கம்பனின் உவமைகளில் சில துளிகள் – 10
அயோத்தி
மாநகரின் அகழி
- அன்பு ஜெயா, சிட்னி
அயோத்தி மாநகரின் மதிலின்
அருகில் செல்வதற்கு நம்மை
அழைக்கிறான் கம்பன். வாருங்கள்
மதிலின் அருகில் சென்று
பார்ப்போம்.
இதென்ன! இந்த மதிலைச் சுற்றி
இவ்வளவு அகலமான, ஆழமான, தண்ணீர்
உள்ள ஓர் அமைப்பு இருக்கிறதே! பண்டைக்
காலத்தில் கோட்டையின் பாதுகாப்பிற்காக ‘அகழி’ என்று ஒன்றை
அமைப்பார்களே அதுதானா இது!
சற்றுப் பொறுங்கள்
இந்த அகழியைப் பற்றி கம்பன் என்ன
சொல்கிறான் என்று பார்க்கலாம்.
புராணங்களில்
கூறப்பட்டுள்ள, ஏழு தீவுகளையும் சூழ்ந்துள்ள ஏழு கடல்களுக்கும் அப்பால் அவற்றையெல்லாம் சுற்றித்
தன்னுள் அடக்கிச் ‘சக்கரவாள கிரி’ என்னும்
மலை இருக்கின்றது. அந்த மலையைப் போலவே ஓங்கி உயர்ந்துள்ள இந்த அயோத்தி மாநகரின்
மதில் உள்ளதாம். அந்தச் சக்கரவாள கிரியையும்
சுற்றி எப்படி ஒரு பெருங்கடல் உள்ளதோ அதேபோல, அயோத்தி
மாநகரின் மதிலைச் சுற்றி அதனுடைய அகழி அமைந்திருக்கிறதாம். விலைமகள் ஒருத்தியின்
மனம், தன்னிடம் வருவோரின் செல்வம் அனைத்தையும் கவரும் எண்ணத்துடன், எவ்வளவு
கீழ்மையாக இருக்குமோ அதேபோல அந்த அகழியின் ஆழம் உள்ளதாம்.
இழிவான பாடல்கள் போல அகழியின் தண்ணீரும் தெளிவில்லாமல் இருக்கின்றதாம். கம்பன்
காலத்திலும் இப்போது வரும் சில திரைப்படப் பாடல்கள் போலச் சிலர் எழுதியிருப்பார்களோ!
மேலும்
அந்த அகழி, எவரும் நெருங்க இயலாத நற்குல மங்கையரின் கற்பைப் போலப் பாதுகாப்பானதாம். அதுமட்டுமல்ல, ஐம்பொறிகளின் வயப்பட்டுத் தீய நெறியில் செல்லும்
மானிடரின் மனம் போல, அகப்பட்ட பொருளை விரைவாகக் கவ்விக்கொண்டு மற்றவர்களைத் துன்புறுத்தும் முதலைகள் பல இருக்கும் இடமாம் அந்த அகழி.
இவ்வாறு, அந்த அகழியைச் சக்கரவாள
மலையைச் சுற்றியுள்ள பெருங்கடலுக்கும், அதன் ஆழத்தை விலை மகளின் மனத்திற்கும், அதில்
உள்ள கலங்கலான தண்ணீரை தெளிவில்லாத இழிவான பாடலுக்கும்,
அகழியின் பாதுகாக்கும் திறனை நற்குல மகளிரின் கற்பிற்கும், அகழியில்
உறைகின்ற முதலைகளை மானிடரின் ஐம்பொறிகளுக்கும் உவமையாகக் கூறி அயோத்தி மாநகரைச்
சுற்றியுள்ள அகழியின் சிறப்பைக் கம்பன் நமக்கு உணர்த்தியுள்ளான்.
கம்பனின் அந்தப் பாடல்:
அன்ன மா மதிலுக்கு ஆழி மால் வரையை
அலைகடல் சூழ்ந்தன அகழி,
பொன் விலை மகளிர் மனம் எனக் கீழ் போய்,
புன் கவி எனத் தெளிவு இன்றி,
கன்னியர் அல்குல்-தடம் என யார்க்கும்
படிவு அருங் காப்பினது ஆகி,
நல் நெறி விலக்கும் பொறி என எறியும்
கராத்தது;- நவிலலுற்றது நாம்.
அலைகடல் சூழ்ந்தன அகழி,
பொன் விலை மகளிர் மனம் எனக் கீழ் போய்,
புன் கவி எனத் தெளிவு இன்றி,
கன்னியர் அல்குல்-தடம் என யார்க்கும்
படிவு அருங் காப்பினது ஆகி,
நல் நெறி விலக்கும் பொறி என எறியும்
கராத்தது;- நவிலலுற்றது நாம்.
(பாலகாண்டம், நகரப் படலம், பாடல் - 107)
மதிலுக்கு அருகில் போகலாம் என்று நம்மை அழைத்து வந்து அதைச்
சுற்றியுள்ள அகழியைப் படம் பிடித்துக் காட்டிவிட்ட கம்பனின் கவித் திறனை என்னென்று
கூறுவது!
(உவமைகள்
தொடரும்)
கம்பன் காலத்திலும் இப்போது வரும் சில திரைப்படப் பாடல்கள் போலச் சிலர் எழுதியிருப்பார்களோ!
ReplyDeleteஇல்லை. இக்காலத்தவர் பெற்ற இரவலே அது! என்னே உவமை? அதில் என்னே மென்மை!
மிக்க நன்றி ஐயா
Deleteஆழ்ந்து சிந்தித்து ,அகழியைப்போல் தமிழைச் சூழ்ந்து ,கம்பன் பாடலின் கவிநயம் விண்டுவைத்தீர்!நன்றி
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.
Delete”விலைமகள் ஒருத்தியின் மனம், தன்னிடம் வருவோரின் செல்வம் அனைத்தையும் கவரும் எண்ணத்துடன், எவ்வளவு கீழ்மையாக இருக்குமோ ..” இதே போன்று பொருள்படும் நாலடியார் பாடல் உங்கள் பார்வைக்கு...
ReplyDeleteஅங்கண் விசும்பின் அமரர் தொழப்படுஞ்
செங்கண்மா லாயினும் ஆகமன், -
தங்கைக் கொடுப்பதொன் றில்லாரைக்
கொய்தளி ரன்னார் விடுப்பர்தங் கையார் றொழுது.
தாங்கள் பார்வைக்காக அளித்த நாலடியார் பாடலுக்கு மிக்க நன்றி நண்பரே.
Deleteஅடடடா...... !!!!
ReplyDeleteஉங்கள் வருகைக்கு மிக்க நன்றி ஐயா
Deleteவணக்கம்...
ReplyDeleteவலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
கங்காருவின் மடியில் வளரும் வலைப்பூக்கள்
தங்கள் வருகைக்கு நன்றி. தங்களுடைய வலைப்பூவிலிருந்து சில நுணுக்கங்களை என் வலைப்பூ அமைக்கக் கற்றுக்கொண்டேன். அதற்கும் நன்றி. மீண்டும் வருகை தாருங்கள்.
Delete