Pages

Monday, 12 May 2014

சங்க இலக்கியத் தூறல் - 2 : தாய்மையின் தனிச்சிறப்பு

சங்க இலக்கியத் தூறல் - 2


(தினமணி-தமிழ்மணி - 5 மே-2014 அன்று வெளியிடப்பட்ட கட்டுரை)
தாய்மையின் தனிச்சிறப்பு
-    அன்பு ஜெயா, சிட்னி


மன்னன் பணியை நிறைவேற்றுவதற்காக தலைவன் தன் காதல் தலைவியைப் பிரிந்து மன்னனுடன் போருக்குச் செல்கிறான். அங்குப் பகை அரசர்கள் அரிய பொருள்களையும், அணிகலன்களையும் திறைப் பணமாகச் செலுத்துகிறார்கள். அதனால் மன்னனின் பகைமை உணர்வு தணிந்து போர் நிறைவு பெறுகின்றது. போர் முடிந்ததால் தலைவனும் நாடு திரும்பவேண்டிய நேரம் வந்தது.
அது கார் காலத்திலே ஓர் இனிய மாலைப்பொழுது.  மேகக் கூட்டங்கள் இடியுடன் மழையைப் பொழிகின்றன. அப்பொழுது சிறந்த ஓவியத்தைப் போல, சிவந்த நிற இந்திரகோபப் பூச்சிகள் (தம்பலப் பூச்சிகள்) எல்லா இடங்களிலும் பரவித் திரிகின்ற காட்சி நிலத்தை செந்நிறமாக தோன்றச் செய்கின்றது. அந்த ஈரப்பசையுள்ள நிலத்தில், தேரின் சக்கரங்கள் பதிய, தேரை விரைந்து செலுத்துமாறு தலைவன் தேர்ப்பாகனிடம் கூறுகின்றான். அந்த நேரத்தில் தன்னுடைய ஊரிலே நடக்கின்றது போல சில காட்சிகள் அவன் மனத்திரையில் ஓடுகின்றன.

அரும்புகள் மலரும் அந்த மாலைப் பொழுதில். பசுக்கூட்டங்கள் முன்னே செல்ல, மேய்ப்பர்கள் புல்லாங்குழலை ஊதிக்கொண்டும், கையில் கோலுடனும் மெல்ல நடந்து செல்கின்றார்கள். பசுக்களோ தங்கள் பெருத்த மடிகளில் உள்ள பாலின் சுமையை, இல்லங்களிலே கட்டி வைக்கப்பட்டு பசியோடு இருக்கும் தம் கன்றுகளுக்கு ஊட்டுவதன் மூலம், இறக்கி வைக்க எண்ணித் தங்கள் கழுத்திலுள்ள மணிகள் ஒலிக்க வீடுகளை நோக்கி விரைந்து நடந்துகொண்டு இருக்கின்றன.
தனக்கென வாழாமல் பிறருக்காக வாழ்கின்ற பண்ணன் என்பவனின் தோட்டத்தில் உள்ள நெல்லிக்காய்களைத் தின்றபின் தண்ணீர் குடிக்கும்போது கிடைக்கின்ற சுவையைப் போல, தன் மகனுக்குத் தலைவி சோறு ஊட்டுகின்ற அழகிய காட்சி தலைவன் கண் முன்னே தோன்றுகின்றது.

தன் மகனுக்கு நிலவைக் காட்டி அந்த நிலவிடம், “நீ என் மகனுடன் விளையாட இங்கு வருவாயானால் உனக்கும் பால் தருவேன்” என்று அழைத்து, மகனுக்கு விளையாட்டு காட்டிச் சோறு ஊட்டுகின்றாள்.  அந்தக் காட்சியைத் தலைவன் நேரில் கண்டுகளிக்க வேண்டுமென்ற ஆசையில்  அதை பாகனிடம் தெரிவித்துத் தேரை விரைவாகச் செலுத்துமாறு கூறுகின்றான்.

இக்காட்சிகளை மாற்றூர்கிழார் மகனார் கொற்றங்கொற்றனார் பின்வரும் அகநானூற்றுப் பாடலில் அருமையாகப் படம் பிடித்துக் காட்டுகின்றார்.


(வினை முடிந்து மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது – அகநானூறு 54: 1-22)

“விருந்தின் மன்னர் அருங்கலம் தெறுப்ப,
வேந்தனும் வெம் பகை தணிந்தான்; தீம்பெயல்
காரும் ஆர்கலி தலையின்று, தேரும்
ஓவத் தன்ன கோபச் செந்நிலம்,
வள்வாய் ஆழி உள் உறுபு உருளக்     5
கடவுக காண்குவம்  பாக மதவு நடைத்
தாம்பு அசை குழவி வீங்கு சுரை மடியக்,
கனையலம் குரல கால் பரி பயிற்றிப்,
படு மணி மிடற்ற பய நிரை ஆயம்
கொடு மடி உடையர் கோல் கைக் கோவலர்    10
கொன்றை அம் குழலர் பின்றைத் தூங்க,
மனை மனைப் படரும் நனை நகு மாலைத்,
தனக்கென வாழாப் பிறர்க்கு உரியாளன்
பண்ணன் சிறுகுடிப் படப்பை நுண் இலைப்
புன் காழ் நெல்லிப் பைங்காய் தின்றவர்       15
நீர் குடி சுவையின் தீவிய மிழற்றி,
முகிழ் நிலாத் திகழ் தரும் மூவாத் திங்கள்!
பொன்னுடைத் தாலி என் மகன் ஒற்றி,
வருகுவை ஆயின், தருகுவென் பால் என,
விலங்கு அமர்க் கண்ணள் விரல் விளி பயிற்றித்,    20
திதலை அல்குல் எம் காதலி
புதல்வன் பொய்க்கும் பூங்கொடி நிலையே!“  (அகநானூறு – 54: 1-22)

இந்தப் பாடலில், பண்ணன் எப்படி தனக்கென வாழாமல் பிறருக்காக வாழ்கின்றானோ அதேபோல தலைவியும் தனக்கென  வாழாமல் தன் தலைவனுக்காகவும் பிள்ளைகளுக்காவும் வாழ்பவள் என்பதும், பசுக்களும் தங்கள் கன்றுகளுக்காக வாழ்கின்றன என்பதும் ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பசுக்கள் தங்கள் கன்றுகளுக்குப் பாலூட்ட விரைவதைப் போல, தலைவி தன் பிள்ளைக்கு எப்படி விளையாட்டுக் காட்டிச் சோறூட்ட விழைகின்றாள் என்று தாய்மையின் தனிச் சிறப்பு ஒப்பீடு செய்யப்படுவதுடன் விலங்கினங்களுக்கு உள்ள தாய்மை உணர்வும் அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.  
---------------------------------------------


2 comments:

  1. அகநானூற்றுப் பாடலைக் கொண்டு, அருமையாக தாய்மையின் சிறப்பை சொல்லிவிட்டீர்கள். வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.

      Delete

உங்கள் கருத்துக்கள்: