Pages

Saturday, 5 July 2014

கம்பனின் உவமைகள் - 12 : அயோத்தி மாநகர் வாழ் மங்கையர்

கம்பனின் உவமைகளில் சில துளிகள் - 12

அயோத்தி மாநகர் வாழ் மங்கையர்
                     - அன்பு ஜெயா, சிட்னி

அயோத்தியின் அழகை வருணித்த கம்பன், இப்போது அங்கு வாழ்கின்ற மங்கையர் பற்றி ஏதோ சொல்வதற்கு அழைக்கிறான். வாருங்கள் கேட்போம்.

அயோத்தியில் வாழும் பெண்களை மூன்று வகைப்படுத்திக் கூறுகிறான் கம்பன். பருவம் நிரம்பாத பெண்கள், பருவ மங்கையர் மற்றும் பருவம் முதிர்ந்த மங்கையர்.



கூந்தலை வாரி முடிக்கக்கூட முடியாத இளம் பெண்களின் குதலைச் சொற்கள் புல்லாங்குழலில் இருந்து வருகின்ற இனிய இசையைப் போல இருக்குமாம்.

மங்கைப் பருவத்து மகளிரது மழலைச் சொற்கள் மகர யாழின் கீதத்தை ஒத்திருக்குமாம் (கம்பா, பருவ மங்கையிரின் சொற்கள் மழலையா – சரியான ஆளப்பா நீ!!!).

பருவம் முதிர்ந்த மகளிரது இனிய சொற்களாகிய இன்னிசை, கள் விற்பவர்களின் சேரியிலே பாடுகின்ற கூத்தர்களின் பாட்டின் இசையை ஒத்திருக்குமாம்.

கம்பனின் அந்தப் பாடல்:

குழல் இசை மடந்தையர் குதலை, கோதையர்
மழலை, அம் குழல் இசை; மகர யாழ் இசை,
எழில் இசை மடந்தையர் இன்சொல் இன் இசை
பழையர்தம் சேரியில் பொருநர் பாட்டு இசை.

           (பாலகாண்டம், நகரப் படலம், பாடல் - 136)

 
பெண்களின் பருவங்களான பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்ற ஏழு பருவங்களையும் மூன்றினுள் அடக்கிவிட்டான் கம்பன். ஒரு வேளை அவற்றிற்கான உவமைகள் அவனுக்குக் கிடைக்கவில்லையோ?! அவன் திறமையே திறமைதான்.

     (உவமைகள் தொடரும்)


7 comments:

  1. கம்பனுக்கே உவமை கிடைக்க வில்லையா?? இது நல்ல கேள்வி...விடை கம்பரிடமே கேட்டு எழுதுங்கள்...

    ReplyDelete
    Replies
    1. கம்பனிடம் கேட்கலாம்தான். ஆனால், உலகறிந்த கம்பனுக்கு eMail ID இல்லையே!!! நன்றி.

      Delete
  2. அருமையான பாடலும் உவமையும்,அதற்கேற்ற அருமையான விளக்கம்.
    மங்கைப் பருவத்து மகளிரது மழலைச் சொற்கள் -படிக்கும் பொழுது எனக்கு தோன்றியது – என்ன மழலையா என்று?. அதை நீங்களே சொல்லி உள்ளீர்கள்.
    உவமைகள் தொடரட்டும்

    ReplyDelete
    Replies
    1. குதலை என்பது எழுத்து வடிவச் செம்மை பெறாத சொல் என்றும், மழலை என்பது செம்மை பெற்ற சொல் என்றும் விளக்கம் கொடுக்கிறார்கள் உரையாசிரியர்கள்.
      தங்கள் கருத்துக்கு நன்றி.

      Delete
    2. குதலை மற்றும் மழலை என்ற சொற்களுக்கு உள்ள வேறுபாட்டை விளக்கிய தங்களுக்கு நன்றி. தங்கள் தமிழ் பணி தொடரட்டும்

      Delete
  3. கம்பன் சொல்லும் மங்கையர் மழலை
    உவமைகள் அருமை. அதை தந்த உங்களுக்கு எமது பாராட்டுக்கள்.
    காதலில் காலடி வைத்த மங்கையர் வாய் வரும் மழலை தனை கம்பன் இங்கு கண்டானோ!
    அண்ணா சுந்தரம்

    ReplyDelete
    Replies
    1. கம்பனின் உள்ளத்தில் உள்ளதைக் கண்டுவிட்டீர்கள். கருத்துக்கு நன்றி.

      Delete

உங்கள் கருத்துக்கள்: