அமைதி
- அன்பு ஜெயா
அளவற்ற துன்பங்கள் ஆங்காங்கு தோன்றுகையில்
அமைதி இல்லை,
களமெங்கும் போரென்றால் காண்கின்ற உள்ளமதில்
கவலை எல்லை,
வளமான ஓர்காலம் வாய்க்கின்ற நேரமதில்
வறுமை இல்லை,
உளமெல்லாம் பூரிப்பில் ஊன்றிட்டால் நல்லமைதி
உலகின் பிள்ளை! (1)
சொல்கின்ற வார்த்தையெலாம் சூடாக இருந்ததெனில்
சுவையு மில்லை,
சொல்கின்ற உள்ளத்தில் சூடற்றுப் போனதுமே
சுடரும் தொல்லை,
செல்கின்ற பாதையெலாம் சேறாக இருந்ததெனில்
செம்மை இல்லை,
நல்வழியில் நாம்நடந்தால் ஞாலத்தில் நல்லமைதி
நமக்குப் பிள்ளை! (2)
இருகோடிப் பிரிவினைகள் உலகத்தில் தோன்றுகையில்
உறக்கம் இல்லை,
தெருவோரம் பொங்கியுண்டு தேய்வோரைக் காப்பதற்குத்
திறமை இல்லை,
வருவாயைப் பதுக்கிவைத்து வாழ்வோரால் நாட்டிலிங்கு
வறுமைத் தொல்லை,
ஒருநாளில் இவைநீங்கும் அந்நாளில் தோன்றுமங்கே
அமைதி எல்லை! (3)
(அமைதியின் எல்லை இது)
மிக அருமை அய்யா...
ReplyDeleteமிக்க நன்றி
ReplyDelete