கம்பனின்
உவமைகளில் சில துளிகள் – 13
அயோத்தி மக்களின் கல்விச்சிறப்பு
- அன்பு
ஜெயா, சிட்னி
அயோத்தி மாநகர் வாழ் மங்கையரின் சிறப்பைக் கூறிய கம்பனிடம்,
அங்குள்ள மங்கையர் மட்டும்தான் சிறப்புடையவர்களா கம்ப நாடரே என்று கேட்டேன். அதற்குக்
கம்பன், அயோத்தி வாழ் மக்கள் அனைவரும் சிறப்பு வாய்ந்தவர்கள்தான். ஏன்,
அம்மாநகரமும்கூடச் சிறப்பு வாய்ந்ததுதான் என்று விளக்கினான். கம்பன் என்ன சொன்னான்
என்று கேளுங்களேன்.
அயோத்தி மாநகர், ஒரு விதை முளைத்துப் பூமியிலிருந்து மேலே எழுந்து வருவதைப்போல, கல்வியில்
மேலோங்கி வளர்ந்து இருந்ததாம். மரத்தில் வலிமையான கிளைகள் வளர்ந்து பரவுவதுபோல மக்களிடம்
எண்ணற்ற நூல்களின் கேள்வி அறிவு பெருகி வளர்ந்ததாம். அந்தக் கிளைகளில் இலைகள் தழைத்து வளருவதைப்போல கல்வியின்
பயனால் மக்களிடம் நல்ல குணங்கள் நிறைந்து இருந்தனவாம். அவ்வாறு வளருகின்ற மரக்கிளைகளில்
அரும்புகள் அரும்புவதுபோல எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்தும் குணம் அயோத்தி
மக்களிடம் அதிகமாகக் காணப்பட்டதாம். அந்த அரும்புகள் மலர்வதுபோல், அயோத்தியில்
அறச்செயல்கள் பெருக ஆரப்பித்தனவாம். அச்சிறப்புகள் அனைத்தும் அங்கே இருந்ததால், பழங்கள்
பழுத்து செழிப்பதாப்போல அயோத்தி மக்களிடம் போகம் என்னும் இன்ப அனுபவம் பெருகி, அயோத்தி
நகர் ஒரு பழுத்த மரத்தைப்போல சிறந்து விளங்கியது என்று கம்பன் விளக்கிக் கூறினான்.
கம்பனின் அந்தப் பாடல்:
ஏகம் முதல் கல்வி முளைத்து
எழுந்து, எண் இல் கேள்வி
ஆகும் முதல் திண் பணை போக்கி, அருந் தவத்தின்
சாகம் தழைத்து, அன்பு அரும்பி, தருமம் மலர்ந்து,
போகங் கனி ஒன்று பழுத்தது
போலும் அன்றே.
(பாலகாண்டம், நகரப் படலம் பாடல் 75, நூல்பாடல்
- 168)
(ஏகம் முதல் – ஒரு வித்து; பணை – கிளை; சாகம் – இலைகள்; போகம் – இன்பம், நில அனுபவம்)
இந்தப் பாடலில் கம்பன் கல்வியை ஒரு விதைக்கும், கேள்வி அறிவைக் கிளைகளுக்கும், நல்ல குணங்களை இலைகளுக்கும், அன்பை அரும்புக்கும், அறச்செயல்களை மலருக்கும், இன்ப அனுபவத்தைப் பழத்துக்கும் ஒப்பிட்டுக் கூறுகின்றான்.
கல்வியால் அடக்கம்வருகிறது. அடக்கத்தால் நல்வாழ்வு கிடைக்கிறது. அவ்வாழ்வில்
நல்ல வழிகளில் பொருள் சேருகிறது. அப்பொருளால் தருமம் செய்ய முடிகிறது. அந்த
தருமத்தால் போகம் என்னும் இன்ப அனுபவம் கிடைக்கிறது என்று இப்பாடலுக்குப் பொருள்
கூறுகிறார்கள் உரையாசிரியர்கள்.
கொசுறு 1: பூவின் 6 பருவங்கள்/நிலைகள் – அரும்பு, முகை, போது, மலர், வீ,
செம்மல்.
கொசுறு 2: எட்டு வகையான போகங்கள்: பெண், ஆடை, அணிகலன், உணவு,
தாம்பூலம், நறுமணப்பொருள், பாட்டு, பூம்படுக்கை.
(உவமைகள் தொடரும்)
அருமை..அருமை
ReplyDeleteஇணையற்ற கம்பச்சித்திரம். கல்வி விதையிலிருந்து நல் இன்பக்கனி விளைகிற உருவகம். எடுத்துக்காட்டிச் சிறப்பாகப் பதிவு செய்துள்ள சகோதரருக்குப் பாராட்டு. நன்றி.
Deleteவாழ்த்துக்களுடன்
சொ.வினைதீர்த்தான்
தங்கள் கருத்துகளுக்கு நன்றி
Delete
ReplyDeleteவணக்கம்!
கன்னல் கனியெனக் கம்பன் உவமைகள்!
இன்னும் தருக இனித்து!
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
நன்றி ஐயா. தொடர்ந்து தரும் எண்ணம் உள்ளது, இறையருள் கூடவேண்டும்.
Deleteஅருமையான உவமைகள் நிறைந்த பாடல். அதற்கேற்ற மிக அருமையான விளக்கம் திரு. அன்பு.
ReplyDeleteதங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
Deleteஅருமை உவமை உங்கள் பெயரை அன்பருமை என மாற்றலாமே
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. பெயரை மாற்ற DeedPol போகவேண்டும்.
Delete