Pages

Sunday, 24 November 2024

அன்பு ஜெயாவின் மரபுப் பாக்கள் - தொகுதி 21

   மரபுப் பாக்கள் -  தொகுதி 21 


61) தேடல் நன்று.

 பா வகை: கழி நெடிலடி ஆசிரியப் பன்னிரு சீர் மண்டிலம்.


தன்னையும், சுற்றம் தன்னையும் காக்கத்

      தளர்வே இன்றிநாளும்

    தமக்கென உழைப்போர் அடுத்தவர் நலமும்

      சற்றே நினைப்பீரே!

உன்னையும் ஓர்நாள் அடுத்தவர் காப்பர்

      உணர்வீர் அதையும்தான்,

    உலகமும் நமக்கு அளித்தநல் பாடம்,

      உயர்வீர் நேயமதில்!  

தன்னலம் மட்டும் காப்பது நன்றோ?

      தனித்தே வாழ்வதேனோ?

    தாயெனும் நாட்டில் வாழ்பவர் எல்லாம்

      தாயின் பிள்ளைகளே!

உன்மனம் மாற்று, உதவியை நாடி

      ஒடுங்கி வாழ்வோர்க்கே

    உற்றவோர் உதவித் தேடியே செய்தால்

      உலகும் உயர்ந்திடுமே!

-------------------------------------------------------------------------------------------------------------

 62)  தையலைப் போற்று.

பா வகை: கழி நெடிலடி ஆசிரியப் பன்னிரு சீர் மண்டிலம்.


பெண்ணுமே கற்றால் குடும்பமே கற்கும்

      பெரியோர் கூற்றிதுவே!

    பெரியதாய் ஆணும் கற்றுமே அவன்தான்

      பெயரும் பெற்றிடுவான்!

எண்ணியே பார்த்து மெய்யிதே என்று

      ஏற்று வாழ்ந்திடுவோம்!

    இடையறா இன்னல் வந்துமே எளிதாய்

      எம்மைக் காப்பவள்தாய்!

மண்ணிலே விதைத்த விதையினைக் காக்கும்

      மண்போல் காப்பவளே!

    மனமது மலர்ந்தே மலரென நம்மை

      மகிழ்ந்தே காப்பவளே!

உண்மையே உலகில் உயர்ந்தது தாய்மை,

      உன்னைக் காத்ததுமே!

    உன்னுயிர் போல அதனையும் உயர்வாய்

      உலகில் காத்திடுவாய்!

-----------------------------------------------------------------------------

 63)  தொலைநோக்குப் பார்வை.

 பா வகை: கழி நெடிலடி ஆசிரியப் பன்னிரு சீர் மண்டிலம்.


பட்டமும் பறக்க நல்லதோர் திட்டம்

      பயன்தான் அளித்திடுமே!

    பட்டறி வளித்தப் பாடமும் அதுவே,

      பகுத்தே அறிந்திடுவீர்!

திட்டமும் தீட்டும் முன்னரே நமக்கோர்

      தெளிந்த பார்வைவேண்டும்!

    தீரவே ஆய்ந்துத் தொடங்கியத் திட்டம்

      திறமாய் நிறைவுறுமே!

திட்டமும் ஐந்தைந் தாண்டென அன்று

      திறமாய் நடந்ததுதான்;

    திரும்பியே பார்த்தால் அதுவுமே கரைந்தும்,

      தேய்ந்தும் போனதன்றோ?

சட்டமும் இயற்றும் ஆள்பவர் இன்றும்

      சற்றே சிந்தித்தால்

    சார்பிலாத் தன்மை நிறைந்தவோர் சிறப்பாம்

      சட்டம் பிறந்திடுமே!

---------------------------------------------------------------------


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்: