Pages

Showing posts with label கம்பன். Show all posts
Showing posts with label கம்பன். Show all posts

Sunday, 17 January 2016

கம்பனின் உவமைகள் 15 - திருமால் தோன்றும் காட்சி

கம்பனின் உவமைகளில் சில துளிகள் -15 

திருமால் தோன்றும் காட்சி 

--- அன்பு ஜெயா, சிட்னி


அயோத்தி மன்னனின் சிறப்பைப் பற்றிக் கூறிய கம்பரிடம், “ஐயா, அயோத்தி நகரைப் பற்றியும், மக்களைப் பற்றியும் மன்னனைப் பற்றியும் கூறினீர்கள். கதையின் நாயகனாக உதித்த நம்ம திருமாலைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன் என்று கேட்டேன். “சரி வா, தேவர்களெல்லாம் திருமாலின் வரவிற்காகக் காத்திருக்கிறார்கள். அவர் தோன்றுகின்ற காட்சியை உனக்குச் சொல்லுகிறேன்”, என்று கூறி, அந்தக் காட்சியை விவரித்தார் கம்பர்.

அந்தக் காட்சியை நீங்களும் காணுங்கள்.




“கருமையான நீலமேகத்தினில் செந்தாமரை மலர்க்கூட்டம்  மலர்ந்துள்ளது போன்ற தோற்றத்துடன், நீண்ட இரு சுடர்களை தன் இரண்டு பக்கங்களிலும் ஏந்திக்கொண்டு, தாமரை மலரால் தாங்கப்பட்டுள்ள இலக்குமி அம்மையுடன் திருமால் ஒரு செம்பொன் மலைமீது ஏறி வருவதுபோல, கருடாழ்வாரின்மேல் ஏறிக்கொண்டுவந்து காட்சி அளித்தார்”.

கம்பனின் அந்தப் பாடல்:

கரு முகில் தாமரைக் காடு பூத்து, நீடு
இரு சுடர் இரு புறத்து ஏந்தி, ஏந்து அலர்த் 
திருவொடும் பொலிய, ஓர் செம்பொன் குன்றின்மேல்
வருவதுபோல், கழலுன்மேல் வந்து தோன்றினான்.


(பாலகாண்டம், திருவவதாரப் படலம் பாடல் 12)

இந்தப் பாடலில், நீலமேகமானது திருமாலுக்கும், தாமரை மலர்க் கூட்டமானது கை, கால், கண், வாய் போன்ற திருமாலின் அங்கங்களுக்கும், இரு சுடர்கள் சங்கு சக்கரங்களுக்கும், செம்பொன் குன்று கருடனுக்கும் உவமையாகச் சித்தரிக்கின்றார் கம்பர்.

* இரு சுடர் என்பதை சூரிய சந்திரராகவும் சில உரையாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். விஷ்வவீரட் சொரூபத்தில் இரண்டு பக்கங்களில் சூரிய சந்திரரைக் காணலாம்.

(உவமைகள் தொடரும்)


Wednesday, 27 August 2014

கம்பனின் உவமைகள் 14 - அயோத்தி மன்னனின் சிறப்பு

கம்பனின் உவமைகளில் சில துளிகள் -14 

அயோத்தி மன்னனின் சிறப்பு
--- அன்பு ஜெயா, சிட்னி
   
அயோத்தி வாழ் மங்கையர், மக்கள் இவர்களின் சிறப்பைக் கூறிய கம்பனிடம், ‘ஐயா கவிச்சக்ரவர்த்தி, அந்த நாட்டில் வாழ்கின்ற குடிமக்களின் சிறப்பையெல்லாம் கூறினீர்கள்.  அவர்கள் அனைவரும் சிறப்புப் பெற்று இருக்கின்றார்களென்றால் அந்நாட்டை ஆளுகின்ற மன்னனும் நிச்சயம் சிறப்புடையவனாகத்தானே இருக்கவேண்டும். அவனுடைய சிறப்பைப் பற்றியும் கொஞ்சம் கூறுங்களேன்,’ என்று கேட்டேன். அதற்குக் கவிச்சக்ரவர்த்தி தன்னுடைய பாணியில் உவமைகளுடன் கூறிய மறுமொழி என்னவென்று பார்க்கலாம்.




படம்: வரைந்து அதை கூகுளில் வெளியிட்டவருக்கு நன்றி.


“ஒரு தாய் எவ்வாறு தன் பிள்ளைகள் அனைவரிடமும் வேறுபாடின்றி அன்பு பாராட்டி அரவணைத்துக் காப்பாளோ அதுபோல அயோத்தியை ஆண்ட  தசரதச் சக்கரவர்த்தியும் தன் மக்களைப் பாகுபாடின்றி அரவணைத்துக் காப்பாற்றுகின்றான். அதனால் அவன் ஒரு தாயைப் போன்றவன். தவம் என்பது அதைச் செய்பவனுக்கு எப்படி வேண்டிய நன்மைகளைத் தருகின்றதோ அதுபோலத் தசரதன் மக்களுக்கு வேண்டிய நன்மைகளைப் புரிவதால் தவத்திற்கு ஒப்பானவன்.  பிள்ளை ஒருவன் தான் செய்யும் இறுதிச் சடங்குகளின் மூலம்  தன் தாய்தந்தையரை உயர்கதி பெறச் செய்கின்றன். அதுபோல, இம்மன்னன் நாட்டில் தீய செயல்களை ஒழித்து நல்ல செயல்கள் பெருக உதவுகின்றான்.  அதானால் அவன் ஒரு பிள்ளைக்கு ஒப்பானவன்.  மருந்து எப்படி ஒரு நோயைப் போக்குகின்றதோ அதேபோலத் தன் மக்களுக்குத் தீங்கிழைக்கும் தீயசக்திகளை மன்னன் விரைந்து அழித்து மக்களைக் காப்பாற்றுவதால் அவன் மருந்துக்கு ஒப்பானவன்.  அறிவு என்பது நுட்பமான பொருளைக்காண முற்படுவது.  தசரதச் சக்ரவர்த்தியும்  நுட்பமான நூல்களின் பொருளினை ஆராய்ந்தறிய முற்படுபவன். அதனல் அவன் அறிவுக்கு ஒப்பனாவன்,” என்று கவிச்சக்ரவர்த்தி கூறினார்.

கம்பனின் அந்தப் பாடல்:

தாய் ஒக்கும் அன்பின்; தவம் ஒக்கும் நலம் பயப்பின்;
சேய் ஒக்கும். முன் நின்று ஒரு செல் கதி உய்க்கும் நீரால்;
நோய் ஒக்கும் என்னின் மருந்து ஒக்கும்; நுணங்கு கேள்வி
ஆயப் புகுங்கால், அறிவு ஒக்கும்; எவர்க்கும், அன்னான்.

    (பாலகாண்டம், அரசியற்படலம் பாடல்  4, நூல் பாடல் – 172.)


இந்தப் பாடலில் தசரதச் சக்கரவர்த்தியைக் கவிச்சக்ரவர்த்தி ஒரு தாயுக்கும், பிள்ளைக்கும், மருந்திற்கும், அறிவிற்கும் ஒப்பிட்டு அயோத்தி மன்னனின் சிறப்பை வெளிப்படுத்துகின்றார்.

(உவமைகள் தொடரும்)


Sunday, 20 July 2014

கம்பனின் உவமைகள் 13 - அயோத்தி மக்களின் கல்விச்சிறப்பு

கம்பனின் உவமைகளில் சில துளிகள் – 13

அயோத்தி மக்களின் கல்விச்சிறப்பு 
    - அன்பு ஜெயா, சிட்னி

அயோத்தி மாநகர் வாழ் மங்கையரின் சிறப்பைக் கூறிய கம்பனிடம், அங்குள்ள மங்கையர் மட்டும்தான் சிறப்புடையவர்களா கம்ப நாடரே என்று கேட்டேன். அதற்குக் கம்பன், அயோத்தி வாழ் மக்கள் அனைவரும் சிறப்பு வாய்ந்தவர்கள்தான். ஏன், அம்மாநகரமும்கூடச் சிறப்பு வாய்ந்ததுதான் என்று விளக்கினான். கம்பன் என்ன சொன்னான் என்று கேளுங்களேன்.



அயோத்தி மாநகர், ஒரு விதை முளைத்துப் பூமியிலிருந்து மேலே எழுந்து வருவதைப்போல, கல்வியில் மேலோங்கி வளர்ந்து இருந்ததாம். மரத்தில் வலிமையான கிளைகள் வளர்ந்து பரவுவதுபோல மக்களிடம் எண்ணற்ற நூல்களின் கேள்வி அறிவு பெருகி வளர்ந்ததாம்.  அந்தக் கிளைகளில் இலைகள் தழைத்து வளருவதைப்போல கல்வியின் பயனால் மக்களிடம் நல்ல குணங்கள் நிறைந்து இருந்தனவாம். அவ்வாறு வளருகின்ற மரக்கிளைகளில் அரும்புகள் அரும்புவதுபோல எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்தும் குணம் அயோத்தி மக்களிடம் அதிகமாகக் காணப்பட்டதாம். அந்த அரும்புகள் மலர்வதுபோல், அயோத்தியில் அறச்செயல்கள் பெருக ஆரப்பித்தனவாம். அச்சிறப்புகள் அனைத்தும் அங்கே இருந்ததால், பழங்கள் பழுத்து செழிப்பதாப்போல அயோத்தி மக்களிடம் போகம் என்னும் இன்ப அனுபவம் பெருகி, அயோத்தி நகர் ஒரு பழுத்த மரத்தைப்போல சிறந்து விளங்கியது என்று கம்பன் விளக்கிக் கூறினான்.

கம்பனின் அந்தப் பாடல்:

ஏகம் முதல் கல்வி முளைத்து எழுந்து, எண் இல் கேள்வி
ஆகும் முதல் திண் பணை போக்கி, அருந் தவத்தின்
சாகம் தழைத்து, அன்பு அரும்பி, தருமம் மலர்ந்து,
போகங் கனி ஒன்று பழுத்தது போலும் அன்றே.

        (பாலகாண்டம், நகரப் படலம் பாடல் 75, நூல்பாடல் - 168)

(ஏகம் முதல் – ஒரு வித்து; பணை – கிளை; சாகம் – இலைகள்; போகம் – இன்பம், நில அனுபவம்)

இந்தப் பாடலில் கம்பன் கல்வியை ஒரு விதைக்கும், கேள்வி அறிவைக் கிளைகளுக்கும், நல்ல குணங்களை இலைகளுக்கும், அன்பை அரும்புக்கும், அறச்செயல்களை மலருக்கும், இன்ப அனுபவத்தைப் பழத்துக்கும் ஒப்பிட்டுக் கூறுகின்றான்.

கல்வியால் அடக்கம்வருகிறது. அடக்கத்தால் நல்வாழ்வு கிடைக்கிறது. அவ்வாழ்வில் நல்ல வழிகளில் பொருள் சேருகிறது. அப்பொருளால் தருமம் செய்ய முடிகிறது. அந்த தருமத்தால் போகம் என்னும் இன்ப அனுபவம் கிடைக்கிறது என்று இப்பாடலுக்குப் பொருள் கூறுகிறார்கள் உரையாசிரியர்கள்.

கொசுறு 1: பூவின் 6 பருவங்கள்/நிலைகள் – அரும்பு, முகை, போது, மலர், வீ, செம்மல்.
கொசுறு 2: எட்டு வகையான போகங்கள்: பெண், ஆடை, அணிகலன், உணவு, தாம்பூலம், நறுமணப்பொருள், பாட்டு, பூம்படுக்கை.

                              (உவமைகள் தொடரும்)

Saturday, 5 July 2014

கம்பனின் உவமைகள் - 12 : அயோத்தி மாநகர் வாழ் மங்கையர்

கம்பனின் உவமைகளில் சில துளிகள் - 12

அயோத்தி மாநகர் வாழ் மங்கையர்
                     - அன்பு ஜெயா, சிட்னி

அயோத்தியின் அழகை வருணித்த கம்பன், இப்போது அங்கு வாழ்கின்ற மங்கையர் பற்றி ஏதோ சொல்வதற்கு அழைக்கிறான். வாருங்கள் கேட்போம்.

அயோத்தியில் வாழும் பெண்களை மூன்று வகைப்படுத்திக் கூறுகிறான் கம்பன். பருவம் நிரம்பாத பெண்கள், பருவ மங்கையர் மற்றும் பருவம் முதிர்ந்த மங்கையர்.



கூந்தலை வாரி முடிக்கக்கூட முடியாத இளம் பெண்களின் குதலைச் சொற்கள் புல்லாங்குழலில் இருந்து வருகின்ற இனிய இசையைப் போல இருக்குமாம்.

மங்கைப் பருவத்து மகளிரது மழலைச் சொற்கள் மகர யாழின் கீதத்தை ஒத்திருக்குமாம் (கம்பா, பருவ மங்கையிரின் சொற்கள் மழலையா – சரியான ஆளப்பா நீ!!!).

பருவம் முதிர்ந்த மகளிரது இனிய சொற்களாகிய இன்னிசை, கள் விற்பவர்களின் சேரியிலே பாடுகின்ற கூத்தர்களின் பாட்டின் இசையை ஒத்திருக்குமாம்.

கம்பனின் அந்தப் பாடல்:

குழல் இசை மடந்தையர் குதலை, கோதையர்
மழலை, அம் குழல் இசை; மகர யாழ் இசை,
எழில் இசை மடந்தையர் இன்சொல் இன் இசை
பழையர்தம் சேரியில் பொருநர் பாட்டு இசை.

           (பாலகாண்டம், நகரப் படலம், பாடல் - 136)

 
பெண்களின் பருவங்களான பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்ற ஏழு பருவங்களையும் மூன்றினுள் அடக்கிவிட்டான் கம்பன். ஒரு வேளை அவற்றிற்கான உவமைகள் அவனுக்குக் கிடைக்கவில்லையோ?! அவன் திறமையே திறமைதான்.

     (உவமைகள் தொடரும்)


Sunday, 11 May 2014

கம்பனின் உவமைகள் - 8 : நடை பயிலும் அன்னங்கள்

கம்பனின் உவமைகளில் சில துளிகள் - 8

 நடை பயிலும் அன்னங்கள் 
                           -    அன்பு ஜெயா, சிட்னி

கோசல நாட்டின் மருத நிலத்தில் கம்பன் காட்டிய மற்றொரு காட்சியைக் காணலாம் வாருங்கள்.

அம்மருத நிலத்து வயல்களிலே தங்களுடைய இளம் குஞ்சுகளை உறங்குவதற்காகப் படுக்க வைத்துவிட்டு அன்னப் பறவைகளெல்லாம் அழகாக நடப்பதற்குப் பயிற்சி எடுத்துக் கொள்வதற்காக எங்கோ செல்கின்றன. ஆமாம், அன்னத்தைத் தானே அழகான நடைக்கு உதாரணமாக நம் கவிஞர்களெல்லாம் கூறுவார்கள். அப்படியிருக்க யாரிடம்தான் அந்த அன்னங்களே நடையைக் கற்றுக்கொள்ளத், தங்கள் குச்சுகளைக்கூட விட்டு விட்டுச், செல்கின்றன?! பார்க்கலாம், கம்பன் எங்கேதான் அழைத்துச் செல்கின்றான் என்று!

அந்த அன்னப் பறவைகள் தங்கள் குச்சுகள் தூங்குவதற்காக எங்கே படுக்க வைத்தன தெரியுமா? தாமரை மலர்களான படுக்கையின் மீது கிடத்தினவாம்! தாய்மாரெல்லாம் அங்கில்லாத நேரத்தில் பிள்ளைகளுக்குப் பசியெடுத்தால் என்ன செய்யுமாம்? அந்த வயல்களிலே மேய்ந்து கொண்டிருக்கின்ற எருமை மாடுகள் வீட்டிலே கட்டி வைத்திருக்கின்ற தங்கள் கன்றுகளை நினைத்தனவாம். அப்படி நினைக்கும்போது அவை கனைத்தன. அந்த அழுத்தத்தில் கனத்த அவற்றின் மடியிலிருந்து தானாகப் பால் சொரிந்ததாம். அந்தப் பாலை அன்னக் குஞ்சுகள் பருகுகின்றன என்று கம்பன் கூறுகின்றான். 

இப்போது குஞ்சுகளுக்குப் பசி நீங்கிவிட்டது. அப்போது அங்கே உள்ள பச்சைத் தவளைகள் ஓசை எழுப்புகின்றன, அந்த ஓசை அன்னக் குஞ்சுகளுக்குத் தாலாட்டாக இருக்கவே அவை அயர்ந்து தூங்குகின்றனவாம். ஆமாம், இந்தக் குச்சுகளை இங்கே விட்டு விட்டுச் சென்ற அன்னப் பறவைகள் எங்கே சென்றன? மீன் போன்ற கண்களை உடைய மருத நிலத்துப் பெண்களைப் போல நடை பயிலுகின்ற அன்னப் பறவைகள் என்று கம்பன் தன் பாடலில் கூறுகின்றான். அதனால் அழகிய இம்மருத நிலத்துப் பெண்கள் எப்படி நடக்கிறார்கள் என்று பார்த்துத் தாமும் அப்படி அழகாக நடப்பதற்குக் கற்றுக்கொள்வதற்காகச் சென்றிருக்கின்றன போலும்!

கம்பனின் அந்தப் பாடல் :

சேல் உண்ட ஒண் கணாரின் திரிகின்ற செங் கால் அன்னம்,
மால் உண்ட நளினப் பள்ளி, வளர்த்திய மழலைப் பிள்ளை,
கால் உண்ட சேற்று மேதி கன்றுஉள்ளிக் கனைப்ப சோர்ந்த
பால் உண்டு, துயிலப், பச்சைத் தேரை தாலாட்டும் – பண்ணை.
(பாலகாண்டம், நாட்டுப்படலம், 45)

இந்தப் பாடலில் தாமரை மலர்களைப் படுக்கைக்கும், பச்சைத் தவளைகளின் சத்தத்தைத் தாலாட்டுக்கும் உவமையாக்கித்; தாய்மையின் கனிவான தன்மை விலங்குகளுக்கும் உண்டு என்பதைக் கன்றை நினைத்ததும் தன் மடியிலிருந்து தானாகப் பாலைச் சுரக்கும் எருமை வழி நமக்கெல்லாம் காண்பிக்கின்றான் கம்ப நாட்டான்.

முன்னொரு பாட்டில், மயில்களின் நாட்டியத்தைக் காண்பித்த கம்பன் இந்தப் பாடலில் தவளைகளின் தாலாட்டை நம்மைக் கேட்க வைத்திருக்கின்றான். இந்த மருத நிலத்தில் இன்னும் என்னென்ன காட்சிகளை நமக்குக் காண்பிக்கப் போகிறானோ. அவனைத் தொடர்ந்து செல்லுவோம் வாருங்கள்.


(உவமைகள் தொடரும்)

Saturday, 3 May 2014

கம்பனின் உவமைகள் -7 : களையெடுக்கா உழவர்கள்

கம்பனின் உவமைகளில் சில துளிகள் – 7

- களையெடுக்கா உழவர்கள் -
-    அன்பு ஜெயா, சிட்னி

கோசல நாட்டின் மருத நிலச் சோலையிலே நடந்த காட்சிகளைக் கண்டுகளித்தோம். அவ்வாறு இயற்கை பொங்கும் அந்த நாட்டில் வேறு என்னவெல்லாம் நடக்கின்றது என்று தெரிந்துகொள்ள ஆவல் மிகுந்ததால் கம்பனைக் கேட்டேன். அவன் எனக்குக் காட்டிய காட்சியைக் காணலாம் வாருங்கள்.

கோசல நாட்டில் வாழ்கின்ற சில உழவர்கள் தங்கள் வயல்களில் வளர்ந்துள்ள களைகளை நீக்க வேண்டுமென்று முடிவு செய்கிறார்கள். போகின்ற வழியிலே கள் அருந்திவிட்டு தங்கள் நிலங்களுக்குச் செல்கிறார்கள். அங்கே குவளை, தாமரை, ஆம்பல் போன்ற மலர்கள் மட்டுமே களைகளாக உள்ளன. வேறு களைகளைக் காண முடியவில்லை. குடித்த கள் வாயோரங்களில் சற்று ஒழுகிபடி இருக்க, அக்களைகளை நீக்காமல், கள்ளுண்ட மயக்கத்தில், இங்குமங்குமாக உலாவிக் கொண்டிருக்கிறார்கள். வந்த வேளையைப் பார்க்காமல் ஏன் இப்படி உலாவிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு என்ன காரணம்? நம் கம்ப நாட்டான் சொல்கிறான், அந்த உழவர்களின் கண்களுக்கு அங்குள்ளக் களைகள் எல்லாம் இனிமையாகப் பேசுகின்ற, தங்கள் அன்பிற்குப் பாத்திரமான உழவ மகளிரின் உடல் உறுப்புக்களைப் போல உள்ளனவாம். அது எப்படி?

குவளை மலர்கள் அப்பெண்டிரின் கண்கள் போலவும், தாமரை அவர்களின் கை, கால், முகங்கள் போலவும், ஆம்பல் மலர்கள் அப்பெண்டிரின் வாய்கள் போலவும் காட்சி அளிக்கின்றன. அதனால் அவற்றைக் களைவதற்கு மனது வராமல் அங்குமிங்கும் உலாவிக் கொண்டிருக்கின்றனராம். இது எப்படி இருக்கின்றதென்றால், அற்ப அறிவுடையவர்கள் தவறான பெண்களின் காம வலையில் சிக்கிவிட்டால், அப்பெண்களை விட்டு விலக வேண்டிய நேரத்தில் கூட விலக முடியாமல் துன்பப்படுவார்கள் என்று ஓர் அறிவுரையையும் அங்கே தன் பாடலில் வைக்கிறான் கம்பன்!

கம்பனின் அந்தப் பாடல் :

பண்கள் வாய் மிழற்றும் இன்
சொல் கடைசியர் பரந்து நீண்ட
கண், கை, கால், முகம், வாய் ஒக்கும்
களை அலால் களை இலாமை,
உண் கள் வார் கடைவாய் மள்ளர்,
களைகலாது உலாவி நிற்பர்;-
பெண்கள்பால் வைத்த நேயம்
பிழைப்பாரோ, சிறியோர் பெற்றால்?
                   (பாலகாண்டம், நாட்டுப்படலம், 42)

கள் குடித்தால் உருப்பட மாட்டாய் என்று நேரடியாகச் சொல்லாமல்  அதற்கு உவமைகளைக் கூறிச் சொல்வதில் கம்பனை விஞ்சமுடியுமா?


(உவமைகள் தொடரும்.)

Monday, 28 April 2014

கம்பனின் உவமைகள் - 6 : மருதம் என்னும் மாது

கம்பனின் உவமைகளில் சில துளிகள் - 6

மருதம் என்னும் மாது
-    அன்பு ஜெயா, சிட்னி


இதுவரை சரயு நதியோடு மிதந்து வந்த நாம் இப்போது கோசல நாட்டின் மருத நிலத்திற்குள் நுழைகின்றோம். கம்பன் நம்மைக் கைபிடித்து அழைத்துச் செல்லுவான், நாம் அந்த மருத நிலத்தின் அழகைச் சற்றுச் சுவைக்கலாம் வாருங்கள்.

அதோ அங்கே மருத நிலத்தில் தெரிகின்ற சோலை நடன மேடையாகக் காட்சியளிக்கின்றது. அதன் மீது வண்ண மயில்கள் அழகான நாட்டியப் பெண்களைப் போல நாட்டியம் ஆடிக்கொண்டிருக்கின்றன. அந்தச் சோலையின் குளத்திலே உள்ள நீரின் மீது வீசுகின்ற குளிர்ந்த காற்றினால் உண்டாகின்ற சீரான அலைகள் திரைச்சீலையாக விளங்குகின்றன. அக்குளத்தில் மலர்ந்திருக்கின்ற தாமரை மலர்கள், அந்த நாட்டிய நிகழ்ச்சியைக் கண்டு களிப்பவர்களுக்காக தங்கள் தலைகளைத் தூக்கி விளக்குகளாகத் தோன்றுகின்றன.

அங்கே மத்தள ஓசையும் கேட்கின்றதே! அது எங்கேயிருந்து வருகின்றது?

ஓ.... மேகக் கூட்டங்கள் இக்காட்சியைக் காண்பதற்காகத் தங்களுக்குள் போட்டி போட்டுக்கொண்டு வரும்பொழுது, ஒன்றோடு ஒன்று இடித்துக்கொண்டு, மத்தள ஓசையை எழுப்புகின்றனவோ?

அச்சோலையிலே உள்ள மலர்களில் மொய்க்கின்ற வண்டுகள் மகர யாழின் இசையைப் போல ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கின்றன. அங்கே வளரும் குவளைக் கொடிகளில் உள்ள குவளை மலர்கள் தங்கள் கண்களை அகல விரித்து அந்த நாட்டிய நிகழ்ச்சியைக் கண்டு ரசித்துக் கொண்டிருக்கின்றன. இதுபோன்ற அழகியக் காட்சிகளை இவ்வுலகிற்குக் காட்டிக் கொண்டு ‘மருதம்’ என்ற நாயகி பெருமிதத்துடன் அங்கே வீற்றிருக்கின்றாள். என்னே அந்த மருதநிலத்தின் அழகு!

கம்பனின் அந்தப் பாடல் :

தண்டலை மயில்கள் ஆட, தாமரை விளக்கம் தாங்க,
கொண்டல்கள் முழவின் ஏங்க, குவளை கண் விழித்து நோக்க,
தெண் திரை எழினி காட்ட, தேம் பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட, - மருதம் வீற்றிருக்கும் மாதோ.

   (பாலகாண்டம், நாட்டுப் படலம், 36)

இந்தப் பாடலிலே, மருத நிலத்திலே உள்ள சோலையை நாட்டிய மேடையாகவும், மயில்களை நடன மாதர்களாகவும், குளங்களில் உண்டாகும் அலைகளைத் திரைச்சீலையாகவும், தாமரை மலர்களை விளக்குகளாகவும், மேகக் கூட்டங்களை மத்தளங்களாகவும், வண்டுகளின் ரீங்காரத்தை மகர யாழின் இசையாகவும், குவளை மலர்களை இக்காட்சிகளை யெல்லாம் கண்டுகளிக்கின்ற பார்வையாளர்களாகவும் சித்தரித்து மருத நிலத்தின் சிறப்பைக் கம்பன் நம் கண் முன்னே கொண்டுவந்து நிறுத்துகின்றான்.


(உவமைகள் தொடரும்)