மரபுப் பாக்கள் - தொகுதி 13
37)
கூடிவாழப் பழகு.
பா வகை: கழி நெடிலடி ஆசிரிய எண்சீர்
மண்டிலம்.
பறவையைப்பார்,
பாடியவைத் திரிந்தே வாழ்ந்தும்
பறப்பதெல்லாம் என்றுமவைக் குழுவாய்த் தானே!
பிறவியென்றே
எடுத்தவர்கள் பிரிந்து வாழ்ந்துப்
பேரின்பம் காண்பதெல்லாம் இயலா தன்றோ?
அறமறிந்த நாமெல்லாம்
அணைந்து வாழ
அயராது முயன்றென்றும் அடைவோம் வெற்றி!
புறந்தள்ளிப்
பிரிவினையைப் புவியில் இன்றே
போற்றலுடன் வாழ்ந்திடுவோம், புகழும் சேரும்!
-----------------------------------------------
38) கெடுதலில்லாத்
தொழில் செய்.
பா வகை: கழி நெடிலடி ஆசிரிய எழுசீர்
மண்டிலம்
எங்கெங்கே திரும்பினாலும் புகைதான் வானில்,
எக்காலம் முடியுமிந்த இழிவாம் செய்கை?
தங்களது தொழில்மட்டும் செழிக்க எண்ணித்
தந்நலமே கருதிடுவோர் திருந்து வாரோ!
தங்களது நலம்மட்டும் நினைப்போர் தம்மின்
தந்நலத்தை வேரறுத்து புவியைக் காப்போம்!
மங்கிவரும் மக்கள்தம் நலம்தான் அன்று
மாசின்றி இவ்வுலகில் சிறப்பாய் மாறும்! (1)
இன்றுநீயும் தொழில்செய்ய விருப்பம்
கொண்டால்
இனிமையான தொழில்களிங்கே மிகையாய் உண்டே;
தொன்றுதொட்டு நம்மக்கள் நலமே காக்கும்
தொழில்களையும் தெரிவுசெய்தே வளமாய் வாழ்வாய்!
நன்றாய்நம் முன்னோர்கள் வழியில் சென்று
நம்மாழ்வார் போல்நாட்டை நலமாய்க் காப்பாய்;
இன்றேநீ ஏற்றிடுவாய் உறுதி தன்னை
இவ்வுலகின் நலமேயென் வழிதான் என்றே! (2)
-----------------------------------------------------------------------------------
39) கேள்வி
ஞானமே மேல்.
பா வகை: கழி நெடிலடி ஆசிரிய எண்சீர்
மண்டிலம்
படிக்கின்ற
நூல்களுமே தருமே ஞானம்;
பட்டறிந்த பெரியோர்தம் உரைக்கே ஈடோ?
இடித்துரைத்தே
ஆசிரியர் அளிக்கும் கல்வி
இன்பமுடன் எம்முடன்தான் இருக்கு மன்றோ!
படிப்படியாய்
நமக்கவர்கள் அளிக்கும் வாக்கே
பலகால ஞானத்தில் பிறந்த வாக்காம்!
அடிமனத்தில்
அதையுணர்ந்தே நடந்தோ மென்றால்
அரும்புவியில் நல்வாழ்வும் உறுதி யன்றோ!
-----------------------------------------------------------------------
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்: