மரபுப் பாக்கள் - தொகுதி 16
46) சீர்த்தியில்
வாழ்.
பா வகை:
கழி நெடிலடி எண்சீர் ஆசிரிய மண்டிலம்.
நாளுமே
ஒழுக்கமே முதன்மையாய்க் கொண்டு
நானிலம் மீதினில் வாழ்ந்திடு சிறப்பாய்!
நாளுமே
வளர்ச்சியை நோக்கிநீ முயன்றால்
நலமுடன் இலக்கினை விரைவிலே அடைவாய்!
ஆளுமை
யோடுநீ அனைவரின் வாழ்த்தை
அன்புடன் பெற்றுமே அமைதியில் வாழ்வாய்;
தாளுமே
பணிந்துநீ இறைவனைப் போற்றித்
தளர்விலா அன்புடன் வணங்கியே வாழ்வாய்! (1)
என்றுமே
உண்மையும் நேர்மையும் கொண்டே
ஏற்றமும் பெற்றிட முயன்றுநீ உழைப்பாய்;
அன்றுதான்
சீர்த்தியில் வாழ்ந்திட வழியும்
அருகினில் தோன்றிடும், அவ்வழிச் செல்வாய்!
இன்றுநீ
இளமையாய் இருப்பினும் என்றும்
இனியநல் பண்பினைப் போற்றியே வாழ்வாய்;
வென்றுநீ
வாழ்வினில் உயர்ந்திடப் படியாய்
விளங்குமே பண்புமே என்பதை அறிவாய். (2)
---------------------------------------
47) சுள்ளியாய் இராதே.
பா வகை:
என்றுமே
சுள்ளிபோல் இருப்பதால் பயன்தான்
எவர்க்குமே இல்லையே, வலிமையை வளர்ப்பாய்;
அன்றுநம்
முன்னவர் காட்டிய வழியே
அச்சமும் தவிர்த்துநீ வலிமையைக் காட்டு!
என்றுமே
வாழ்க்கையோர் போர்க்களம், உணர்ந்தே
எதிர்த்ததை விரட்டினால் வெற்றியும் உனக்கே!
அன்றுநீ
வலிமையின் சிறப்பினை அறிவாய்;
அந்தநாள் விரைவிலே வருவதும் காண்பாய்!
----------------------------------------
48)
சூழும்
இன்னல் ஒழி.
பா
வகை: கழி நெடிலடி எண்சீர் ஆசிரிய மண்டிலம்.
உன்னையே
வலம்வரும் உறுபகைத் தாக்கலாம்
உறுதியாய் எதிர்த்திடு, அச்சமே தவிர்ப்பாய்!
இன்னலும்
தந்திட மற்றவர் முயல்வர்,
இதையுமே எதிர்த்தவர் தோற்றிடச் செய்வாய்!
என்னதான்
நோயுனை வாட்டியே வதைத்தும்
எதற்குமே கலங்கிடா நெஞ்சுரம் கொள்வாய்!
இன்னலும்
எதிர்ப்புமே சூழ்ந்ததே வாழ்க்கை,
இவற்றையும் எதிர்த்திடக் கிடைப்பதே வெற்றி!
--------------------------------------------------
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்: