Pages

Sunday, 17 January 2016

கம்பனின் உவமைகள் 15 - திருமால் தோன்றும் காட்சி

கம்பனின் உவமைகளில் சில துளிகள் -15 

திருமால் தோன்றும் காட்சி 

--- அன்பு ஜெயா, சிட்னி


அயோத்தி மன்னனின் சிறப்பைப் பற்றிக் கூறிய கம்பரிடம், “ஐயா, அயோத்தி நகரைப் பற்றியும், மக்களைப் பற்றியும் மன்னனைப் பற்றியும் கூறினீர்கள். கதையின் நாயகனாக உதித்த நம்ம திருமாலைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன் என்று கேட்டேன். “சரி வா, தேவர்களெல்லாம் திருமாலின் வரவிற்காகக் காத்திருக்கிறார்கள். அவர் தோன்றுகின்ற காட்சியை உனக்குச் சொல்லுகிறேன்”, என்று கூறி, அந்தக் காட்சியை விவரித்தார் கம்பர்.

அந்தக் காட்சியை நீங்களும் காணுங்கள்.




“கருமையான நீலமேகத்தினில் செந்தாமரை மலர்க்கூட்டம்  மலர்ந்துள்ளது போன்ற தோற்றத்துடன், நீண்ட இரு சுடர்களை தன் இரண்டு பக்கங்களிலும் ஏந்திக்கொண்டு, தாமரை மலரால் தாங்கப்பட்டுள்ள இலக்குமி அம்மையுடன் திருமால் ஒரு செம்பொன் மலைமீது ஏறி வருவதுபோல, கருடாழ்வாரின்மேல் ஏறிக்கொண்டுவந்து காட்சி அளித்தார்.

கம்பனின் அந்தப் பாடல்:

கரு முகில் தாமரைக் காடு பூத்து, நீடு
இரு சுடர் இரு புறத்து ஏந்தி, ஏந்து அலர்த் 
திருவொடும் பொலிய, ஓர் செம்பொன் குன்றின்மேல்
வருவதுபோல், கழலுன்மேல் வந்து தோன்றினான்.


(பாலகாண்டம், திருவவதாரப் படலம் பாடல் 12)

இந்தப் பாடலில், நீலமேகமானது திருமாலுக்கும், தாமரை மலர்க் கூட்டமானது கை, கால், கண், வாய் போன்ற திருமாலின் அங்கங்களுக்கும், இரு சுடர்கள் சங்கு சக்கரங்களுக்கும், செம்பொன் குன்று கருடனுக்கும் உவமையாகச் சித்தரிக்கின்றார் கம்பர்.

* இரு சுடர் என்பதை சூரிய சந்திரராகவும் சில உரையாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். விஷ்வவீரட் சொரூபத்தில் இரண்டு பக்கங்களில் சூரிய சந்திரரைக் காணலாம்.

(உவமைகள் தொடரும்)


2 comments:

  1. அருமை ஐயா..நீண்ட நாட்களுக்குப் பின் உவமை வந்துள்ளது. தொடரவும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம். தங்கள் கருத்துக்கு நன்றி. பயணங்கள், மற்றும் வேறு சில வேலைகளினால் தொடர இயலாமல் காலதாமதமாகிவிட்டது. அவசியம் தொடருவேன்.

      Delete

உங்கள் கருத்துக்கள்: