Pages

Thursday, 27 August 2026

கல்வியினால் வென்றிடுவாய்க் கற்று!

 

கல்வியினால் வென்றிடுவாய்க் கற்று!

- அன்பு ஜெயா, சிட்னி


(பா வகை:  நேரிசைக் கலிவெண்பா)

 

காலம் எவருக்கும் காத்திருத்தல் இல்லையே

காலத்தில் நீயுமே கற்றிடு – காலம்

எதற்குமே காத்திருத்தல் என்றுமே இல்லை

அதற்குமுன் கற்றலில் ஆழ்ந்தால் – உதவிடும்

கல்வியும் உன்னைக் கரைசேர்க்கும் - உண்மையில்

கல்வியே என்றுமுனைக் காத்திடும் –  கல்விகற்றோர்

வாழ்வில் சிறப்புமே வந்துடன் சேர்ந்திடும்

வாழ்வினில் வென்று வளமும் - பெறுவரே  

கல்வியில் வென்றவர் காண்பதென்றும் வெற்றியே

கல்விதான் வாழ்விற்கே காட்டிடும் - நல்வழி

நல்லதோர் வாழ்வும் நலமுடன் கூடிடும்

நல்லவர் நட்புமே நாளும் - நலம்தரும்

கல்விக்கே எல்லையைக் கண்டவர் இல்லையே

கல்வியினால் வென்றிடுவாய் கற்று!

---------------------------------------

Sunday, 9 August 2026

ஓடி உழைத்தே உயர்

 ஓடி உழைத்தே உயர்

- அன்பு ஜெயா, சிட்னி

(பா வகை:  நேரிசைப் பஃறொடை வெண்பா)


உழைப்பவர் என்றும் உலகில் உயர்வர்

உழைப்புதான் உன்னை உயர்த்தும் – உழைப்பாய்

உழைப்பால் உயர்ந்தோர் உலகில் பலரே

உழைத்திடின் போற்றுவர் உன்னை -  தழைத்திடும்

உன்னுடைய வாழ்வும் உணர்ந்திடு நன்றாக

என்றும் நலம்பெருக ஏற்றிடுவாய் – உன்மனதில்

நாட்டில் உழைப்பால் நலம்தான் பெருகிடும்

ஏட்டினில் என்றோ எழுதியே  - காட்டினர்

நாட்டினைக் காப்பதும் நல்வாழ்வு ஓங்குவதும்

பாட்டாளி கையிலே பாரினில் – நாட்டமுடன்

ஓடியாடி நாளும் உழைப்போர் உயர்வரே

ஓடி உழைத்தே உயர்!

--------------------------------------------