மரபுப் பாக்கள் - தொகுதி 11
32) கடலாய் மனத்தை விரி.
கழி நெடிலடி ஆசிரிய எழுசீர் மண்டிலம்.
காற்றும் மழையும் கலந்தே அடித்தும்
கலங்கா அந்தக் கடல்போல,
ஏற்றம் இறக்கம் என்று வாழ்வில்
ஏது வந்தும் கலங்கிடாதே!
தூற்றல் போலத் துன்பம் ஓர்நாள்
துவண்டே அழியும் துணிவுபெற்று,
நாற்றம் தரும்நன் மலர்போல் யாவர்க்கும்
நன்மை செய்தே மகிழ்ந்திருப்பாய்!
----------------------------------------------------------------------------------------------------------------------------
33) காத்தல் கடனே.
கழி நெடிலடி ஆசிரிய எழுசீர் மண்டிலம்.
பெற்ற பிள்ளை நலமாய் வளரப்
பேணிக் காத்தல் பெற்றோர்க்கு,
பெற்றோர் நலமும் பிந்நாள் தன்னில்
பெரிதும் காத்தல் பிள்ளைக்கு,
உற்ற கல்வி உவந்தே அளித்து
உயர்த்தல் கல்வி யாளர்க்கு,
சற்றே அவர்தம் கடமை உணர்ந்தால்
சார்ந்தே வாழ்வும் சிறந்திடுமே!
------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்: