Pages

Friday, 13 June 2014

சங்க இலக்கியத் தூறல் - 3 : களவிலும் நாணி நிற்கின்ற பெண்மை

சங்க இலக்கியத் தூறல் - 3 

(தமிழ் அவுஸ்திரேலியன் - ஜூன் 2014 இதழில் வெளியிடப்பட்டது.)

களவிலும் நாணி நிற்கின்ற பெண்மை
-    அன்பு ஜெயா, சிட்னி


பண்பில் சிறந்த தலைமகன் ஒருவன் அவனைப் போலவே பண்புள்ள  தலைமகள் ஒருத்தியைச் சந்திக்கிறான். முதல் சந்திப்பிலேயே அவளிடம் தன் மனதைப் பறிகொடுத்து விடுகிறான். அதேபோல அவளும் அவனிடம் விருப்பம் கொள்கிறாள். இருவரிடமும் காதல் அங்கே மலர்கின்றது. அடுத்தடுத்த சில சந்திப்புகளில் அவர்களின் காதல் கனியாகி, அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து மகிழ்வதில் இன்பம் கண்டனர்.

இப்படியிருக்க, ஒரு நாள் தலைமகன் தலைமகளைத் தனியே சந்திக்கக் கூடிய வாய்ப்பு ஒன்று அமைகின்றது. அவர்கள் இருவர் மனதிலும் காதல் வேட்கைக் கரைபுரண்டு ஓடினாலும், அவர்களுடைய பண்பு அவர்களைக் கட்டுக்குள் வைத்திருக்கின்றது. அப்போது தலைமகன் மெல்ல அவளிடம் ஆசை வார்த்தைகளைக் கூறுகின்றான். தூரத்தில் அவன் வருவதைக் கண்டு முகம் மலர நின்ற தலைமகள், அவன் அருகில் வந்தபின் நாணத்தின் மிகுதியால், அவனை நேருக்கு நேர் பார்க்க முடியாமல், பேசும் சக்தியை இழந்து, தன் இரண்டு கைகளாலும் கண்களை மூடிக்கொண்டு, தலை கவிழ்ந்து, பேசா மடந்தையாய் நிற்கின்றாள். 



அப்படி நாணி நிற்கின்ற தலைமகளைப் பார்த்து :

என் மனம் கவர்ந்த பெண்ணே! நான் கூறுகின்ற ஆசை வார்த்தைகளை எல்லாம் நீ உற்றுக் கேட்டுக்கொண்டு இருக்கிறாய். ஆனால் அவற்றுக்கு ஒரு வார்த்தையேனும் பதில் கூறாமல், உன் கண்கள் இரண்டையும் கைகளால் பொத்திக்கொண்டு, தலை கவிழ்ந்தவண்ணம் நிற்கின்றாய். காதல் உணர்வு அதிகமாக உள்ள போது அதைத் தாங்கி வாளாவிருப்பது எளிதென்று நினைக்கின்றாயோ?! புலியை அதன் முதுகிலே குத்திக் கிழித்ததால் சிவந்து இருக்கின்ற, யானையின் தந்தத்து நுனியைப்போல, நாணத்தால் சிவந்து காணப்படுகின்ற வேல் போன்ற உன் கூறிய கண்கள் என் மார்பைக் கீறிப் புண்ணாக்கிவிடுமோ என்று பயந்து அவற்றை உன் பூவைப் போன்ற கைகளால் மறைத்து நிற்கின்றாயோ? என்னை வருத்துவன உன் கண்கள் மட்டுமல்ல பெண்ணே; போர்க் களத்திலே வெற்றி நாட்டுகின்ற பாண்டியன் செழியனின் புகழ் பெற்ற மதுரை நகருக்கு ஒப்பான, காமனின் கரும்பு வில்லின் படம் வரையப்பட்டுள்ள, உன் தோள்களும் கூடத்தான் என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டும்”, என்று தலைமகன் தலைமகளிடம் கூறுகின்றான்.

இந்தக் காட்சியை சங்க காலப் புலவரான மருதன் இளநாகனார் பின்வரும் பாடலில் அழகாகச் சித்தரித்துக் காட்டியுள்ளார்.

சொல்லிற் சொல்லெதிர் கொள்ளாய் யாழநின்
திருமுகம் இறைஞ்சி நாணுதி கதுமெனக்
காமம் கைம்மிகின் தாங்குதல் எளிதோ
கொடுங்கேழ் இரும்புறம் நடுங்கக் குத்திப்
புலிவிளை யாடிய புலவுநாறு வேழத்தின்
தலைமருப் பேய்ப்பக் கடைமணி சிவந்தநின்
கண்ணே கதவ வல்ல நண்ணார்
அரண்டலை மதில ராகவும் முரசுகொண்டு
ஓம்பரண் கடந்த அடுபோர்ச் செழியன்
பெரும்பெயர்க் கூடல் அன்னநின்
கரும்புடைத் தோளும் உடையவால் அணங்கே.
                       (நற்றிணை, 39:1-12.)

மருப்பு = தந்தம்; கரும்புடைத் தோளும் : மகளிர் தோளில் காமனுடைய வில்லான கரும்பின் உருவத்தை வரைந்து அழகுபடுத்துவது பண்டைத் தமிழர் வழக்கம்.

---------------------------

10 comments:

  1. இலக்கிய சுவையும், பேரின்ப சுகமும் கலந்தளிக்கும் நற்றிணை என்றும் போற்றத்தக்கதே. நல்லதொரு விளக்கம். வாழ்த்துக்கள், திரு, அன்பு ஜெயா. நேரம் கிடைத்த போது மு.வ. அவர்களின் நற்றிணை விளக்கம் படிக்கவும். அதன் மின்னூல் த.ம. அ.வின் சேகரத்தில் உளது.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா. மு. வ. வின் நூல்கள் பற்றிய உங்கள் தகவலுக்கு நன்றி.

      Delete
  2. ”பாண்டியன் செழியனின் புகழ் பெற்ற மதுரை நகரது அழகுக்கு ஒப்பான ” என்று மாற்றவும்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துக்கு நன்றி ஐயா. ஔவை அவர்களின் உரையில், 'பெரும் பெயர்க் கூடல்' எனபதற்கு 'தமிழால் புகழ் நிலைபெற்ற கூடல்' என்று விளக்கம் கூறுகின்றார்.

      இந்தப் பாடலில், தலைவியின் தோள்களை மதுரையின் அழகிற்கு ஒப்பிடுவதைவிட அதன் புகழுக்கு ஒப்பிடுவதே சிறந்ததென எண்ணுகிறேன். பாண்டியன் செழியன் பகையரசர்களின் அரண்களை அழித்து வெற்றிகொள்கிறான். அவனுடைய கூடல் மாநகரின் அரண் பகைவர்களால் வெற்றி கொள்ள முடியாத அளவு பலத்தைப் பெற்றதாகத் தெரிகிறது. இப்படி பலம் பொருந்திய கூடல் மாநகருக்கு ஒப்பான தலைவியின் பலம் பொருந்திய தோள்களும் தலைவனை வருத்துவதாகப் பொருள்கொண்டால் சிறப்பாக இருக்கும் என்று எண்ணுகிறேன். வாசகனின் வற்றாத கற்பனைக்கு இடமளிப்பதுதானே கவிஞனின் திறமை. அப்படித்தான் மருதன் இளநாகனார் நினைத்திருப்பாரோ?!
      தங்களின் கருத்து அந்தப் பாடலை மீண்டும் ஊன்றிப் படிக்கத் தூண்டியது. நன்றி ஐயா.

      Delete
  3. சங்க கால நற்றிணையில் இருந்து ஒரு பாடலை எடுத்து மிக அழகாக எளிமையாக புரிந்து கொள்ளும் முறையில் விளக்கி எழுதியதிற்கு நன்றி திரு. அன்பு.
    நன்றாக உள்ளது

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

      Delete
  4. சிறப்பு சிறப்பு

    ReplyDelete
  5. அப்படியே வள்ளுவர் பக்கம் போனா, தாம் விரும்புகின்ற காதலி, அவரையே விரும்பும் காதலி... இப்படி இருந்தா.... Seedless பழம் சாப்பிட்ட மாதிரி இருக்கும் என்கிறார்... அதாவது கொட்டையை எடுக்க வேண்டும் என்ற தொல்லை கூட இல்லாத சுகம்...

    நற்றினயில் நல்ல சேதிகளும் தொடர்ந்து தருக...

    ReplyDelete
    Replies
    1. நன்றி. நற்றிணையிலிருந்தும் மற்ற சங்க இலக்கியங்களில் இருந்தும் காட்சிகளைப் பதிவு செய்யும் எண்ணம் உள்ளது.

      Delete

உங்கள் கருத்துக்கள்: