கம்பனின்
உவமைகளில் சில துளிகள் - 6
மருதம் என்னும் மாது
- அன்பு ஜெயா, சிட்னி
இதுவரை சரயு நதியோடு மிதந்து வந்த நாம்
இப்போது கோசல நாட்டின் மருத நிலத்திற்குள் நுழைகின்றோம். கம்பன் நம்மைக்
கைபிடித்து அழைத்துச் செல்லுவான், நாம்
அந்த மருத நிலத்தின் அழகைச் சற்றுச் சுவைக்கலாம் வாருங்கள்.
அதோ அங்கே மருத நிலத்தில் தெரிகின்ற சோலை நடன
மேடையாகக் காட்சியளிக்கின்றது. அதன் மீது வண்ண மயில்கள் அழகான நாட்டியப் பெண்களைப்
போல நாட்டியம் ஆடிக்கொண்டிருக்கின்றன. அந்தச் சோலையின் குளத்திலே உள்ள நீரின் மீது
வீசுகின்ற குளிர்ந்த காற்றினால் உண்டாகின்ற சீரான அலைகள் திரைச்சீலையாக விளங்குகின்றன.
அக்குளத்தில் மலர்ந்திருக்கின்ற தாமரை மலர்கள், அந்த நாட்டிய
நிகழ்ச்சியைக் கண்டு களிப்பவர்களுக்காக தங்கள் தலைகளைத் தூக்கி விளக்குகளாகத் தோன்றுகின்றன.
அங்கே மத்தள ஓசையும் கேட்கின்றதே! அது
எங்கேயிருந்து வருகின்றது?
ஓ.... மேகக் கூட்டங்கள் இக்காட்சியைக் காண்பதற்காகத்
தங்களுக்குள் போட்டி போட்டுக்கொண்டு வரும்பொழுது, ஒன்றோடு
ஒன்று இடித்துக்கொண்டு, மத்தள ஓசையை எழுப்புகின்றனவோ?
அச்சோலையிலே உள்ள மலர்களில் மொய்க்கின்ற வண்டுகள் மகர
யாழின் இசையைப் போல ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கின்றன. அங்கே வளரும் குவளைக்
கொடிகளில் உள்ள குவளை மலர்கள் தங்கள்
கண்களை அகல விரித்து அந்த நாட்டிய நிகழ்ச்சியைக் கண்டு ரசித்துக் கொண்டிருக்கின்றன. இதுபோன்ற அழகியக்
காட்சிகளை இவ்வுலகிற்குக் காட்டிக் கொண்டு ‘மருதம்’ என்ற நாயகி பெருமிதத்துடன் அங்கே வீற்றிருக்கின்றாள். என்னே அந்த மருதநிலத்தின் அழகு!
கம்பனின் அந்தப் பாடல் :
தண்டலை மயில்கள் ஆட, தாமரை விளக்கம் தாங்க,
கொண்டல்கள் முழவின் ஏங்க, குவளை கண் விழித்து
நோக்க,
தெண் திரை எழினி காட்ட, தேம் பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட, - மருதம்
வீற்றிருக்கும் மாதோ.
(பாலகாண்டம், நாட்டுப் படலம், 36)
இந்தப் பாடலிலே, மருத நிலத்திலே உள்ள சோலையை நாட்டிய மேடையாகவும், மயில்களை நடன மாதர்களாகவும், குளங்களில் உண்டாகும் அலைகளைத்
திரைச்சீலையாகவும், தாமரை மலர்களை விளக்குகளாகவும், மேகக் கூட்டங்களை மத்தளங்களாகவும், வண்டுகளின்
ரீங்காரத்தை மகர யாழின் இசையாகவும், குவளை மலர்களை இக்காட்சிகளை
யெல்லாம் கண்டுகளிக்கின்ற பார்வையாளர்களாகவும் சித்தரித்து மருத நிலத்தின் சிறப்பைக்
கம்பன் நம் கண் முன்னே கொண்டுவந்து நிறுத்துகின்றான்.
(உவமைகள்
தொடரும்)
கம்பன் கண்ட உவமைகளை எங்களுக்கு வழங்கும் தங்களது இந்த பணி தொடர வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி நண்பரே. என்னால் இயன்றவரை இப்பணியைத் தொடருவேன். சங்க இலக்கியங்களையும் சற்று தொடரவண்டுமென்று எண்ணுகிறேன். பார்க்கலாம்,
Deleteஆற்றில் நடக்கும் நாடகம்… கம்பனின் வரிகளில்… அபாரம்…
ReplyDeleteநன்றி
Deleteromba nalla iruku mama.epo post panalum enaku mail pannunga.
ReplyDeleteThanks Abi
Delete