கம்பனின்
உவமைகளில் சில துளிகள் - 8
நடை பயிலும் அன்னங்கள்
- அன்பு ஜெயா, சிட்னி
கோசல
நாட்டின் மருத நிலத்தில் கம்பன் காட்டிய மற்றொரு காட்சியைக் காணலாம் வாருங்கள்.
அம்மருத நிலத்து வயல்களிலே தங்களுடைய இளம் குஞ்சுகளை
உறங்குவதற்காகப் படுக்க வைத்துவிட்டு அன்னப் பறவைகளெல்லாம் அழகாக நடப்பதற்குப்
பயிற்சி எடுத்துக் கொள்வதற்காக எங்கோ செல்கின்றன. ஆமாம்,
அன்னத்தைத் தானே அழகான நடைக்கு உதாரணமாக நம் கவிஞர்களெல்லாம் கூறுவார்கள். அப்படியிருக்க
யாரிடம்தான் அந்த அன்னங்களே நடையைக் கற்றுக்கொள்ளத், தங்கள்
குச்சுகளைக்கூட விட்டு விட்டுச், செல்கின்றன?! பார்க்கலாம், கம்பன் எங்கேதான் அழைத்துச் செல்கின்றான் என்று!
அந்த அன்னப் பறவைகள் தங்கள் குச்சுகள்
தூங்குவதற்காக எங்கே படுக்க வைத்தன தெரியுமா? தாமரை
மலர்களான படுக்கையின் மீது கிடத்தினவாம்!
தாய்மாரெல்லாம் அங்கில்லாத நேரத்தில் பிள்ளைகளுக்குப் பசியெடுத்தால் என்ன
செய்யுமாம்? அந்த வயல்களிலே மேய்ந்து கொண்டிருக்கின்ற எருமை மாடுகள் வீட்டிலே
கட்டி வைத்திருக்கின்ற தங்கள் கன்றுகளை நினைத்தனவாம். அப்படி நினைக்கும்போது அவை
கனைத்தன. அந்த அழுத்தத்தில் கனத்த அவற்றின் மடியிலிருந்து தானாகப் பால் சொரிந்ததாம்.
அந்தப் பாலை அன்னக் குஞ்சுகள் பருகுகின்றன என்று கம்பன் கூறுகின்றான்.
இப்போது குஞ்சுகளுக்குப்
பசி நீங்கிவிட்டது. அப்போது அங்கே உள்ள பச்சைத் தவளைகள் ஓசை எழுப்புகின்றன, அந்த
ஓசை அன்னக் குஞ்சுகளுக்குத் தாலாட்டாக இருக்கவே அவை அயர்ந்து தூங்குகின்றனவாம்.
ஆமாம், இந்தக் குச்சுகளை இங்கே விட்டு விட்டுச் சென்ற அன்னப் பறவைகள் எங்கே
சென்றன? மீன் போன்ற கண்களை உடைய மருத நிலத்துப் பெண்களைப் போல நடை பயிலுகின்ற அன்னப் பறவைகள் என்று கம்பன்
தன் பாடலில் கூறுகின்றான். அதனால் அழகிய இம்மருத நிலத்துப் பெண்கள் எப்படி நடக்கிறார்கள் என்று பார்த்துத்
தாமும் அப்படி அழகாக
நடப்பதற்குக் கற்றுக்கொள்வதற்காகச் சென்றிருக்கின்றன
போலும்!
கம்பனின்
அந்தப் பாடல் :
சேல் உண்ட ஒண் கணாரின் திரிகின்ற செங் கால் அன்னம்,
மால்
உண்ட நளினப் பள்ளி, வளர்த்திய மழலைப் பிள்ளை,
கால்
உண்ட சேற்று மேதி கன்றுஉள்ளிக் கனைப்ப சோர்ந்த
பால்
உண்டு, துயிலப், பச்சைத் தேரை தாலாட்டும் –
பண்ணை.
(பாலகாண்டம், நாட்டுப்படலம், 45)
இந்தப் பாடலில் தாமரை மலர்களைப்
படுக்கைக்கும், பச்சைத் தவளைகளின் சத்தத்தைத் தாலாட்டுக்கும் உவமையாக்கித்;
தாய்மையின் கனிவான தன்மை விலங்குகளுக்கும் உண்டு என்பதைக் கன்றை நினைத்ததும் தன்
மடியிலிருந்து தானாகப் பாலைச் சுரக்கும் எருமை வழி நமக்கெல்லாம் காண்பிக்கின்றான் கம்ப
நாட்டான்.
முன்னொரு பாட்டில்,
மயில்களின் நாட்டியத்தைக் காண்பித்த கம்பன் இந்தப் பாடலில் தவளைகளின் தாலாட்டை நம்மைக்
கேட்க வைத்திருக்கின்றான். இந்த மருத நிலத்தில் இன்னும் என்னென்ன காட்சிகளை
நமக்குக் காண்பிக்கப் போகிறானோ. அவனைத் தொடர்ந்து செல்லுவோம் வாருங்கள்.
(உவமைகள்
தொடரும்)
அப்படியே கம்பன் கேமராவை தூக்கிக்கொண்டு அங்காங்கே ஜூம் செய்து போல் உள்ளது. அருமையான பதிவு...தொடரவும். நாமும் தொடர்வோம்..
ReplyDeleteஊக்கமளிப்பதற்கு நன்றி
Deleteமிக்க சிறப்பாக உள்ளது
ReplyDeleteநன்றி
Deleteமிக்க சிறப்பாக. உள்ளது
ReplyDelete