Pages

Wednesday, 23 July 2014

சங்க இலக்கியத் தூறல் - 4: உள்ளத்தில் ஊடுருவி நிற்கும் காதல்

சங்க இலக்கியத் தூறல் - 4

உள்ளத்தில் ஊடுருவி நிற்கும் காதல்
                  - அன்பு ஜெயா, சிட்னி


 ஒரு தலைவனும் தலைவியும் காதல் வயப்பட்டு, அடிக்கடி சந்தித்து வாழ்ந்து வருகின்றார்கள். நாட்கள் மாதங்களாகி, மாதங்கள் வருடங்களாகி ஓடின. களவொழுக்கம் என்று கூறப்படும் இந்த நிலையிலிருந்து வாழ்க்கையின் அடுத்த கட்டமான மணவாழ்விற்குள் நுழைவதற்கான தருணம் வந்துவிட்டது என்று தலைவன் முடிவு செய்தான். அவன் ஆசையைத் தலைவியிடம் கூறினான். தலைவிக்கும் அவனைத் திருமணம் செய்துகொள்ள உடன்பாடு இருந்தது. ஆனால், அவர்களுடைய ஆசைக்கு அவர்களுடைய பெற்றோர்களின் சம்மதம் கிடைப்பதாகத் தெரியவில்லை.



இவ்வாறு களவொழுக்கத்தில் வாழ்கின்ற காதலர்கள் கற்பு நெறியான மணவாழ்க்கையைத் துவக்கப் பெற்றோர் ஆதரவு கிடைக்காததால் தலைவன் தலைவியைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு வேறு ஓர் ஊரில் வாழ விரும்பினான். தன்னை மணக்கப் போகிறவன் அழைக்கின்றான் என்பதால் தலைவியும் தன் பெற்றோர்களைப் பிரிந்து தலைவனுடன் செல்வதற்கு ஒப்புக்கொண்டாள். அவ்வாறு இவர்கள் செல்வதற்கான நாள், நேரம், இடம் குறித்துத் தலைவியின் தோழியின் மூலம் தலைவன் அறிவித்திருந்தான். குறித்த அந்த நாளில் தோழி தலைவியை தலைவனிடம் பாதுகாப்பாக ஒப்படைப்பதற்காக அழைத்து வந்தாள்.

சிறுவயது முதல் தான் ஒன்றாக ஓடி ஆடி திரிந்த தோழியான தலைவியைப் பிரியவேண்டிய தருணம் வந்ததை நினைத்து தோழி வருந்தினாள். அதே சமயம் தன் நண்பர்கள், உறவினர்கள், மற்றும் தெரிந்த அனைவரையும் பிரிந்து தலைவனை மட்டுமே நம்பிச் செல்கின்ற தலைவிக்கு என்ன பாதுகாப்பு உள்ளது என்று எண்ணிக் கலங்கினாள். மலருக்கு மலர் தாவுகின்ற வண்டினைப் போன்ற ஆண்மக்களின் சுபாவமும் அவள் மனக்கண்களில் தோன்றுகின்றது. அதன் விளைவாக தலைவனிடம் தலைவியை ஒப்படைத்து விட்டு அவனிடம் தன் எண்ணத்தையும் வேண்டுகோளையும் தெரிவிக்கின்றாள்.

 “மருதநிலத்தைச் சேர்ந்த தலைவனே! உன்னையும் உன் வார்த்தைகளையும் மட்டுமே நம்பித் தலைவி உன்னோடு வருகின்றாள்.  குறித்த நேரத்தில் நீ இந்த இடத்திற்கு அவளை அழைத்துச் செல்ல வந்ததிலிருந்து வார்த்தை தவறாத ஆண்மகன் நீ என்று தெரிகின்றது. இன்று போல் என்றும் அவளைக் கண்ணும் கருத்துமாக நீ பாதுகாக்க வேண்டும்.

“இப்போது நிமிர்ந்து உயர்ந்து நிற்கின்ற அவளது மார்பகங்கள் தளர்ந்து சாய்கின்ற காலத்திலும், இன்று கரிய நிறத்தோடு அவள் மேனியின் மேல் தவழுகின்ற நீண்ட கூந்தல் நரைத்துப்போகும் காலத்திலும் கூட நீ இவளைக் கைவிடாது அன்பு பாராட்ட வேண்டும்.

“பல வகைகளாலும் அழகு செய்யப்பட்ட தேர்கள் பலவற்றை தம்மிடம் வைத்துள்ள சோழ மன்னர்கள் கொங்கு நாட்டவரை வெல்வதற்காகச் செய்த போரில் ‘பழையன்’ என்பவன் தானைத் தலைவனாக இருந்தான். அவன் எறிந்த வேல் பிழைத்து எப்போதும் குறி தப்பியது இல்லை. அதைப்போல, உன்னை மட்டுமே நம்பி உன்னுடன் வருகின்ற தலைவியை உன் வார்த்தைகள் பிழையாமல், எப்போதும், எந்த நிலையிலும் நீ அவளைப் பிரியாமல் காப்பாற்ற வேண்டும்,” என்று தோழி தலைவனிடம் வேண்டினாள்.

இவ்வாறு உடலின் தோற்றம் கண்டு பிறக்கின்ற காதலைவிட, உள்ளத்தில் ஊடுருவி நிற்கும் காதலே சிறந்தது என்று கருத்தினையும், தலைவியின் வாழ்வு சிறப்பாக அமைய வேண்டுமென்ற உண்மையான தோழியின் துடிப்பையும், நல்லெண்ணத்தையும், சங்க காலப் புலவரான குடவாயிற் கீரத்தனார் பின் வரும் பாடலில் வெளிப்படுத்துகின்றார்:

அண்ணாந் தேந்திய வனமுலை தளரினும்
பொன்னேர் மேனியின் மணியின் தாழ்ந்த
நன்னெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும்
நீத்தல் ஓம்புமதி பூக்கேழ் ஊர
இன்கடுங் கள்ளின் இழையணி கொடித்தேர்
கொற்றச் சோழர் கொங்கர்பு பணீஇயர்
வெண்கோட் டியானைப் போஒரு கிழவோன்
பழையன் வேல்வாய்த் தன்னநின்
பிழையா நன்மொழி தேறிய இவட்கே.
                                 (நற்றிணை, 10:1-9.)

திணை: பாலை

துறை:  உடன்போக்கும் தோழி கூறியது


அருஞ்சொற்பொருள்: அண்ணாத்தல் – நிமிர்தல், வனம் – அழகு, கடுங்கள் –  முற்றிக் கடுப்பு ஏறிய கள், தேறுதல் – தெளிதல்.


11 comments:

  1. இந்த அருமையான பாடலில் 'வனமுலை தளரினும்'…'நன்மொழி தேறிய' அழகை மிகவும் உணர்வமைதியுடன் பதிவு செய்துளள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு நன்றி ஐயா

      Delete
  2. அழகான அருமையான விளக்கம் ஐயா... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா

      Delete
  3. காதலுக்குப் பின் காமம் இருக்குமோ என்ற சந்தேகத்தை இப்பொழுதே போக்கிக் கொள்ளத் துடிக்கும் துடிப்பு தோழியிடம் தெரிகின்றது.

    ஓடிப்போய் கல்யாணம் தான் கட்டிக்காலாமா என்ற இன்றைய பாட்டின் சங்க கால வடிவம் இது என்று நான் சொல்ல வந்தால் நீங்க உதைக்க வருவீங்க... நானு ஓடியிற்றேன்...

    ReplyDelete
    Replies
    1. பயப்படவேண்டாம் நண்பரே. கம்பனையே கலாய்க்கிறவர் நீங்கள் மற்றவர்களெல்லாம் எந்த மூல..... காதலின்றிக் காமமில்லை காமமின்றிக் காதலில்லை என்று கூறலாமோ? யோசியுங்க .......

      Delete
  4. நற்றிணையில் இருந்து ஒரு நல்ல பாடலையும் மிக அருமையான தெளிவான விளக்கத்தையும் தந்த திரு. அன்பு, உங்களுக்கு நன்றி. வளர்க தங்கள் தமிழ் தொண்டு

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      Delete
  5. அய்யா தங்களின் தமிழ் பணி தொடர வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா. மீண்டும் தொடர்வேன், வருகை புரியுங்கள்.

      Delete
  6. "பிழையா நன்மொழி
    பொய்மொழிக் கொடுஞ்சொல்"
    இதன் முழுப்பாடலை தாம் அறிந்தால் பதிவிடவும் சகோதரி....

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்: