Pages

Friday, 1 November 2024

அன்பு ஜெயாவின் மரபுப் பாக்கள் - தொகுதி 7

 மரபுப் பாக்கள் -  தொகுதி 7

19) இணங்கமறு  பகைக்கு.

 

பா வகை: கழி நெடிலடி ஆசிரிய அறுசீர் மண்டிலம். (காய்+ மா+மா)

 

நட்பினையே வணங்கி வாழ்வாய்;

நஞ்சுபோன்ற பகையை எதிர்ப்பாய்;

திட்டமிட்டே அடக்க வந்தால்

திறமுடனே விரட்டி அடிப்பாய்;

கட்டமைப்பே எதிராய் நின்றால்

கலங்காதே! துணிவாய் எதிர்கொள்;

பட்டத்து யானைக் கிணையாய்

பகைவரையும் வென்று வாழ்வாய்!

-----------------------------------------------------

20) தழைத்திட தன்னலம் துற.

 

 பா வகை: கழி நெடிலடி ஆசிரிய அறுசீர் மண்டிலம். (காய்+ மா+மா)

 

பிறர்நலம்தான் பேண வேண்டும்,

     பிள்ளைகளும் அறிய வைப்போம்,

பிறப்பால்நாம் எல்லாம் ஒன்றே,

     பித்தனவன் படைத்த நிலையே!

பிறவிதனில் தனக்கே எல்லாம்

     பிரித்தளிக்க மாட்டேன் என்பான்

பிறவியினால் பயன்தான் உண்டோ?

     பிறர்க்களித்தே அறம்தான் வளர்ப்போம்!

----------------------------------------------------------

21) நன்மையை நாடிச் செய்.

பா வகை: கழி நெடிலடி ஆசிரிய அறுசீர் மண்டிலம். (காய்+ மா+மா)

 

உலகெங்கும் ஏழை மக்கள்

    உணவுமின்றி வாடும் காட்சி;

பலருக்கும் இணைந்தே நாமும்

    பயன்தன்னை அளித்துக் காப்போம்!

சிலர்மட்டும் இணைந்தால் கூடச்

    செம்மையானச் செயலாய் முடியும்;

மலர்ந்திடுமே அவர்கள் வாழ்வும்

    மனமுவந்தே தொண்டு செய்வோம்!

 -------------------------------------------------------------------------

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்: