Pages

Monday, 20 April 2026

நற்பண்பு இல்லாதாரை நீங்கிடு!

 

நற்பண்பு இல்லாதாரை நீங்கிடு!

- அன்பு ஜெயா, சிட்னி

(பா வகை:  பண்ணத்தி என்ற பாடல்)

எடுப்பு

கடன்கலங்க வைத்திடுமே – கற்றிடு

கடனின்றி வாழ்ந்திட!


தொடுப்பு

நற்பண்பே இல்லாரை நண்பராய்க் கொள்ளாதே

நற்பண்பே காத்திடும் நம்வாழ்வில் நாளுமே!

 

(கடன்கலங்க வைத்திடுமே – கற்றிடு

கடனின்றி வாழ்ந்திட!)


முடிப்பு

கடன்பட்டார் நெஞ்சம் கலங்கியே தீருமே

       கடன்நீக்கி வாழ்வில் கலக்கம் தவிர்ப்பமே!

கடமையேதும் இல்லையே கற்பிலா மனைவியுடன்

       காலமும் வாழ்ந்திட கலைந்திடே உறவையே!     (1)

 

நல்லபண்பே இல்லா நண்பரை நீங்கிடு

       நல்லதோர் பெருமையும் நாடிவந்து சேருமே!

நல்லவர் சேர்க்கையால் நாளுமுன் வாழ்விலே

       நற்பயன் சேர்ந்திடும் நல்லின்பம் நிலைக்குமே!    (2)

 

(கடன்கலங்க வைத்திடுமே – கற்றிடு

கடனின்றி வாழ்ந்திட!)

---------------------------------

நல்லவரில்லா நாட்டில் துன்பமே!

 

நல்லவரில்லா நாட்டில் துன்பமே!

– அன்பு ஜெயா

பா வகை:  நொண்டிச் சிந்து – இருமுச்சீரிரட்டை

 

ஒழுக்கமிலான் உறவென்றே – ஒன்றிணைந்தால்

      ஒருபோதும் இன்பம்தான் இருக்காதே;

வழுவின்றி நன்னூல்கள் – கல்லாதார்

      வாழ்வு துன்பத்தில் ஆழ்ந்திடுமே;

இழுக்குதரும் தொழில்செய்வோர் – நட்பினில்

      இணைந்தால் துன்பமுனை அணைத்திடுமே;

வழுவில்லா நல்லோரை – விரும்பாதார்

      வாழுமிடம் சேராதே

           வாழ்ந்திடவும் எண்ணாதே!   (1)

 

ஒழுக்கமிலா உறவினரை – உதறிவிடின்

      ஒப்பற்ற நன்மையுண்டே எப்போதும்;

வழுவில்லா நூல்களையே – கற்றிடுவாய்

      வாழ்வினில் நன்மை சூழ்ந்திடுமே;

இழுக்கில்லா தொழில்போற்று – நாளும்

      இன்பமே வாழ்விலேது துன்பமே;

வழுவில்லா நல்லோர் – ஊரில்

      வாழுமிடம் சேர்ந்துவிடு

           வளமதுவும் பெற்றுவிடு!           (2)

-------------------------------

Saturday, 18 April 2026

கற்றோர் அவையில் கல்லாதவனுக்குத் துன்பமே!

 

கற்றோர் அவையில் கல்லாதவனுக்குத் துன்பமே!

--- அன்பு ஜெயா

(பா வகை:  காவடிச் சிந்து)

 

கல்வியின்றி நல்லறிவு மில்லை – குதிரைக்கும்

கல்லானைச் சுமத்தல் தொல்லை – என்றும்

       கல்வியில்லான் சொல்லின்னல்

       கல்வியின்றேல் வாழ்விலின்னல்

கல்வியே - உயர்த்தும் – உலகையே!            (1)

 

செல்வம் இல்லான் சொல்லும் – துன்பமே

செல்வம் உள்ளான்சொல் வெல்லும் – அவையில்

       கல்லான்சொல் துன்பமே

       கல்விதான் வெல்லுமே

கற்போம் – வாழ்வில் – உயர்வோம்!            (2)

--------------------------

வான் சிறப்பு

 

வான் சிறப்பு

--- அன்பு ஜெயா

பா வகை: இன்னிசைக் கட்டளை வெண்பா

 

வான்பார்த்தே வாழ்வோர்தம் வாழ்வினிலே எப்போதும்

தேன்போலப் பாய்ந்திடவே தென்மேற்கில் தோன்றியே

வான்பிளந்துப் பெய்துமே வாழ்விக்கும் தேன்மழை

நான்வணங்கி நிற்பேன் நனைந்து.

 

வான்பொய்த்தால் மக்கள்தம் வாழ்வும்தான் பொய்த்திடுமே

நான்வணங்கும் நல்லிறை நம்மையும் காத்திடும்

வான்திறக்கும் நன்றாக வாழ்வும் சிறக்குமே

வான்மீதில் நம்பிக்கை வை.

 

உலகத்தை வாழ்விக்கும் உன்னையென்னை எல்லாம்

பலகாலம் காத்தும் பயன்தருமே வானம்

இனிதான வாழ்வில் இறையருளை நம்பி

இனிமேலும் வாழ்தல் இனிது.

--------------------------------

அன்னையின் பாலமுது

 

அன்னையின் பாலமுது 

--– அன்பு ஜெயா

 

பா வகை: ஆசிரியத் துறை

(ஈற்றயலடிக் குறைந்து நான்கடியாய் வந்த ஆசிரியத் துறை)

 

இன்றைய உலகில் எம்மை ஈன்ற

அன்னையும் அன்புடன் அளித்தப் பால்தான்

என்றும் வாழ்வினில் எம்மையும்

நன்றாய்க் காத்து நலமுடன் வைக்குதே!

 

வள்ளுவர் அளித்த வான்புகழ் முப்பால்

தெள்ளியக் கருத்தைத் தேனாய்த் தருமே!

அள்ளி யணைத்தே அன்னையும்

வெள்ளமாய்த் தந்தபால் வீறுமே அளிக்குமே!

 

உன்னைக் காக்கவே உலகில் வாழ்பவள்

அன்னையே என்பதில் ஐயமும் உண்டோ

அன்னையின் பாலுமே அமுதமே

அன்னை அளித்தபால் ஆயுளை நீட்டுமே!

-------------------------