் மனம் எனக் கீழ் போய்,
புன் கவி எனத் தெளிவு இன்றி,
கன்னியர் அல்குல்-தடம் என யார்க்கும்
படிவு அருங் காப்பினது ஆகி,
நல் நெறி விலக்கும் பொறி என எறியும்
கராத்தது;- நவிலலுற்றது நாம்.
 
 (பாலகாண்டம், நகரப் படலம், பாடல் - 107)

மதிலுக்கு அருகில் போகலாம் என்று நம்மை அழைத்து வந்து அதைச் சுற்றியுள்ள அகழியைப் படம் பிடித்துக் காட்டிவிட்ட கம்பனின் கவித் திறனை என்னென்று கூறுவது!

 (உவமைகள் தொடரும்)



Saturday, 17 May 2014

கம்பனின் உவமைகள் - 9 : மதிலின் மகிமை

கம்பனின் உவமைகளில் சில துளிகள் - 9

 மதிலின் மகிமை
        - அன்பு ஜெயா, சிட்னி

கோசல நாட்டு மருத நிலத்தின் அழகினையும் சிறப்பினையும் நமக்குக் காண்பித்த கம்பன், காட்டைப் பார்த்தது போதும் வாருங்கள் நாட்டைப் பார்க்கப் போகலாம் என்று, அழைக்கின்றான். வாருங்கள் அவனைத் தொடர்வோம்.

அதோ, அங்கே பிரமாண்டமாகத் தெரிகிறதே அது என்ன?, அயோத்தி மாநகரின் மதில்தானா அது. கம்ப நாட்டாரே, இவ்வளவு நீளமாக இருக்கிறதே அந்த மதில் அது எங்கே ஆரம்பித்து எங்கே முடிகிறது, அதனுடைய சிறப்பு என்ன?’ என்று கேட்டேன். அதற்குக் கம்பன் அந்த மதிலைப்பற்றி விவரித்தான்.

அந்த மதில் எங்கே ஆரம்பிக்கிறது, எங்கே முடிகிறது என்பது கண்ணுக்குத் தெரியாதபடி பரந்து இருக்கிறது. எப்படி வேதம் பல நுண்ணிய கருத்துக்களைத் தன்னுள்ளே அடக்கி, மிகப் பரந்து, எல்லை காணமுடியாதபடி இருக்கின்றதோ அதே போல இருக்கிறது. அதனால் அந்த மதில் வேதத்தை ஒத்து உள்ளது. அந்த மதில் உயரத்தில் விண்ணுலகை எட்டுவதால் தேவர்களை ஒத்து உள்ளது.
பகைவரை எதிர்கொண்டு தாக்கி அயோத்தி நகரைக் காப்பதற்காக அந்த மதில் தன் மேற்புரத்தில் பல இயந்திரப் பொறிகளை, வெளியே தெரியாதவாறு, உள்ளடக்கி வைத்திருப்பதால் புலன்களை அடக்கி வாழும் முனிவர்களை ஒத்து உள்ளது. அது அயோத்தி மக்களைக் காத்து நிற்பதால், காவல் தெய்வமாக உள்ள துர்க்கையை ஒத்திருக்கிறது. அந்த மதில் சூலம் முதலிய ஆயுதங்களை தன்னிடம் வைத்திருப்பதால் காளி தேவியை ஒத்துள்ளது. பிற அரசர்களால் அடைய முடியாதபடி இருப்பதால் அது தன் பத்தர்கள் தவிர மற்றவர்களால் அடைய முடியாத ஈசனை ஒத்திருக்கிறது. இவ்வாறு அந்த மதிலின் பெருமைகளைப் பல உவமைகளால் அவன் பாடலில் பாராட்டிக் கூறுகின்றான் கம்பன்.

கம்பனின் அந்தப் பாடல்:

“மேவ அரும் உணர்வு முடிவு இலாமையினால்
வேதமும் ஒக்கும்; விண்புகலால்,
தேவரும் ஒக்கும்; முனிவரும் ஒக்கும்,
திண் பொறி அடக்கிய செயலால்;
காவலின், கலை ஊர் கன்னியை ஒக்கும்;
சூலத்தால், காளியை ஒக்கும்;
யாவையும் ஒக்கும், பெருமையால், எய்தற்கு
அருமையால், ஈசனை ஒக்கும்.”  

(பாலகாண்டம், நகரப் படலம், பாடல் -101)


நாட்டைப் பார்க்கலாம் வாருங்கள் என்று அழைத்துவந்து நம்மை மதிலிடம் கொண்டுவந்து நிறுத்திவிட்டான் கம்பன். வேறு என்னவெல்லாம் செய்யப் போகிறான் என்று பொறுத்திருந்து பார்ப்போம் வாருங்கள்.


                              (உவமைகள் தொடரும்)