கம்பனின்
உவமைகளில் சில துளிகள் – 11
அகழியைச்
சூழ்ந்த சோலை
- அன்பு ஜெயா, சிட்னி
அயோத்தி மாநகரின் அகழியை
நமக்கு அறிமுகப் படுத்தும்போது சக்கரவாள மலையைப்பற்றி அறிமுகப்படுத்தினான் கம்ப
நாட்டான். அந்தச் சக்கரவாள மலை இந்தப்
பூமண்டலத்தைச் சுற்றி உள்ளது என்றும், அதைச் சுற்றிப் பெருங்கடலொன்று இருப்பதைப் பற்றியும் அறிந்தோம்.
அந்தப் பெருங்கடலை
அடுத்துப் பேரிருள் சூழ்ந்துள்ளது என்று புராணங்கள் கூறுகின்றனவாம்.
அயோத்தி மாநகரின்
அகழியைச் சுற்றி அடர்ந்த
காடு போன்ற சோலை ஒன்று அமைந்திருப்பதாகக் கூறுகின்றான் கம்பன். அந்தச் சோலையைப் பற்றி அவன்
என்ற கூறுகின்றான் என்று
கேட்போம்.
நீண்டு உயர்ந்த மதிலினால்
சூழப்பட்ட அயோத்தி நகரம்
பூமண்டலத்தை ஒத்து இருக்கின்றதாம். அந்நகரத்தைச் சூழ்ந்திருக்கின்ற மதில்
சக்கரவாள மலையைப் போல இருக்கின்றதாம். அதைச் சுற்றி
உள்ள அகழி சக்கரவாள மலையைச் சுற்றி இருக்கின்ற பெருங்கடலைப் போல
இருக்கின்றதாம். அகழியைச் சூழ்ந்து உள்ள
சோலை பெருங்கடலைச் சுற்றியுள்ள பேரிருளை ஒத்து உள்ளதாம்.
இந்தக் காட்சி, தூரத்திலிருந்து பார்ப்பவர்களின் கண்ணுக்குக் கருத்த நிறத்திலுள்ள மதிலைச் சூழ்ந்துள்ள சோலை, அந்தப் பொன்
போன்ற மதிலுக்குத் திருஷ்டிப்
பரிகாரம் செய்வதற்காகப் போர்த்தப்பட்ட (கரு)நீல ஆடையைப்
போலக் காட்சி அளிக்கின்றதாகக் கூறுகின்றான் கம்பன்.
கம்பனின் அந்தப் பாடல்:
அன்ன நீள் அகன்
கிடங்கு சூழ்கிடந்த ஆழியைத்
துன்னி, வேறு சூழ்கிடந்த தூங்கு,
வீங்கு, இருட் பிழம்பு
என்னலாம், இறும்பு சூழ்கிடந்த
சோலை, எண்ணில், அப்
பொன்னின் மா மதிட்கு உடுத்த
நீல ஆடை போலுமே.
(பாலகாண்டம், நகரப் படலம், பாடல் - 114)
தூரத்திலுருந்து பார்க்கும்போது நமக்கும் அந்தச் சோலை கருத்த
நிறத்தில் தான் தெரிந்தது. அருகில் வர வரத்தான் அந்தச் சோலை, பல நிறங்களில்
அழகாகத் தோன்றுகின்றது. இதையெல்லாம் தன் மனக்கண்களிலேயே கண்டுவிட்ட கம்பனின் கற்பனை
வளத்தைப் போற்றுதற்குச் சொற்கள் கிடைக்கவில்லை.
(உவமைகள் தொடரும்)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்: