கம்பனின்
உவமைகளில் சில துளிகள் - 9
மதிலின் மகிமை
- அன்பு
ஜெயா, சிட்னி
கோசல நாட்டு
மருத நிலத்தின் அழகினையும் சிறப்பினையும் நமக்குக் காண்பித்த கம்பன்,
காட்டைப் பார்த்தது போதும் வாருங்கள் நாட்டைப் பார்க்கப் போகலாம் என்று,
அழைக்கின்றான். வாருங்கள் அவனைத் தொடர்வோம்.
அதோ, அங்கே பிரமாண்டமாகத் தெரிகிறதே அது என்ன? ஓ, அயோத்தி
மாநகரின் மதில்தானா அது. கம்ப நாட்டாரே, ‘இவ்வளவு நீளமாக இருக்கிறதே அந்த
மதில் அது எங்கே ஆரம்பித்து எங்கே முடிகிறது, அதனுடைய
சிறப்பு என்ன?’ என்று கேட்டேன். அதற்குக் கம்பன் அந்த மதிலைப்பற்றி விவரித்தான்.
அந்த மதில் எங்கே ஆரம்பிக்கிறது, எங்கே முடிகிறது
என்பது கண்ணுக்குத் தெரியாதபடி பரந்து இருக்கிறது. எப்படி வேதம் பல நுண்ணிய கருத்துக்களைத்
தன்னுள்ளே அடக்கி, மிகப் பரந்து, எல்லை காணமுடியாதபடி இருக்கின்றதோ அதே போல இருக்கிறது. அதனால் அந்த
மதில் வேதத்தை ஒத்து உள்ளது. அந்த மதில் உயரத்தில் விண்ணுலகை எட்டுவதால் தேவர்களை ஒத்து
உள்ளது.
பகைவரை எதிர்கொண்டு தாக்கி அயோத்தி நகரைக் காப்பதற்காக அந்த மதில் தன்
மேற்புரத்தில் பல இயந்திரப் பொறிகளை, வெளியே தெரியாதவாறு, உள்ளடக்கி வைத்திருப்பதால்
புலன்களை அடக்கி வாழும் முனிவர்களை ஒத்து உள்ளது. அது அயோத்தி மக்களைக் காத்து நிற்பதால், காவல் தெய்வமாக
உள்ள துர்க்கையை ஒத்திருக்கிறது. அந்த மதில் சூலம் முதலிய ஆயுதங்களை தன்னிடம் வைத்திருப்பதால்
காளி தேவியை ஒத்துள்ளது. பிற அரசர்களால் அடைய முடியாதபடி இருப்பதால் அது தன் பத்தர்கள்
தவிர மற்றவர்களால் அடைய முடியாத ஈசனை ஒத்திருக்கிறது. இவ்வாறு அந்த மதிலின் பெருமைகளைப்
பல உவமைகளால் அவன் பாடலில் பாராட்டிக் கூறுகின்றான் கம்பன்.
கம்பனின் அந்தப் பாடல்:
“மேவ அரும் உணர்வு முடிவு இலாமையினால்
வேதமும் ஒக்கும்; விண்புகலால்,
தேவரும் ஒக்கும்; முனிவரும் ஒக்கும்,
திண் பொறி அடக்கிய செயலால்;
காவலின், கலை ஊர் கன்னியை ஒக்கும்;
சூலத்தால், காளியை ஒக்கும்;
யாவையும் ஒக்கும், பெருமையால், எய்தற்கு
அருமையால், ஈசனை ஒக்கும்.”
(பாலகாண்டம், நகரப் படலம், பாடல் -101)
நாட்டைப் பார்க்கலாம் வாருங்கள் என்று அழைத்துவந்து நம்மை மதிலிடம் கொண்டுவந்து
நிறுத்திவிட்டான் கம்பன். வேறு என்னவெல்லாம் செய்யப் போகிறான் என்று பொறுத்திருந்து
பார்ப்போம் வாருங்கள்.
(உவமைகள் தொடரும்)
சீனப் பெருஞ்சுவரை மிஞ்சும் மதில் போல் தெரிகிறதே - தெரிய வைத்தமைக்கு மிக்க நன்றி அன்பு ஜெயா
ReplyDeleteசீனப் பெருஞ்சுவருக்கு ஆதியும் அந்தமும் தெரிகிறது. அயோத்தியின் மதிற்சுவருக்கு அது தெரியவில்லையே.அதனால்தான் அங்கே நாம் மலைத்து நிற்கிறோம். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா.
Deleteகணியம் பயிலும் போது RDBMS (Relational Data Base Management System) என்று ஒன்று படித்தோம். அதில் Relations என்பதில் One to Many என்பதும் வரும். ஒரு பாடலில் இத்தனை அடக்கி வாசிக்கும் கம்பனைப் பார்க்கும் போது அந்த One to Many தான் ஞாபகம் வருகிறது.
ReplyDeleteநன்றி அன்பு ஜெயா அவர்களே...தொடரவும்.
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி
Delete
ReplyDeleteவணக்கம்!
கம்பன் உவமைகளில் கண்டு களித்திட்டேன்
உம்மின் பதிவில் உறைந்து
வணக்கம். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. மீண்டும் வாருங்கள்.
Delete