கம்பனின்
உவமைகளில் சில துளிகள் - 5
- அன்பு ஜெயா, சிட்னி
இமயத்திலிருந்து புறப்பட்டு நால்வகை
நிலங்களிலும் உள்ள ஏரிகள், குளங்கள், கால்வாய்கள் முதலிய பல இடங்களில் பாய்ந்து ஒடி வந்து கடலில் கலக்கும்
முன் பல இடங்களில் பல பெயர்களில் அழைக்கப்பட்டாலும் அந்தச் சரயு நதியின் வெள்ளம் (நீர்)
ஒன்றே தான். அதேபோல, பல சமயத் தத்துவங்களால் வெவ்வேறு
பெயர்களாலும், உருவங்களாலும் விவரிக்கப்பட்டாலும் பரம்பொருள்
ஒன்றேதான் என்று கம்பன் சரயுநதி வெள்ளத்தைப் பரம்பொருளுடன் ஒப்பிட்டுக்
கூறுகின்றான்.
கம்பனின் அந்தப் பாடல் :
கல்லிடைப்
பிறந்து, போந்து, கடலிடைக்
கலந்த நீத்தம்,
‘எல்லைஇல்
மறைகளாலும் இயம்அரும் பொருள் ஈது’ என்னத்
தொல்லையில்
ஒன்றே ஆகி, துறைதொறும், பரந்த சூழ்ச்சிப்
பல்பெருஞ்
சமயம் சொல்லும் பொருளும்போல், பரந்துஅன்றே.
(பாலகாண்டம், ஆற்றுப்படலம் – 31)
இவ்வாறு மகரந்தத் தூள் சிந்துகின்ற சோலைகள் வழியாகவும், சண்பக மரங்கள் நிறைந்த
காடுகள் வழியாகவும், அரும்புகள் மலர்கின்ற பொய்கைகள்
வழியாகவும், தடாகங்கள் வழியாகவும்,
பாக்கு மரங்கள் நிறைந்த தோட்டங்கள் வழியாகவும், நெல் வயல்கள்
வழியாகவும் உலாவி ஓடிவந்தாலும் சரயு நதியின் நீர் ஒன்றேதான். அதேபோல், ஒரே ஆன்மாதான், நாம் "நாற்கதிகள்"* என்று நூல்களில் கூறப்பட்டப் பிறவிகளில்
எடுக்கின்ற, பல உடல்களிலேயும் உலாவி வருகின்றது என்று கம்பன் சரயு நதியின் வெள்ளத்தை ஆன்மாவிற்கு ஒப்பிட்டுக் கூறுகின்றான்.
(*நான்கு கதிகள் : நரகர், விலங்கு, மனிதர், தேவர் – சூளாமணி, துறவுச் சருக்கம்,1922)
கம்பனின் அந்தப் பாடல் :
தாது
உகு சோலைதோறும், சண்பகக் காடுதோறும்,
போது
அவிழ் பொய்கைதோறும், புது மணல் தடங்கள்தோறும்,
மாதவி
வேலிப் பூக வனம்தொறும், வயல்கல்தோறும்,
ஓதிய
உடம்புதோறும் உயிர் என, உலாயது அன்றே.
(பாலகாண்டம், ஆற்றுப்படலம், 32)
இவ்விரண்டு பாடல்களிலும் சமய தத்துவக் கோட்பாடுகளில் அடங்கிய, நாம் நம் கண்களால் காணமுடியாதப்
பரம்பொருளையும் ஆன்மாவையும், காணக் கூடிய இயற்கைக் காட்சிகளுக்கு உவமையாக்கிக் கம்பன்
விளக்கி இருப்பது அவன் கவித்துவத்தை எவ்வளவு அழகாக உணர்த்துகின்றது! அவனிடம்தான் எவ்வளவு
கற்பனை வளம் மிகுந்திருக்கின்றது! அந்தச் சரயு நதியை முதலில் விலைமகளுக்கு ஒப்பிட்டான், பின்பு ஒரு
தாய்க்கு ஒப்பிட்டான், இப்போது இறைவனுக்கும் ஆன்மாவிற்கும் ஒப்பிட்டுக் கூறுகின்றான். என்னே
அவன் புலமை!
(உவமைகள் தொடரும்)
அருமையும், சுவையும் மிகுந்த பதிவு. வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅருமையான பார்வை... உங்கள் பார்வையில் ஒரு பாடலும் தப்பாது போல் இருக்கிறதே???
ReplyDeleteஉங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே. கம்பனைப் படிக்கப் படிக்க அவனை 'கவிச்சக்கரவர்த்தி' என்று ஏன் கூறினார்கள் என்று நன்றாக உணர முடிகின்றது. நான் 'கம்பனின் உவமைகள் - 1' ல் குறிப்பிட்டபடி, அவன் பயன்படுத்திய உவமைகளை எல்லாம் எடுத்துரைப்பது என்பது பூனை பாற்கடலைக் குடித்து முடிக்க ஆசைப்படுதலைப் போலத்தான். அவன் கையாண்ட உவமைகளில் சில துளிகளையாவது எளிய முறையில் காட்ட முயற்சிக்கிறேன். உங்களைப்போன்ற நண்பர்களின் ஆதரவு உள்ளவரை அதை திறமாகச் செய்ய முடியுமென்று நினைக்கிறேன். நன்றி.
Delete