Pages

Tuesday, 20 October 2026

ஒற்றுமையே தேசத்தின் பலம்

 

ஒற்றுமையே தேசத்தின் பலம்


- அன்பு ஜெயா


(பா வகை: கழி நெடிலடி எண்சீர் ஆசிரிய மண்டிலம்)


 (பாரதி பாவாணர் செந்தமிழ் வானம் – குழுவில் வெளியிடப்பட்டது)

 

ஒற்றுமையே உயிரினங்கள் உயர்வாக வாழ

    உள்ளதொரு நல்வழியே உணர்ந்திடுவோம் நாமே!

பற்றும்தான் வைத்திடுவோம் பலமாக நம்தாய்

    பாரதத்தின் மீதென்றும் பரவட்டும் அன்பே!

ஒற்றுமையாய் நாமென்றும் உவந்திங்கே வாழ்வோம்

    உலகம்தான் போற்றிடவே உயர்வும்தான் பெறுவோம்!

ஒற்றுமைதான் எல்லோர்க்கும் உயிர்நாடி உணர்வோம்

    ஒருபோதும் வேற்றுமைதான் உயிர்பெறாமல் தடுப்போம்!    (1)

 

எல்லையிலே போரென்று வந்தாலே நாமும்

   எழுச்சியுமே பெற்றிங்கே ஆளுகின்ற அரசை

எல்லோரும் இணைந்திங்கே ஆதரிப்போம் இங்கே

   எக்கட்சி ஆண்டாளும் அளிப்போம்நம் உதவி!

பல்வேறு சமயத்தில் காட்டியுள்ளோம் இதனை

   பண்பிதுதான் பாரதம்வாழ் மக்கள்தம் உணர்வே!

வெல்வதொன்றே குறிக்கோளாய் வீரருமே உழைப்பர்

   வெற்றியுமே ஈட்டிடுவர் எதிரிகளும் வீழ்வர்!            (2)

 

நமக்குள்ளே வேறுபாடும் உண்டிங்கே ஆனால்

   நாட்டுடைய நலமென்றால் ஒன்றுசேர்வோம் உழைப்போம்!

எமக்கெல்லாம் முதன்மையதே நம்நாடு, நாட்டில்

   எம்முடனே வாழ்கின்ற மக்களென்ற உணர்வே!

தமக்குத்தம் வாழ்வதுதான்  பெரிதாக எண்ணி

   தாய்த்தேசம் தாழ்ந்திடவே அனுமதியோம் என்றும்!

நமக்கென்று கட்சியொன்று இருந்தாலும் முதலில்

   நாடொன்றே முன்னுரிமை பெற்றிடுமெம் மனதில்!        (3)

--------------------------------------------------------

ஈகையை மறவாதே!

 

ஈகையை மறவாதே!

- அன்பு ஜெயா, சிட்னி

(பா வகை: ஆசிரியத் துறை)

 

எதிர்பார்ப் பின்றியே ஏழைக் களித்தல்

புதிய உணர்வினைப் புவினில் தூண்டும்

புதிய உணர்வும் புவினில்

அதியமான் போல அனைவரை மாற்றுமே!

 

வறியவர்ப் பசியைநீ வலியவே தீர்த்தால்

அறிவாய் உன்னையே ஐயனும் காப்பான்

அறிவாய் உன்னையே ஐயனும்

குறிவைத் தேர்ப்பான் குவலயம் காக்கவே!

 

முல்லைக் குத்தேர் முன்னவன் கொடுத்தான்

எல்லையும் உண்டோ இங்கே கொடைக்கே

எல்லையும் உண்டோ இங்கே

தொல்லை நீக்கியத் தூயவர் உயரவே!

 

------------------------------------------------