Pages

Friday, 22 May 2026

அன்பான இணையர் அறத்தைச் செய்வர்!

 

அன்பான இணையர் அறத்தைச் செய்வர்!

--- அன்பு ஜெயா

(பா வகை: உடுக்கைப் பாட்டு என்ற சிந்து பாடல்)

 

விழிகள் இரண்டும் விழிகள் இரண்டும்

ஒன்றைநோக்கும் – ஒன்றைநோக்கும்,

விழிகளின் காட்சியில் விழிகளின் காட்சியில்

வேற்றுமையோ? – வேற்றுமையோ?

அன்பால் இணைந்தோர் அன்பால் இணைந்தோர்

செய்வதொன்றே – செய்வதொன்றே!

அன்பால் அறமே அன்பால் அறமே

இணைந்துசெய்வர் – இணைந்துசெய்வர்! (1)

 

விழிகளில் சிறந்ததே விழிகளில் சிறந்ததே

ஒன்றாமோ – ஒன்றாமோ!

விழிகள் இரண்டில் விழிகள் இரண்டில்

வேற்றுமையோ – வேற்றுமையோ!

அன்பின் பிணைப்பில் அன்பின் பிணைப்பில்

அறம்செய்வர் – அறம்செய்வர்

அன்பே அறமென அன்பே அறமென

வாழ்வாரே! – வாழ்வாரே! (2)

-----------------

குற்றமற்றவரின் கடுஞ்சொல்லும் இனிதே!

 

குற்றமற்றவரின் கடுஞ்சொல்லும் இனிதே!                                   

--- அன்பு ஜெயா

பா வகை: ஒப்பாரிப் பாட்டு என்ற சிந்து பாடல்

 

(ஒப்பாரி)

குற்றமிலார் சொல்நன்றே

வற்றாதோர் அன்புண்டே;

கடுஞ்சொல்லும் மாற்றிடுமே

விடுபடுவாய் நல்வழிக்கே;

மற்றவரின் இன்சொல்லோ

சற்றுமுனைக் காத்திடாதே;

குற்றமிலார் பின்சென்றே

குற்றமின்றி வாழ்வாயே;

பற்றுமின்பம் வாழ்வினிலே!

 

(ஒப்பாரி வேற்றினம்)

குற்றமற்றோர் கடுஞ்சொல்லும் கூறுவருன்

குற்றமதும் கலைந்திடவே கூறுகின்றார்;

அவர்கூறும் கடுஞ்சொல்லில் அன்புண்டே

தவறுநீக்கி அவருரையால் தழைத்திடுவீர்;

மற்றவரின் கடுஞ்சொல்லோ மனங்கலக்கும்

உற்றதோர் துணைத்தேட உனைவிரட்டும்;

நாயனாரும் எறிந்தகல்லை நயந்தேற்றார்

நயமான மாறனம்பை நாடலையே;

மாறாத சாக்கியனின் மாண்பதுவோ

மாறனம்பு மென்மைதான் மனமிலையே;

வற்றாத அன்புடனே வாழ்ந்தாலே

குற்றமற்றோர் உயர்வாரே குணத்தாலே!

------------------------------

Saturday, 16 May 2026

அறத்தினை மீறாமலிருத்தல் இனிது!

 

அறத்தினை மீறாமலிருத்தல் இனிது!

--- அன்பு ஜெயா

பா வகை:  தாலாட்டுச் சிந்து பாட்டு.

 

ஆராரோ ஆரிராரோ

ஆரிராரோ ஆராரோ!

அறம்தன்னை மீறாதே – மனத்திலிதைத்

திறமாக ஏற்றிடுவாய்!

 

சினமெவர்க்கும் சீற்றமதை – அளித்திடுமே

மனத்திலதை ஏற்றிடுவாய்!

உனக்குதவி வேண்டுமெனின் – சினமில்லா

மனத்துடன் வேண்டிடுவாய்!

வறுமையின் துன்பத்தை – எளிமையினால்

பொறுமையுடன் வென்றிடுவாய்!

அளித்திட்ட இடம்தன்னில் – அமைதிபெறல்

எளிமையின் சிறப்பன்றோ!

பெரும்விருப்பம் இன்பமதை – அழித்திடுமே

பெருமையையும் குலைத்திடுமே!

பெரும்விருப்பம் போக்கிவிடு – வாழ்வில்

பெரும்இன்பம் சேர்ந்திடுமே!

 

ஆராரோ ஆரிராரோ

ஆரிராரோ ஆராரோ!

அறம்தன்னை மீறாதே – மனத்திலிதைத்

திறமாக ஏற்றிடுவாய்!

-----------------------------------

மாண்புடையவரின் செல்வம் இனிது!

 

மாண்புடையவரின் செல்வம் இனிது!

 - அன்பு ஜெயா, சிட்னி

பா வகை:  வளையல் சிந்து.

 

நோய்தான் இன்றிக் குழந்தைகள் வளர்ந்தால்

நோயிலா வாழ்வும் நலமே – நாளும்

எம்மினம் உயர்வதும் நலமே – மயக்கமே

இல்லா மாண்பும் நலமே – அத்துடன்

செல்வம் சேர்ந்திடின் சிறந்திடும் நம்மினம்

செழிப்புடன் நன்மையும் கூடுமே!             (1)

 

மாண்புடைச் செல்வர் மற்றவர் மகிழ்ந்திட

மனமுவந் தளிப்பர் கொடையே – எளியோர்

இன்பமாய் வாழவும் கொடையே – உலகில்

என்றுமே உயர்ந்ததும் கொடையே – பண்புடைச்

செல்வர் அளித்திடும் கொடையே – ஏழ்மையைச்

சிறப்பாய் வென்றிடும் உறுதியே!             (2)

 

குழந்தையின் நோயிலா வாழ்வே இனிது,

குறையிலா உரையதும் இனிது – மேலும்

அவைசார் உரையெனின் இனிது -  நாளும்

மாண்புடன் வாழ்தலே இனிது – வாழ்வில்

மாண்புளோர் செல்வம் சேர்த்து வாழ்ந்துமே

மற்றவர்க் குதவிடல் இனிது!                  (3)

 

அவையினுக் கேற்ற உரையினை ஆற்றுவோர்

அருந்திறன் என்றும் இனிது – புவியில்

குறையிலா மாண்பும் இனிது – செல்வம்

மாசிலா தென்றால் இனிது – என்றும்

மற்றவர் வாழ்வில் ஒளியினை ஏற்றுதல்

மாநிலம் தன்னில் இனிது!                     (4)


-----------------------------