Pages

Friday, 4 April 2014

சிறார்க்குத் தமிழ் கற்பிக்கப் பயன்படும் உத்திகள்

சென்ற ஆண்டு கோலாலம்பூரில் நடைபெற்ற 10ஆவது உலகத் தமிழாசிரியர் மாநாட்டில் படைக்கப்பெற்ற  கட்டுரை.

சிறார்க்குத் தமிழ் கற்பிக்கப் பயன்படும் உத்திகள்

அன்பு ஜெயா, சிட்னி, ஆஸ்திரேலியா

அறிமுகம்

புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் சிறுவர்களுக்குத் தமிழை இரண்டாம் மொழியாகக் கற்பிக்கத் தாயகத்தில் கற்பிக்கும் முறையிலிருந்து சற்று வேறுபட்டுச் சில புதிய உத்திகளைப் பயன்படுத்தவேண்டியுள்ளது. அப்படிப்பட்ட வழிமுறைகளை ஆராய்வது இக்கட்டுரையின் கருவாகும். ஆஸ்திரேலியாவில் பெரும்பாலான மாணவர்களுக்கு வாரத்தில் இரண்டு மணி நேரம் மட்டுமே தமிழ் கற்பிக்கப்படுகிறது. மற்ற நேரங்களில் பெரும்பகுதியை அவர்கள் ஆங்கிலச் சூழலிலேயே கழிக்கின்றனர். எனவே, அவர்களைத் தமிழ்ப் பள்ளிக்கு வரவைப்பதற்கும் தமிழ் கற்பதற்கும் ஊக்குவிக்க வேண்டிய அவசியம் உள்ளது. அதற்காக ஆசிரியர்கள் மாணவர்களுக்குத் தமிழ் கற்பதில் ஈடுபாட்டை உண்டாக்கப் புதிய முறைகளைக் கையாள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர். எனவே, மாணவர்களுக்கு முழுநேரப் பள்ளிகளில் பழக்கமாகியுள்ள சில விளையாட்டு முறைகளை தமிழ் கற்பித்தலில் பயன்படுத்துதல் பற்றியும், அந்த விளையாட்டுகளை வடிவமைத்தல் பற்றியும் விவரிப்பது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

வேடிக்கை விளையாட்டுகள்1

காட்சி அட்டைகளைப் பயன்படுத்திப் பல வித்தியாசமான விளையாட்டுகள், சில பாடங்களைப் பெரிய புத்தகம்கோட்பாட்டின்படி நடத்துதல், பிங்கோ விளையாட்டு,  கட்டங்களில் ஒளிந்திருக்கும் சொற்களைக் கண்டுபிடித்தல் போன்ற வழிமுறைகள் இக்கட்டுரையில் விரிவு படுத்தப்படும்.

காட்சி அட்டைகளை (Flash Cards) உபயோகித்தல்1

(1) கூர் நோக்கு (அ) நினைவாற்றல் - 1 (Concentration / Memory)

  • ஒரே மாதிரியான படங்கள் இரண்டு கொண்ட அட்டைகளின் தொகுப்புகளை (1 & 2), படங்கள் மாறிமாறி வருமாறு இரண்டு வரிசைகளில் கவிழ்த்து வைக்கவேண்டும்.
·         ஒவ்வொரு மாணவரும் ஒரு வரிசையில் உள்ள முதல் அட்டையை எடுத்து, அந்தப் படத்தில் உள்ள உருவத்தின்  பெயரைச் சொல்ல வேண்டும். பெயரைச் சொல்லாவிடில் அட்டையைக் மீண்டும் கவிழ்த்து வைத்துவிட்டு அடுத்த மாணவருக்கு வழிவிடவேண்டும்.
·         பெயரைச் சரியாகச் சொன்னால் அடுத்த வரிசையில் உள்ள ஏதாவது ஒரு அட்டையை எடுக்க வேண்டும்.
·         முதலில் அவர் எடுத்த படமும் இரண்டாவது எடுத்த படமும் ஒன்றாக இருந்தால் அந்த இரண்டு படங்களையும் அவர் வைத்துக் கொள்ளலாம். இல்லையெனில் படங்களை இருந்த இடத்திலேயை வைத்துவிட்டு அடுத்த மாணவருக்கு வழிவிடவேண்டும்.
·         இப்படி அனைத்து அட்டைகளும் மாணவர்கள் கைப்பற்றியதும் ஆட்டம் நிறைவடையும். எந்த மாணவர் அதிகமான அட்டைகளைக் கைப்பற்றுகிறாரோ அவரே வெற்றிபெற்றவர்.

(2) கூர் நோக்கு (அ) நினைவாற்றல் - 2 (Concentration / Memory)


மேற்குறிப்பிட்ட விளையாட்டில் ஒரு குழுவில் படங்களும் மற்றொருக் குழுவில் அப்படங்களுக்கான பெயர்களும் உள்ள காட்சி அட்டைகளைப் பயன்படுத்தலாம்.

(3) முந்துதல் (Snap) 

      காட்சி அட்டைகளை படங்கள் தெரியுமாறு மேசையின் மீது அடுக்கி வைக்கவேண்டும். மாணவர்கள் சுற்றி அமர்ந்து கொள்ளவேண்டும்.
      பின்பு, ஆசிரியர் அந்தப் படங்களின் பெயர்களுள் ஒன்றைக் கூறுவார்.
      அந்தப் பெயருக்கான படத்தை முதலில் தொடும் மாணவர் அந்தப் படத்தை வைத்துக்கொள்ளலாம்.
      அனைத்துப் படங்களும் முடியும் வரை இந்த விளையாட்டைத் தொடரலாம்.

(4) நாயும் எலும்பும் (Dog and Bone)

      மாணவர்கள் இரண்டு குழுக்களாக வரிசையில் அமர்ந்திருப்பார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு அடையாள எண் கொடுக்கப்படும்.
       காட்சி அட்டைகள் படங்கள் தெரியும்படி மேசையில் மாணவர்களின் மத்தியில் வைக்கப்படும்.
       ஆசிரியர் ஒரு படத்தின் பெயரையும் ஒரு அடையாள எண்ணையும் கூறுவார்.
      அந்த எண்ணுக்கு உரிய மாணவர்கள் ஆசிரியர் கூறிய படத்தைத் தொடவேண்டும். எந்த மாணவர் முதலில் தொடுகிறாரோ அவரது குழுவிற்கு ஒரு மதிப்பெண் வழங்கப்படும்.
      இந்த விளையாட்டின் முடிவில் எந்தக் குழு அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளதோ அந்தக் குழுவுக்கு வெற்றி.

படங்களுக்குப் பதிலாக பெயர்களையும் பயன்படுத்தலாம்
  

(5) ஈ அடித்தல் (Fly swat)

      காட்சி அட்டைகளைக் கரும்பலகையில் ஒட்டி வைக்க வேண்டும்.
      மாணவர்கள் இரண்டு குழுக்களாக வரிசையில் நிற்கவேண்டும்.
      இரண்டு குழுவிலும் முதலாக நிற்கும் மாணவரிடம் ஈ அடிக்கும் மட்டை ஒன்று கொடுக்கப்படும்.
      ஆசிரியர் காட்சி அட்டைகளில் உள்ள ஒரு படத்தின் பெயரைச் சொல்வார்.
      முதலில் நிற்கும் மாணவர்களில் யார் முதலில் அந்தப் பெயருக்கான அட்டையைத் தட்டுகிறாரோ அவரது குழு ஒரு மதிப்பெண் பெறும்.

(6) மறைந்த சொல்லைக் கண்டுபிடித்தல் (Guess the missing word)

      மாணவர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்படுவர்.
      ஆசிரியர்  ஐந்து ஆறு காட்சி அட்டைகளை பலகையில் ஒட்டவேண்டும்.
      மாணவர்கள் அந்த அட்டைகளை சில வினாடிகள் பார்த்துவிட்டுக் கண்ணை மூடிக்கொள்ளவேண்டும்.
      ஆசிரியர் அந்த அட்டைகளில் ஒன்றை எடுத்துவிடுவார்.
      பிறகு, மறைந்த அட்டையிலிருந்த பெயர் என்னவென்று மாணவர்கள் சொல்லவேண்டும்.
      முதலில் சரியாகச் சொல்லும் குழுவிற்கு ஒரு மதிப்பெண்.

பெயர்களுக்குப் பதிலாகப் படங்களையும் பயன்படுத்தலாம்.

(7) ஆடு புலி ஆட்டம் (Noughts and Crosses O & Xs)

      மாணவர்கள் பழக வேண்டிய சொற்களை ஆசிரியர் பலகையில் எழுதி, ஆடு-புலி கட்டமும் வரையவேண்டும்.
      மாணவர்கள் இரண்டு குழுக்களாக  (O குழு, X குழு) பிரிக்கப்படுவர்.
      O குழுவிலுள்ள ஒரு மாணவர் அந்த சொற்களில் ஒன்றை கட்டத்தில் ஓர் இடத்திற்கு நியமித்து, அந்த சொல்லைப் பயன்படுத்தி ஒரு வாக்கியம் கூறவேண்டும். அப்படிச்சொன்னால் மாணவர் நியமித்த கட்டத்தில் O குறியிடுவார்.
      அதே போன்று அடுத்த குழுவிலுள்ள மாணவர் கட்டத்திலுள்ள ஓர் இடத்தை நியமித்து, வாக்கியத்தைக் கூறினால் அந்தக் கட்டத்தில் ஆசிரியர் X குறியிடுவார்.
      மூன்று O அல்லது X ஒரே வரிசையில் வரும்வரை இந்த விளையாட்டு தொடரும்.

பெயர்களுக்குப் பதிலாக படங்களையும் பயன்படுத்தலாம். மாணவர்கள் படத்தின் பெயரைக் கூறவேண்டும்

(8) இணை சேர்த்தல் (Matching)

      ஒரு குழுவிடம் படங்கள் உள்ள காட்சி அட்டைகளும் மற்ற குழுவிடம் அப்படங்களுக்கான பெயர்கள் உள்ள அட்டைகளும் கொடுக்கப்படும்
      குழு 1-ல் உள்ள மாணவர் ஒருவர் ஒரு படத்தை பலகையில் ஒட்டுவார். குழு 2-ல் உள்ள ஒரு மாணவர் அந்தப் படத்தின் பெயருள்ள அட்டையை பலகையில் ஒட்டவேண்டும்.
      அது சரியாக இருந்தால் குழு 2-க்கு ஒரு மதிப்பெண்.
      பிறகு, குழு 2-ல் உள்ள மாணவர் பெயருள்ள அட்டையை ஒட்டுவார். குழு 1-ல் உள்ள மாணவர் அதற்கான படத்தை ஒட்டவேண்டும். இப்படி விளையாட்டைத் தொடரலாம்.

பெரிய புத்தகம் முறை (BigBook/Shared Reading concept)2

இம்முறையின்படி தொடர்ச்சியான சில படங்களைக் கொண்டு ஒரு பாடத்தை நடத்தலாம், கதையை சொல்லாம், அவற்றை மாணவர்களைச் சேர்ந்து படிக்கச்செய்யலாம். உதாரணமாக, என் காய்கறித் தோட்டம் என்ற பாடம் நடத்துதல் பற்றி இங்கு நோக்குவோம். இதற்காக சில படங்களைச் சேகரிக்க வேண்டும். சாதாரண புத்தகத் தாளைவிடப் பெரிய அளவில் உள்ள தாள்களில் ஒரு பக்கத்துக்கு ஒரு படமும் அதை விளக்க ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்கள் மட்டுமே உள்ளவாறு ஒரு புத்தகத்தை தயாரிக்கவேண்டும்.

சில பக்கங்களுக்கான உதாரணம்: 
  • ·         என் காய்கறித் தோட்டம்
  • ·         என் தோட்டத்தில் காய்கறிகள் வளர்க்க ஆசைப்பட்டேன். அதற்காக நிலத்தைக் கொத்தி மண்ணைத் தயார் செய்தேன்.
  • ·         பல செடிகளுக்கான விதைகளை வாங்கி வந்தேன்.
  • ·         விதைகளை மண்ணில் நட்டு வைத்தேன்
  • ·         விதைகள் நட்ட இடத்தில் தண்ணீர் ஊற்றி வந்தேன்
  • ·         விதைகள் நாற்றுகளாக வளர ஆரம்பித்தன
  • ·         வளர்ந்த நாற்றுகளை பாத்திகளில் நட்டு வைத்தேன்
  • ·         நாற்றுகள் சிறிய செடிகளாக வளர ஆரம்பித்தன
  • ·         பூக்களில் இருந்து காய்கள் காய்த்தன.
  • ·         இப்படி என் தோட்டத்தில் பலவித காய்கள் காய்த்தன.
  • ·         இதன் பெயர் கத்திரிக்காய். இதன் நிறம் ஊதா.
  • ·         இதன் பெயர் வெள்ளரிக்காய். இதன் நிறம் பச்சை.
இப்படிப் பல விதமான காய்கறிகளை மாணவர்களுக்கு அறிமுகப் படுத்தி அவர்களை பெரிய புத்தகத்தைப் படிக்கப் பயிற்சி அளிக்கலாம்.

பிங்கோ விளையாட்டு (Bingo game) 3&4


பெரிய புத்தகத்துக்குச் சேகரித்த படங்களையே பயன்படுத்தி 'பிங்கோ' விளையாட்டையும் தயார் செய்து கற்பிக்கலாம்.

மாணவர் அட்டைகள்:

இதற்காக அட்டைகளில் சுமார் 9 காய்களின் படங்கள் வேறுவேறு கூட்டுகளாக உள்ளவாறு தயாரிக்கவேண்டும். எந்த அட்டையிலும் அதே 9 படங்கள் கூட்டாக வராதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.

ஆசிரியர் அட்டைகள்:

அனைத்து மாணவர் அட்டைகளிலும் உள்ள படங்கள் தனித்தனியாக ஒரு அட்டையில் ஒரு படம் மட்டும் உள்ளது போல் தயாரித்துக்கொள்ளவேண்டும்.

விளையாட்டு முறை:

மாணவர் அட்டைகள் ஒவ்வொரு மாணவருக்கு ஒரு அட்டை அல்லது ஒரு குழுவினருக்கு ஒரு அட்டை வீதம் கொடுக்கவேண்டும்.
ஆசிரியர் தன்னிடம் உள்ள அட்டைகளில் ஒன்றை எடுத்து அந்தப் படத்திலுள்ள காயின் பெயரைச் சொல்லுவார். எந்த மாணவர்கள் வைத்திருக்கும் அட்டைகளில் அந்தப் படம் இருக்கிறதோ அந்த மாணவர்கள் அதைக் குறியிட்டுக்கொள்ளவேண்டும்.  இப்போது சில மாணவர்கள் அட்டைகளில் ஒன்பதில் எட்டு படங்கள் குறியிடப்படாமல் இருக்கும். சில மாணவர் அட்டைகளில் ஒன்பது படங்களுமே குறியிடப்படாமல் இருக்கும்.

ஆசிரியர் தன்னிடமுள்ள அடுத்த அட்டையிலுள்ள படத்தின் பெயரைச் சொல்லவேண்டும். எந்த மாணவர்கள் வைத்திருக்கும் அட்டைகளில் அந்தப் படம் உள்ளதோ அவர்கள் அதைக் குறியிடுவார்கள் (குறியிட Blutac போன்ற ஒட்டாத பசைகளைப் பயன்படுத்தலாம்). இப்படி அட்டையிலுள்ள 9 படங்களிலும் எந்த மாணவர் முதலாவதாகக் குறியிடுகிறாரோ அவர் 'பிங்கோ' என்று சொல்ல வேண்டும். அந்த மாணவர் அல்லது குழு வெற்றிபெற்றவராவர். சில சமயங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட மாணவர்களும் ஒரே நேரத்தில் வெற்றிபெறலாம்.

கட்டங்களில் உள்ள சொற்களைக் கண்டுபிடித்தல்


ஒரு பெரிய சதுரத்தில் குறுக்கு நெடுக்கு இரண்டு பக்கமும் 10 அல்லது 15 சிறிய கட்டங்கள் உள்ளபடி வரைவேண்டும். ஒரு கட்டத்தில் ஒரு எழுத்து வீதம் காய்களின் பெயர்களை எழுதவேண்டும். அதன்பின், வெற்றுக் கட்டங்களில் சில எழுத்துக்களை எழுதி கட்டங்களை நிரப்பவேண்டும். மாணவர்கள் கட்டங்களில் மறைந்திருக்கும் காய்களின் பெயர்களைக் கண்டுபிடிக்கவேண்டும். இதன் மூலம் அவர்களுக்கு காய்கறிகளை தமிழில் அடையாளம் காணவும் படிக்கவும் கற்றுக்கொள்ள முடியும்.

முடிவுரை


மேற்குறிப்பிட்ட உத்திகளைப் பயன்படுத்திக் கற்பித்தல் பலனளிப்பதுடன் மாணவர்களுக்கு தமிழ் கற்பதில் ஆர்வத்தையும் ஏற்படுத்துகின்றது. இவற்றில் சில முறைகளைக் கணினி மூலமாக பயிற்றுவித்தல் மாணவர்களுக்கு மேலும் உற்சாகத்தை அளித்து அவர்கள் தமிழ் கற்க உதவுகின்றது.

சான்றுக் குறிப்புகள்/References






---------------------------------------------------

4 comments:

  1. Replies
    1. தங்கள் கருத்துக்கு நன்றி. மாணவர்களுக்குப் பயனுள்ள மேலும் சில பயிற்சிகளை என்னுடைய இணையதளத்தில் காணலாம்
      www.anbujaya.com

      Delete

உங்கள் கருத்துக்கள்: