மரபுப் பாக்கள் - தொகுதி 18
52) சொல்லிற்கே
வலிக்காமல் சொல்.
தன்னை உயர்த்தியே மற்றோர் அனைவரும் தனக்குக் கீழென
தருக்கும் கொள்பவர்
தாழ்வரே!
உன்னால் இயன்றதை உதவத் தவறினும் கேட்போர் உள்ளமும்
உறுத்தும் சொல்தனைத்
தவிர்த்திடு!
மென்மைச் சொற்களால் பிறரின் மனங்களை வென்று வாழ்ந்திடும்
மேலோர் மேன்மையும் அடைவரே!
அன்பு மட்டுமே அனைவர் மனத்திலும்
நின்று என்றுமே
ஆளும் என்பதை உணர்ந்திடு!
------------------------------------------------------------------------------------------------------
53) சோற்று மாடாய் இராதே.
பா வகை: கழி நெடிலடி ஆசிரிய ஒன்பான் சீர் மண்டிலம்.
பெற்றோர்
சுமைதனைக் குறைக்கச் செய்திடு, அவர்க்குச் சுமையெனப்
பெரிதும் வாழ்வதைத் தவிர்த்திடு!
பெற்ற
வாழ்வினை வெட்டிப் பேச்சினில் கழித்துப் புவி்க்குமே
பெரிய சுமையெனத் திரிவதேன்?
உற்ற
வேலையில் உழைத்தே வாழ்வினை நீயும் மாற்றிடில்
உன்னை உறவுகள் போற்றுமே!
பெற்ற
தாயுமே உன்னைப் பெற்றதன் பயனை எண்ணியே
பெறுவாள் மகிழ்ச்சியைப் பெரிதுமே!
-----------------------------------------------------
54) தமிழே மொழிகளின் தாய்.
மொழியில்
சிறந்தது தமிழே! உலகினில் வாழும் மொழிகளில்
மூத்த ஒன்றுமே எம்மொழி!
வழியாய்ப்
பிறந்தவை மற்ற மொழியெலாம் என்றே உணர்தலும்
வாழ்வில் பெருமையை அளிக்குமே!
வழியாய்
வந்தவை கிளைகள் என்றுநாம் வாழ்ந்தால் நம்மின
வாழ்வும் மகிழ்ச்சியில் திளைக்குமே!
மொழியின்
சிறப்பினைப் போற்றி நாமெலாம் என்றும் நம்மொழி
முன்னே சென்றிட உழைப்பமே!
-----------------------------------------------------
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்: