Pages

Showing posts with label உவமைகள். Show all posts
Showing posts with label உவமைகள். Show all posts

Sunday, 20 July 2014

கம்பனின் உவமைகள் 13 - அயோத்தி மக்களின் கல்விச்சிறப்பு

கம்பனின் உவமைகளில் சில துளிகள் – 13

அயோத்தி மக்களின் கல்விச்சிறப்பு 
    - அன்பு ஜெயா, சிட்னி

அயோத்தி மாநகர் வாழ் மங்கையரின் சிறப்பைக் கூறிய கம்பனிடம், அங்குள்ள மங்கையர் மட்டும்தான் சிறப்புடையவர்களா கம்ப நாடரே என்று கேட்டேன். அதற்குக் கம்பன், அயோத்தி வாழ் மக்கள் அனைவரும் சிறப்பு வாய்ந்தவர்கள்தான். ஏன், அம்மாநகரமும்கூடச் சிறப்பு வாய்ந்ததுதான் என்று விளக்கினான். கம்பன் என்ன சொன்னான் என்று கேளுங்களேன்.



அயோத்தி மாநகர், ஒரு விதை முளைத்துப் பூமியிலிருந்து மேலே எழுந்து வருவதைப்போல, கல்வியில் மேலோங்கி வளர்ந்து இருந்ததாம். மரத்தில் வலிமையான கிளைகள் வளர்ந்து பரவுவதுபோல மக்களிடம் எண்ணற்ற நூல்களின் கேள்வி அறிவு பெருகி வளர்ந்ததாம்.  அந்தக் கிளைகளில் இலைகள் தழைத்து வளருவதைப்போல கல்வியின் பயனால் மக்களிடம் நல்ல குணங்கள் நிறைந்து இருந்தனவாம். அவ்வாறு வளருகின்ற மரக்கிளைகளில் அரும்புகள் அரும்புவதுபோல எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்தும் குணம் அயோத்தி மக்களிடம் அதிகமாகக் காணப்பட்டதாம். அந்த அரும்புகள் மலர்வதுபோல், அயோத்தியில் அறச்செயல்கள் பெருக ஆரப்பித்தனவாம். அச்சிறப்புகள் அனைத்தும் அங்கே இருந்ததால், பழங்கள் பழுத்து செழிப்பதாப்போல அயோத்தி மக்களிடம் போகம் என்னும் இன்ப அனுபவம் பெருகி, அயோத்தி நகர் ஒரு பழுத்த மரத்தைப்போல சிறந்து விளங்கியது என்று கம்பன் விளக்கிக் கூறினான்.

கம்பனின் அந்தப் பாடல்:

ஏகம் முதல் கல்வி முளைத்து எழுந்து, எண் இல் கேள்வி
ஆகும் முதல் திண் பணை போக்கி, அருந் தவத்தின்
சாகம் தழைத்து, அன்பு அரும்பி, தருமம் மலர்ந்து,
போகங் கனி ஒன்று பழுத்தது போலும் அன்றே.

        (பாலகாண்டம், நகரப் படலம் பாடல் 75, நூல்பாடல் - 168)

(ஏகம் முதல் – ஒரு வித்து; பணை – கிளை; சாகம் – இலைகள்; போகம் – இன்பம், நில அனுபவம்)

இந்தப் பாடலில் கம்பன் கல்வியை ஒரு விதைக்கும், கேள்வி அறிவைக் கிளைகளுக்கும், நல்ல குணங்களை இலைகளுக்கும், அன்பை அரும்புக்கும், அறச்செயல்களை மலருக்கும், இன்ப அனுபவத்தைப் பழத்துக்கும் ஒப்பிட்டுக் கூறுகின்றான்.

கல்வியால் அடக்கம்வருகிறது. அடக்கத்தால் நல்வாழ்வு கிடைக்கிறது. அவ்வாழ்வில் நல்ல வழிகளில் பொருள் சேருகிறது. அப்பொருளால் தருமம் செய்ய முடிகிறது. அந்த தருமத்தால் போகம் என்னும் இன்ப அனுபவம் கிடைக்கிறது என்று இப்பாடலுக்குப் பொருள் கூறுகிறார்கள் உரையாசிரியர்கள்.

கொசுறு 1: பூவின் 6 பருவங்கள்/நிலைகள் – அரும்பு, முகை, போது, மலர், வீ, செம்மல்.
கொசுறு 2: எட்டு வகையான போகங்கள்: பெண், ஆடை, அணிகலன், உணவு, தாம்பூலம், நறுமணப்பொருள், பாட்டு, பூம்படுக்கை.

                              (உவமைகள் தொடரும்)

Saturday, 5 July 2014

கம்பனின் உவமைகள் - 12 : அயோத்தி மாநகர் வாழ் மங்கையர்

கம்பனின் உவமைகளில் சில துளிகள் - 12

அயோத்தி மாநகர் வாழ் மங்கையர்
                     - அன்பு ஜெயா, சிட்னி

அயோத்தியின் அழகை வருணித்த கம்பன், இப்போது அங்கு வாழ்கின்ற மங்கையர் பற்றி ஏதோ சொல்வதற்கு அழைக்கிறான். வாருங்கள் கேட்போம்.

அயோத்தியில் வாழும் பெண்களை மூன்று வகைப்படுத்திக் கூறுகிறான் கம்பன். பருவம் நிரம்பாத பெண்கள், பருவ மங்கையர் மற்றும் பருவம் முதிர்ந்த மங்கையர்.



கூந்தலை வாரி முடிக்கக்கூட முடியாத இளம் பெண்களின் குதலைச் சொற்கள் புல்லாங்குழலில் இருந்து வருகின்ற இனிய இசையைப் போல இருக்குமாம்.

மங்கைப் பருவத்து மகளிரது மழலைச் சொற்கள் மகர யாழின் கீதத்தை ஒத்திருக்குமாம் (கம்பா, பருவ மங்கையிரின் சொற்கள் மழலையா – சரியான ஆளப்பா நீ!!!).

பருவம் முதிர்ந்த மகளிரது இனிய சொற்களாகிய இன்னிசை, கள் விற்பவர்களின் சேரியிலே பாடுகின்ற கூத்தர்களின் பாட்டின் இசையை ஒத்திருக்குமாம்.

கம்பனின் அந்தப் பாடல்:

குழல் இசை மடந்தையர் குதலை, கோதையர்
மழலை, அம் குழல் இசை; மகர யாழ் இசை,
எழில் இசை மடந்தையர் இன்சொல் இன் இசை
பழையர்தம் சேரியில் பொருநர் பாட்டு இசை.

           (பாலகாண்டம், நகரப் படலம், பாடல் - 136)

 
பெண்களின் பருவங்களான பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்ற ஏழு பருவங்களையும் மூன்றினுள் அடக்கிவிட்டான் கம்பன். ஒரு வேளை அவற்றிற்கான உவமைகள் அவனுக்குக் கிடைக்கவில்லையோ?! அவன் திறமையே திறமைதான்.

     (உவமைகள் தொடரும்)


Sunday, 11 May 2014

கம்பனின் உவமைகள் - 8 : நடை பயிலும் அன்னங்கள்

கம்பனின் உவமைகளில் சில துளிகள் - 8

 நடை பயிலும் அன்னங்கள் 
                           -    அன்பு ஜெயா, சிட்னி

கோசல நாட்டின் மருத நிலத்தில் கம்பன் காட்டிய மற்றொரு காட்சியைக் காணலாம் வாருங்கள்.

அம்மருத நிலத்து வயல்களிலே தங்களுடைய இளம் குஞ்சுகளை உறங்குவதற்காகப் படுக்க வைத்துவிட்டு அன்னப் பறவைகளெல்லாம் அழகாக நடப்பதற்குப் பயிற்சி எடுத்துக் கொள்வதற்காக எங்கோ செல்கின்றன. ஆமாம், அன்னத்தைத் தானே அழகான நடைக்கு உதாரணமாக நம் கவிஞர்களெல்லாம் கூறுவார்கள். அப்படியிருக்க யாரிடம்தான் அந்த அன்னங்களே நடையைக் கற்றுக்கொள்ளத், தங்கள் குச்சுகளைக்கூட விட்டு விட்டுச், செல்கின்றன?! பார்க்கலாம், கம்பன் எங்கேதான் அழைத்துச் செல்கின்றான் என்று!

அந்த அன்னப் பறவைகள் தங்கள் குச்சுகள் தூங்குவதற்காக எங்கே படுக்க வைத்தன தெரியுமா? தாமரை மலர்களான படுக்கையின் மீது கிடத்தினவாம்! தாய்மாரெல்லாம் அங்கில்லாத நேரத்தில் பிள்ளைகளுக்குப் பசியெடுத்தால் என்ன செய்யுமாம்? அந்த வயல்களிலே மேய்ந்து கொண்டிருக்கின்ற எருமை மாடுகள் வீட்டிலே கட்டி வைத்திருக்கின்ற தங்கள் கன்றுகளை நினைத்தனவாம். அப்படி நினைக்கும்போது அவை கனைத்தன. அந்த அழுத்தத்தில் கனத்த அவற்றின் மடியிலிருந்து தானாகப் பால் சொரிந்ததாம். அந்தப் பாலை அன்னக் குஞ்சுகள் பருகுகின்றன என்று கம்பன் கூறுகின்றான். 

இப்போது குஞ்சுகளுக்குப் பசி நீங்கிவிட்டது. அப்போது அங்கே உள்ள பச்சைத் தவளைகள் ஓசை எழுப்புகின்றன, அந்த ஓசை அன்னக் குஞ்சுகளுக்குத் தாலாட்டாக இருக்கவே அவை அயர்ந்து தூங்குகின்றனவாம். ஆமாம், இந்தக் குச்சுகளை இங்கே விட்டு விட்டுச் சென்ற அன்னப் பறவைகள் எங்கே சென்றன? மீன் போன்ற கண்களை உடைய மருத நிலத்துப் பெண்களைப் போல நடை பயிலுகின்ற அன்னப் பறவைகள் என்று கம்பன் தன் பாடலில் கூறுகின்றான். அதனால் அழகிய இம்மருத நிலத்துப் பெண்கள் எப்படி நடக்கிறார்கள் என்று பார்த்துத் தாமும் அப்படி அழகாக நடப்பதற்குக் கற்றுக்கொள்வதற்காகச் சென்றிருக்கின்றன போலும்!

கம்பனின் அந்தப் பாடல் :

சேல் உண்ட ஒண் கணாரின் திரிகின்ற செங் கால் அன்னம்,
மால் உண்ட நளினப் பள்ளி, வளர்த்திய மழலைப் பிள்ளை,
கால் உண்ட சேற்று மேதி கன்றுஉள்ளிக் கனைப்ப சோர்ந்த
பால் உண்டு, துயிலப், பச்சைத் தேரை தாலாட்டும் – பண்ணை.
(பாலகாண்டம், நாட்டுப்படலம், 45)

இந்தப் பாடலில் தாமரை மலர்களைப் படுக்கைக்கும், பச்சைத் தவளைகளின் சத்தத்தைத் தாலாட்டுக்கும் உவமையாக்கித்; தாய்மையின் கனிவான தன்மை விலங்குகளுக்கும் உண்டு என்பதைக் கன்றை நினைத்ததும் தன் மடியிலிருந்து தானாகப் பாலைச் சுரக்கும் எருமை வழி நமக்கெல்லாம் காண்பிக்கின்றான் கம்ப நாட்டான்.

முன்னொரு பாட்டில், மயில்களின் நாட்டியத்தைக் காண்பித்த கம்பன் இந்தப் பாடலில் தவளைகளின் தாலாட்டை நம்மைக் கேட்க வைத்திருக்கின்றான். இந்த மருத நிலத்தில் இன்னும் என்னென்ன காட்சிகளை நமக்குக் காண்பிக்கப் போகிறானோ. அவனைத் தொடர்ந்து செல்லுவோம் வாருங்கள்.


(உவமைகள் தொடரும்)

Saturday, 3 May 2014

கம்பனின் உவமைகள் -7 : களையெடுக்கா உழவர்கள்

கம்பனின் உவமைகளில் சில துளிகள் – 7

- களையெடுக்கா உழவர்கள் -
-    அன்பு ஜெயா, சிட்னி

கோசல நாட்டின் மருத நிலச் சோலையிலே நடந்த காட்சிகளைக் கண்டுகளித்தோம். அவ்வாறு இயற்கை பொங்கும் அந்த நாட்டில் வேறு என்னவெல்லாம் நடக்கின்றது என்று தெரிந்துகொள்ள ஆவல் மிகுந்ததால் கம்பனைக் கேட்டேன். அவன் எனக்குக் காட்டிய காட்சியைக் காணலாம் வாருங்கள்.

கோசல நாட்டில் வாழ்கின்ற சில உழவர்கள் தங்கள் வயல்களில் வளர்ந்துள்ள களைகளை நீக்க வேண்டுமென்று முடிவு செய்கிறார்கள். போகின்ற வழியிலே கள் அருந்திவிட்டு தங்கள் நிலங்களுக்குச் செல்கிறார்கள். அங்கே குவளை, தாமரை, ஆம்பல் போன்ற மலர்கள் மட்டுமே களைகளாக உள்ளன. வேறு களைகளைக் காண முடியவில்லை. குடித்த கள் வாயோரங்களில் சற்று ஒழுகிபடி இருக்க, அக்களைகளை நீக்காமல், கள்ளுண்ட மயக்கத்தில், இங்குமங்குமாக உலாவிக் கொண்டிருக்கிறார்கள். வந்த வேளையைப் பார்க்காமல் ஏன் இப்படி உலாவிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு என்ன காரணம்? நம் கம்ப நாட்டான் சொல்கிறான், அந்த உழவர்களின் கண்களுக்கு அங்குள்ளக் களைகள் எல்லாம் இனிமையாகப் பேசுகின்ற, தங்கள் அன்பிற்குப் பாத்திரமான உழவ மகளிரின் உடல் உறுப்புக்களைப் போல உள்ளனவாம். அது எப்படி?

குவளை மலர்கள் அப்பெண்டிரின் கண்கள் போலவும், தாமரை அவர்களின் கை, கால், முகங்கள் போலவும், ஆம்பல் மலர்கள் அப்பெண்டிரின் வாய்கள் போலவும் காட்சி அளிக்கின்றன. அதனால் அவற்றைக் களைவதற்கு மனது வராமல் அங்குமிங்கும் உலாவிக் கொண்டிருக்கின்றனராம். இது எப்படி இருக்கின்றதென்றால், அற்ப அறிவுடையவர்கள் தவறான பெண்களின் காம வலையில் சிக்கிவிட்டால், அப்பெண்களை விட்டு விலக வேண்டிய நேரத்தில் கூட விலக முடியாமல் துன்பப்படுவார்கள் என்று ஓர் அறிவுரையையும் அங்கே தன் பாடலில் வைக்கிறான் கம்பன்!

கம்பனின் அந்தப் பாடல் :

பண்கள் வாய் மிழற்றும் இன்
சொல் கடைசியர் பரந்து நீண்ட
கண், கை, கால், முகம், வாய் ஒக்கும்
களை அலால் களை இலாமை,
உண் கள் வார் கடைவாய் மள்ளர்,
களைகலாது உலாவி நிற்பர்;-
பெண்கள்பால் வைத்த நேயம்
பிழைப்பாரோ, சிறியோர் பெற்றால்?
                   (பாலகாண்டம், நாட்டுப்படலம், 42)

கள் குடித்தால் உருப்பட மாட்டாய் என்று நேரடியாகச் சொல்லாமல்  அதற்கு உவமைகளைக் கூறிச் சொல்வதில் கம்பனை விஞ்சமுடியுமா?


(உவமைகள் தொடரும்.)

Friday, 25 April 2014

கம்பனின் உவமைகள் - 5 : பரம்பொருளும் சரயு நதியும்

கம்பனின் உவமைகளில் சில துளிகள் - 5

- பரம்பொருளும் சரயு நதியும்-
-    அன்பு ஜெயா, சிட்னி

இமயத்திலிருந்து புறப்பட்டு நால்வகை நிலங்களிலும் உள்ள ஏரிகள், குளங்கள், கால்வாய்கள் முதலிய பல இடங்களில் பாய்ந்து ஒடி வந்து கடலில் கலக்கும் முன் பல இடங்களில் பல பெயர்களில் அழைக்கப்பட்டாலும் அந்தச் சரயு நதியின் வெள்ளம் (நீர்) ஒன்றே தான். அதேபோல, பல சமயத் தத்துவங்களால் வெவ்வேறு பெயர்களாலும், உருவங்களாலும் விவரிக்கப்பட்டாலும் பரம்பொருள் ஒன்றேதான் என்று கம்பன் சரயுநதி வெள்ளத்தைப் பரம்பொருளுடன் ஒப்பிட்டுக் கூறுகின்றான்.

கம்பனின் அந்தப் பாடல் :

கல்லிடைப் பிறந்து, போந்து, கடலிடைக் கலந்த நீத்தம்,
‘எல்லைஇல் மறைகளாலும் இயம்அரும் பொருள் ஈது’ என்னத்
தொல்லையில் ஒன்றே ஆகி, துறைதொறும், பரந்த சூழ்ச்சிப்
பல்பெருஞ் சமயம் சொல்லும் பொருளும்போல், பரந்துஅன்றே.

(பாலகாண்டம், ஆற்றுப்படலம் – 31)


இவ்வாறு மகரந்தத் தூள் சிந்துகின்ற சோலைகள் வழியாகவும், சண்பக மரங்கள் நிறைந்த காடுகள் வழியாகவும், அரும்புகள் மலர்கின்ற பொய்கைகள் வழியாகவும், தடாகங்கள் வழியாகவும், பாக்கு மரங்கள் நிறைந்த தோட்டங்கள் வழியாகவும், நெல் வயல்கள் வழியாகவும் உலாவி ஓடிவந்தாலும் சரயு நதியின் நீர் ஒன்றேதான். அதேபோல், ஒரே ஆன்மாதான், நாம் "நாற்கதிகள்"* என்று நூல்களில் கூறப்பட்டப் பிறவிகளில் எடுக்கின்ற, பல உடல்களிலேயும் உலாவி வருகின்றது என்று கம்பன் சரயு நதியின் வெள்ளத்தை ஆன்மாவிற்கு ஒப்பிட்டுக் கூறுகின்றான்.

(*நான்கு கதிகள் : நரகர், விலங்கு, மனிதர், தேவர் – சூளாமணி, துறவுச் சருக்கம்,1922)

கம்பனின் அந்தப் பாடல் :

தாது உகு சோலைதோறும், சண்பகக் காடுதோறும்,
போது அவிழ் பொய்கைதோறும், புது மணல் தடங்கள்தோறும்,
மாதவி வேலிப் பூக வனம்தொறும், வயல்கல்தோறும்,
ஓதிய உடம்புதோறும் உயிர் என, உலாயது அன்றே.

                (பாலகாண்டம், ஆற்றுப்படலம், 32)

இவ்விரண்டு பாடல்களிலும் சமய தத்துவக் கோட்பாடுகளில் அடங்கிய, நாம் நம் கண்களால் காணமுடியாதப் பரம்பொருளையும் ஆன்மாவையும், காணக் கூடிய இயற்கைக் காட்சிகளுக்கு உவமையாக்கிக் கம்பன் விளக்கி இருப்பது அவன் கவித்துவத்தை எவ்வளவு அழகாக உணர்த்துகின்றது! அவனிடம்தான் எவ்வளவு கற்பனை வளம் மிகுந்திருக்கின்றது! அந்தச் சரயு நதியை முதலில் விலைமகளுக்கு ஒப்பிட்டான், பின்பு ஒரு தாய்க்கு ஒப்பிட்டான், இப்போது இறைவனுக்கும் ஆன்மாவிற்கும் ஒப்பிட்டுக் கூறுகின்றான். என்னே அவன் புலமை!


(உவமைகள் தொடரும்)

Tuesday, 22 April 2014

கம்பனின் உவமைகள் - 4 : தாயும் சரயு நதியும்


கம்பனின் உவமைகளில் சில துளிகள் - 4

- தாயும் சரயு நதியும் -
          -    அன்பு ஜெயா, சிட்னி

இமயத்திலிருந்து இறங்கி ஓடி வந்த அந்த வெள்ளம் நிலப்பகுதிக்கு வந்ததும் சரயு என்று புதுப் பெயர் பெறுகின்றது. இப்படித் தரையிறங்கி வந்த சரயு நதியின் வெள்ளம், நான்கு வகை நிலங்களான குறிஞ்சி, முல்லை, மருதம் மற்றும் நெய்தல் நிலங்களின் ஊடாகப் வளைந்து, திரிந்து, பாய்ந்து ஓடி அங்கு வாழும் மக்களுக்குப் பலனளிக்கிறது.

·         குறிஞ்சி – மலையும் மலையைச் சார்ந்த இடங்களும்
·         முல்லை – காடும் காடு சார்ந்த இடங்களும்
·         மருதம் – வயலும் வயல் சார்ந்த இடங்களும்
·         நெய்தல் – கடலும் கடல் சார்ந்த இடங்களும்

எப்படித் தாயின் முலைப்பால் குழந்தைக்கு உணவாகி அதை வளர்ப்பது போல, சரயு நதி தன்னுடைய நீர் வளத்தால் இந்த உலகத்திலுள்ள மக்களுக்கு உணவுப் பொருட்களை உற்பத்தி செய்ய உதவி புரிந்து அவர்கள் வாழ்க்கையை வளப்படுத்துகின்றது என்று கம்பன் சரயு நதியை ஒரு தாய்க்கு ஒப்பிட்டுக் கூறுகின்றான்.

கம்பனின் அந்தப் பாடல் :

“இரவிதன் குலத்து எண் இல் பல வேந்தர் தம்
பரவு நல் ஒழுக்கின் படி பூண்டது,
சரயு என்பது தாய் முலை அன்னது, இவ்
உரவுநீர் நிலத்து ஓங்கும் உயிர்க்கு எலாம்.”

(பாலகாண்டம், ஆற்றுப்படலம் – 24)

(உவமைகள் தொடரும்)


Monday, 21 April 2014

கம்பனின் உவமைகள் - 3 : வெள்ளப் பெருக்கும் விலைமகளும்

கம்பனின் உவமைகளில் சில துளிகள் - 3

- வெள்ளப் பெருக்கும் விலைமகளும் -

-    அன்பு ஜெயா, சிட்னி

அவையடக்கத்தில் இமயத்தின் உச்சிக்குச் சென்ற கம்பன் அங்கு பெய்த மழையைப் பார்க்காமல், அதன் அழகைப் பார்த்து சுவைக்காமல் இருந்திருப்பானா? இமய மலையின் மீது மழை பெய்து கொண்டே இருக்கிறது. அதனால் நீர் பெருக்கெடுத்து, அது மலையின் உச்சியையும், இடைப் பகுதியையும், அடிப் பகுதியையும், ஆரத் தழுவிக்கொண்டு வேகமாக ஓடி வருகின்றது. அப்படி ஓடி வருகையில் அம்மலையில் விளைந்துள்ள பொருட்களைத் தன்னகத்தே ஏந்திக்கொண்டு கீழே வந்த பின்னர், அந்தப் பொருட்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு அவை விளைந்த மலையிலிருந்து  விரைவாக விலகி வெகு தூரம் சென்றுவிடுகிறது. அதேபோல, ஒரு விலைமகளும், காமுகனின் உச்சி முதல் பாதம் வரைத் தழுவி அவனுக்கு இன்பம் கொடுத்துவிட்டு, பின்னர் அவனிடம் உள்ள பொருட்களையெல்லாம் பறித்துக்கொண்டு அவனை விட்டு விரைந்து ஓடிவிடுகின்றாள் என்று கம்பன், காமுகனுக்கு மலையையும், காமுகனின் செல்வத்தை மலையில் விளைந்த பொருட்களுக்கும், வெள்ளப் பெருக்கினை விலைமகளுக்கும் ஒப்பிட்டுக் கூறுகின்றான்.

கம்பனின் அந்தப் பாடல்:

“தலையும் ஆகமும் தாளும் தழீஇ, அதன்
நிலை நிலாது, இறை நின்றது போலவே,
மலையின் உள்ள எலாம் கொண்டு மண்டலால்,
விலையின் மாதரை ஒத்தது, அவ் வெள்ளமே.”

                 (பாலகாண்டம், ஆற்றுப்படலம் – 18)

(உவமைகள் தொடரும்)


Saturday, 19 April 2014

கம்பனின் உவமைகள் - 2 : கம்பனின் அவையடக்கம்


கம்பனின் உவமைகளில் சில துளிகள் 2

- கம்பனின் அவையடக்கம் -
-    அன்பு ஜெயா, சிட்னி

குழந்தைகளும் சிறு பிள்ளைகளும் சித்திரங்கள் வரைவதாகச் சுவர்களிலும் தரையிலும் கிறுக்குவதைப் பார்த்திராதவர்கள் இவ்வுலகில் இருப்பது அரிது. அவ்வாறு குழந்தைகள் ‘வீடுகள்’ என்றும், ‘ஆடல் அரங்குகள்’ என்றும் வரைகின்ற சித்திரங்களைப் பார்த்து அச்சித்திரங்கள் சிற்பச் சாஸ்திரத்திற்கு உட்பட்டவை அல்ல, முரணானவை என்று சிற்பக்கலை வல்லுனர்கள் குறை கூறமாட்டார்கள். அதுபோல, நூல்கள் எழுதும் அறிவு அதிகமில்லாத தன்னுடைய கவிகள், காவிய இலக்கணத்திற்குள் அமையவில்லை என்று முறையாகத் தமிழ் கற்ற அறிஞர்கள் கோபங் கொள்ள மாட்டார்கள் என்று கம்பன் கூறுகின்றான். இந்தப் பாடலில், இராமாயணத்தைக் குழந்தைகள் வரையும் சித்திரத்திற்கும், தன்னுடைய கவித் திறனைக் குழந்தைகளின் சித்திரம் வரையும் திறனுக்கும், தமிழ் கற்ற அறிஞர்களை சிற்பக்கலை வல்லுனர்களுக்கும் ஒப்பிட்டு அடக்கத்துடன் கூறிக்கொள்கின்றான் கம்பன். இதைத்தான் வள்ளுவன்,
“நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.”
 – என்று கூறியிருப்பானோ!

கம்பனின் அந்தப் பாடல் :

“அறையும் ஆடரங்கும் படப் பிள்ளைகள்
தரையில் கீறிடின், தச்சரும் காய்வரோ?
இறையும் ஞானம் இலாத என் புன் கவி
முறையின் நூல் உணர்ந்தாரும், முனிவரோ?”
(பாயிரம், அவையடக்கம் – 9)

இவ்வாறு கம்பனின் அவையடக்கம் இமய உச்சிக்கு உயர்ந்திருப்பதைக் கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை.

(உவமைகள் தொடரும்)

கம்பனின் உவமைகள் -1 : பாற்கடலும் பூனையும்


கம்பனின் உவமைகளில் சில துளிகள் 1 – அறிமுகம்

- பாற்கடலும் பூனையும் -

-    அன்பு ஜெயா, சிட்னி


தமிழ் மொழியின் பல சிறப்புகளில் ஒன்று அச்சுரங்கத்தில் புதைந்து கிடக்கும் வளம். அவ்வளங்கள் ஓர் எழுத்தாளனின் சிந்தனைக்கு அள்ள அள்ளக் குறையாமல் கிடைக்கும் செல்வங்கள்.  அச்செல்வங்களைப் பெருமளவில் தான் பருகி நாமும் நம் வாழ்நாள் முழுவதும் பருகுவற்கு நமக்குத் தந்தவன் கம்பன் என்றால் அது மிகையாகாது. அந்தச் சுரங்கத்திலிருந்து அவன் வெளிக் கொணர்ந்த செல்வங்கள் கணக்கிலடங்கா. அவற்றின் சில துளிகளாக அவன் கையாண்ட ஒரு சில உவமைகளையும் ஒப்பீடுகளையும் இந்தப் பகுதியில் தொடராக வெளியிடும் சிறிய முயற்சி இது.

நேரம் கிடைக்கும்போது கம்பனின் பாடல்களில் நான் ரசித்த உவமைகளை ஒவ்வொன்றாகப் பகிர்ந்து கொள்கிறேன். கம்பன் கையாண்ட உவமைகள் அனைத்தையும் ஆராய்வதென்பது, இராமகாதை எழுதுவதுபற்றி அவையடக்கத்தில் கம்பனே கூறுவது போல, இயலாத காரியம். கம்பனுக்கே அப்படித் தோன்றினால், ஓரளவே தமிழ் அறிந்த எனக்கு எப்படி இருக்கும்? முயற்சிக்கிறேன்.

ஆமாம், அப்படி என்னதான் அவையடக்கத்தில் கம்பன் தன்னைப்பற்றி கூறினான்?!
ஒரு பூனை பாற்கடலைப் பார்த்து மிக்க மகிழ்ச்சி அடைந்தது. பூனைக்குத்தான் பால் என்றால் உயிராயிற்றே! பாற்கடலின் அருகே சென்று, அந்தக் கடலில் உள்ள பால் முழுவதையும் தன் நாக்கால் நக்கியே குடித்துவிடவேண்டும் என்று நினைத்ததாம். அது முடிகின்ற காரியமா? அதைத்தான் கம்பன் சொல்கிறான், எப்படி ஒரு பூனையால் பாற்கடல் முழுவதையும் குடித்துவிட முடியாதோ அதுபோல தன்னால் இராமயணம் முழுவதையும் பாடுதல் இயலாத செயல். மற்றவர்கள் ஏளனம் செய்வார்களோ என்றுகூடக் கருதாது இந்த இராமகாதையைப் பாடத் துணிந்திட்டேன் என்று கம்பன் இராமாயணத்தைப் பாற்கடலாகவும் தன்னை அப்பாற்கடலை நக்கியே குடித்திட எண்ணும் பூனையாகவும் சித்தரிக்கின்றான்.

கம்பனின் அந்தப் பாடல்:

“ஓசை பெற்றுயர் பாற்கடல் உற்று, ஒரு
பூசை, முற்றவும் நக்குபு புக்கென,
ஆசை பற்றி அறையலுற்றேன் மற்று, இக்
காசு இல் கொற்றத்து இராமன் கதைஅரோ!
                        (பாயிரம்  - அவையடக்கம் - 4)

அதுபோல, கம்பன் காவியத்தில் அவன் கையாண்ட உவமைகள் அனைத்தையும் எடுத்துரைப்தென்பது பாற்கடலைப் பூனை நக்கியே குடித்து முடிக்க நினைப்பது போலத்தான். எனவே கம்பனின் உவமைகளுள் சில துளிகளை மட்டும் அவ்வப்போது இந்தத் தொடரில் பதிவு செய்கிறேன்.
(உவமைகள் தொடரும்)