மரபுப் பாக்கள் - தொகுதி 17
49) செய்தி நாளும் படி.
பா வகை: கழி நெடிலடி எண்சீர் ஆசிரிய மண்டிலம்
நாட்டதன் செய்தியைத் தாளிலே வாசிநீ,
நாள்தொறும் நடப்பவை
நயமுடன் அறிந்திடு!
பாட்டினில் நயன்மையும் பகர்ந்தனர் அன்றுமே;
படிப்பதைப் போற்றியே,
செய்தியும் அப்படி!
நாட்டினில் தீமைகள் நலிந்திட,
நாடுமே
நன்மையும் தீமையும்
அறிந்திட உதவுமே!
காட்டினில் தீயெனப் பரவிடும் செய்தியைக்
கருத்துடன் பகுத்துநீ
நல்லவை ஏற்றிடு!
------------------------------
50) சேர்ந்து வாழ்தல் சீர்.
பா வகை: கழி நெடிலடி எண்சீர் ஆசிரிய மண்டிலம்.
நம்மையும்
இனமென வகுப்பெனப் பிரிப்பவர்
நம்மிடை இன்றுமே வாழ்வதை எதிர்த்திடு!
நம்தொழில்
மட்டுமே செய்துநாம் வாழ்ந்திட
நமக்குயார் உரைப்பது? அந்தநாள் கடந்ததே!
எம்மினம்
என்றுதான் நோக்கிடா தென்றுமே
இணைந்துநாம் வாழ்ந்திடில் ஏற்றமும் பெறுவமே!
தம்மினம்
வகுப்பெனத் தனித்தினி வாழ்பவர்
தகுதியும் இழப்பரே! ஒதுக்கினோர் ஓய்வரே!
--------------------------------------------------------------------------------------------------
51)
சையென நடவாதே (சீ-யென்று
யாரும் சொல்லும்படி நடவாதே)
பா வகை: கழி நெடிலடி எண்சீர் ஆசிரிய மண்டிலம்
கல்வியைக்
கண்ணெனக் கொண்டுநீ அதையுமே
கற்றிடத் தக்கதோர்ப் பொழுதினில் கற்றிடு!
கல்வியும்
உன்னையே காலமும் காத்திடும்
காளைபோல் திரிவதைத் தடுத்துனை மாற்றிடும்!
நல்வழி
நோக்கியே நடையினைச் செலுத்திநீ,
நானிலம் போற்றிடப் புகழினைப் பெற்றிடு!
நல்லவர்
கூறிய அறிவுரை காலமும்
நல்வழிச் சென்றிட நமக்கெலாம் உதவுமே!
---------------------------------------------------------------------------
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்: