Pages

Monday, 28 September 2026

தாலாட்டு மழலைக்கு மருந்தாகுமே!

 

தாலாட்டு மழலைக்கு மருந்தாகுமே!

- அன்பு ஜெயா, சிட்னி


(பா வகை: சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா)

 

தரவு:

தன்னுடையத் தாலாட்டே தன்குழவிக் கின்பமென்றுத்

தன்குழந்தை உறங்கிடவே தாயவளும் இசைத்திடுவாள்

இன்பமுடன் குழந்தையுமே இளைப்பாறி உறங்கிடுமே

அன்பிற்குத் தாயிடமே அளவென்ப தில்லைதானே!

 

தனிச்சொல்:

நோக்கிடின்,

 

தாழிசை:

அன்பினிலே உச்சமென்றால் அன்னையவள் அன்பொன்றே

என்றுமிதை மறுப்பாரும் இவ்வையத்தில் இல்லையென்றே

தொன்றுதொட்டு மக்களெல்லாம் தொடர்ந்திங்கே வாழ்ந்தனரே!

 

மற்றவரின் அன்பெல்லாம் மறைவதுமே உண்டுலகில்

பற்றிருக்கும் இன்று,பின் பறந்துமே சென்றுவிடும்

வற்றாத நீரூற்றாய் வளம்தருதல் தாயன்பே!

 

தனிச்சொல்:

எனவே,

 

தாழிசை:

தாய்மரபைப் போற்றிடுவோம் தாலாட்டின் சிறப்பெண்ணித்

தாய்க்குழுமம் வணங்கிடுவோம் தாய்மனங்கள் குளிர்ந்தாலே

தாய்நாட்டில் நற்செயல்கள் தழைத்திங்கே பெருகிடுமே!

 

தனிச்சொல்:

நோக்கிடின்,

 

சுரிதகம்: (ஆசிரியப்பா)

அன்னையின் அன்பும் ஆழமாய்ப் பாய்ந்துமே

அன்னையின் தாலாட் டணைக்கும் குழவியை

என்றுமே அன்னையின் அன்புமே காத்திடும்

நன்றாய் வளர்த்திட நாளுமே உழைத்திடும்

அன்னையின் அறிவுரை அணைத்துமே வளர்த்திடும்

அன்னையே இறையென அவர்களும்

என்றுமே வாழ்ந்திடின் ஏற்றமும் அடைவரே!

------------------------