குன்றும்
கண்ணீர் சிந்துகின்றதே.....
--- அன்பு ஜெயா, சிட்னி
ஒரு தலைவனும் தலைவியும் திருமணம் ஆவதற்கு முன்பே
அடிக்கடி சந்தித்து, காதல் வயப்பட்டு களவு ஒழுக்கத்தில்
மூழ்கி இருந்தனர். அடுத்த நிலையான கற்பு ஒழுக்கம் என்னும் திருமண வாழ்வுக்குள் நுழைவது
பற்றி முடிவு செய்யாமல் தலைவன் காலம் தள்ளிக்கொண்டே இருந்தான். இதனால் தலைவியோ
மனம் தளர்ந்து, உடல் தளர்ந்து வருத்தத்தில் மூழ்கி
இருக்கிறாள். இதைக்கண்ட அவளுடைய தோழி தலைவியின் துயரத்தைத் தீர்க்க என்ன வழி
இருக்கிறது என்று சிந்தித்துக் கொண்டிருந்தாள்.
இப்படி இருக்கையில் ஒருநாள், தலைவியைக் காண்பதற்காகத் தலைவன் வேலியோரத்தில் வந்து
நிற்கின்றான். இதைப் பார்த்துவிட்ட தோழி அவனைப் பார்க்காததுபோல இருந்தாள்.
அதேசமயம். அவளுடைய மனதில் தன் தலைவியின் மனக்கவலையை தலைவனுக்கு உறைக்குமாறு கூறி, அவனைத் திருமணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யத் தூண்டவேண்டுமென்று
முடிவுசொய்தாள். அதற்காக, தலைவனைப் பாராததுபோல்
இருந்துகொண்டு, ஆனால் அவன் காதில் விழுவதுபோல தலைவியிடம் உரக்கப்
பேசத் தொடங்கினாள்.
“தோழி! நாம் முற்பிறவியில் செய்த வினையின்
பயனே நமக்கு எதிராக இருக்கும்போது நீ வருத்தப்பட்டு, மனம்
கலங்கி, உடல் மெலிவது சரியா? வருந்தப்படாமல்
இரு. நீ நல்லபடியாக நீடூழி வாழ்வாய். உன்னுடைய துன்பத்தை தலைவன் அறியும்படி
அவருடைய இடத்திற்குப் போய்ச் சொல்லிவிட்டு வருவோம். என்னுடன் வா. வெண்ணிற அலைகளை உடைய கடல் நீரினால் விளைகின்ற உப்பு, மழை நீரினாலேயே கரைந்து கெடுவதுபோல
நீ ஏன் உள்ளம் உருகி நிலைகுலைந்து போயிருக்கின்றாய்? அதை
நினைத்தால் எனக்கு வேதனையா இருக்கிறது. தலைவனுடைய ஊரில், எல்லா
இடங்களிலும் பழவகைகள் கனிந்து உதிர்ந்துள்ள சோலைகளைக் கொண்ட,
குன்று கூட தலைவன் உனக்குச் செய்த கொடுமையைக் கண்டு, தலைவன்
தனக்கே செய்த கொடுமையைப் போல எண்ணி, வருத்தத்தைத் தாங்க
முடியாமல் தங்கள் கண்ணீரை அருவியாகக் கொட்டுகின்ற காட்சியை நாம் அங்கு
பார்க்கலாம். அப்படி உன் கவலையைக் கண்டு கல்லே கரையும்போது தலைவன் உன் கவலையைத்
தீர்க்காமல் இருப்பானா?” என்று கூறி தலைவியை அழைத்துக்கொண்டு
போவதற்கு தயாராவதுபோல் கூறினால்.
இந்தக் காட்சியை நல்லந்துவனார் என்ற புலவர்
பின்வரும் பாடலில் படம்பிடித்துக் காட்டியுள்ளார்.
யாம்செய் தொல்வினைக்கு எவன்பேது உற்றனை
வருந்தல் வாழி தோழி யாம்சேர்ந்து
உரைத்தனம் வருகம் எழுமதி புணர்திரைக்
கடல்விளை யமிழ்தம் பெயற்குஏற் றாஅங்கு 5
உருகி உகுதல் அஞ்சுவல் உதுக்காண்
தம்மோன் கொடுமை நம்வயின் ஏற்றி
நயம்பெரிது உடைமையின் உயங்கல் தாங்காது
கண்ணீர் அருவி யாக
அழுமே தோழிஅவர் பழமுதிர் குன்றே.
--- நல்லந்துவனார் (நற்றிணை, 88)
(பாடலின் திணை:
குறிஞ்சி; துறை: சிறைப்புறமாக தோழி தலைவிக்குச்
சொல்லியது)
தொல்வினை – ஊழ்வினை, எழுமதி – எழுந்துவா, கடல் விளை
அமுதம் – உப்பு, உகுதல் – நிலைகுலைதல்,
உதுக்காண் – அதோ பார், நம்வயின் ஏற்றி – தமக்கு செய்ததாக
ஏற்று, உயங்கல் – வருத்தம்.
---------------------
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்: