Pages

Monday, 11 November 2024

அன்பு ஜெயாவின் மரபுப் பாக்கள் - தொகுதி 15

 மரபுப் பாக்கள் -  தொகுதி 15


43) சற்றும் உரிமையை விடாதே.

 பா வகை: கழி நெடிலடி எண்சீர் ஆசிரிய மண்டிலம்

 

நான்செல்லும் வழிதன்னைத் தேர்ந்தெடுத்தல் என்னுரிமை;

    நானெந்தப் பிரிவினையும் சேருவதென் உரிமையன்றோ!

நான்பேசும் மொழியினையும் நயமாய்நான் தேர்ந்தெடுத்தே

    நாளையயென் தலைமுறைக்கே கொண்டுசெல்லும் உரிமையுண்டே!

நான்வணங்கும் இறையும்யார் என்பதுவும் என்னுரிமை,

    நானிலத்தில் அதைப்பறிக்க மற்றவர்க்கே உரிமையேது?

வான்மீதில் வட்டமிடும் பறவைகளின் உரிமைபோல

    வாழ்நாளில் மாந்தருமே பெறவேண்டும் உரிமைதானே!

--------------------------------------------------------

44) சார்ந்து வாழேல்.

பா வகை: கழி நெடிலடி எண்சீர் ஆசிரிய மண்டிலம்

 

பெற்றோரைப் பிள்ளையென்றும் சார்ந்திருத்தல் முறையல்ல;

    பிள்ளைகளைப் பெற்றோர்தான் சார்வதுவும் அதைப்போலே!

முற்காலப் பழக்கம்தான் சார்ந்திருத்தல் என்றாலும்

    முதியோரும் சார்ந்திராதே சேர்ந்திருத்தல் நலமோசொல்!

மற்றவரைச் சாராமல் மாந்தரெல்லாம் வாழ்ந்திட்டால்

    மனவழுத்தம் இன்றியவர் மாண்புடனே வாழலாமே!

சற்றுநாமும் சிந்தித்தே நடந்துகொண்டால் நானிலத்தில்

    சந்தனம்போல் மணம்பரப்பிச் சிறப்புடனே வாழலாமே!

-----------------------------------------------------

 

45)  சிறுமை செய்யாதே.

பா வகை: கழி நெடிலடி எண்சீர் ஆசிரிய மண்டிலம்


சிறுமையென்றே எவரையும்நீ சிறிதேனும் ஒதுக்கிடாதே,

       சிலநாளில் அவர்களுமே சிறப்புடனே உயர்வாரே!

பெறுகின்ற வாய்ப்பினையே பற்றியவர் உயர்ந்திடுவர்,

    பிரிவினைகள் அழிந்துபோகும் பிறகென்னச் சிறுமையங்கே?

சிறுகுடையும் பெருமழையில் நம்மைத்தான் காத்திடுதே,

    சிறிததனை நினைந்துவாழக் குமுகாயம் சிறப்புறுமே!

சிறுதுரும்பும் பல்குத்த உதவுமென்றே முன்னோரும்

    சிந்தித்துக் கூறிவிட்டுச் சென்றதைநீ உணர்வாயே!

-------------------------------------------------

 


2 comments:

  1. 43. தாய் மொழியைத்தேர்ந்தெடுக்கும் உரிமை நமக்கேது?
    எல்லாக் கவிதைகளும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. தாய் மொழியைத் தேர்ந்தெடுக்கும் உரிமை நமக்கு இல்லைதான், ஆனால் நாம் எந்த மொழியைப் பேசவேண்டுமென்று தேர்ந்தெடுக்கும் உரிமை அனைவருக்கும் உண்டே! தங்கள் வருகைக்கு நன்றி

      Delete

உங்கள் கருத்துக்கள்: