Pages

Wednesday, 20 November 2024

அன்பு ஜெயாவின் மரபுப் பாக்கள் - தொகுதி 20

  மரபுப் பாக்கள் -  தொகுதி 20 

 58)  துயர்விரட்டத் துணிக.                                         

பா வகை: கழி நெடிலடி ஆசிரிய பதினொன்றாம் சீர் மண்டிலம்.


வாழ்க்கைதனின் ஓட்டமதில் வளமதுவும் வந்துபோகும்,

    வழக்கமிதை உணர்ந்துநீயும் வாழ்வாய் – அன்றேல்

    வளம்குன்றி வாழ்வினிலே தாழ்வாய்!

தாழ்ந்தவரும் வாழ்விலோர்நாள் தன்னிறைவும் பெறுவர்தான்,

    தவறாமல் அதற்கெனவே உழைப்பாய் – அந்நாள்

    தகுதியுள்ள வாழ்வுபெற்றே தழைப்பாய்!  (1)

 

வாழ்க்கையதோ பேரலையில் தடுமாறும் ஓடம்போல்

    வழியொன்றும் தெரியாமல் நோக்கும் – துணிவே

    வழியொன்றைக் கண்டெடுத்துக் காக்கும்!

தாழ்வான இடம்நோக்கிப் பாயுமந்த ஆறுபோல

    தத்தளிக்கும் உன்னையுமே காக்கும் – மாந்தம்

    தளிர்விட்டே வாழ்வுதனை நோக்கும்!      (2)

 

--------------------------------------

 59) தூற்றி வாழாதே.

பா வகை: கழி நெடிலடி ஆசிரிய பதினொன்றாம் சீர் மண்டிலம்.

  

ஆற்றலில்லா மாந்தருமே ஆற்றல்தான் பெற்றிடவே

    அன்புடனே முயன்றிடுதல் ஏற்பீர் – அன்றேல்

    அவர்களையும் குறைகூறல் தவிர்ப்பீர்!

ஏற்றமுடன் எல்லோரும் வாழ்ந்திடவே மாந்தரெல்லாம்

    இயன்றதொருப் பங்கினையே தாரும் – வையம்

    எல்லோர்க்கும் இன்பமென மாறும்!    (1)

 

ஏற்றமது கண்டிடவே முயல்பவரின் உழைப்பிற்கே

    இயன்றவரை உதவிதன்னைச் செய்வீர் – அன்றேல்

    ஏளனமாய்ப் பேசுவதைத் தவிர்ப்பீர்!

போற்றவொரு மனமிருந்தால் போற்றுங்கள் முயற்சியினைப்

    போரிட்டுத் தோற்றோரின் பெருமை – அதுவே

    போரிட்டோர் மீண்டெழுப்பும் திறமை!     (2)

------------------------------------------

60) தென்னையைப் போலிரு.

பா வகை: கழி நெடிலடி ஆசிரியப் பதினொன்றாம் சீர் மண்டிலம்.

வாழ்க்கைதனில் தென்னைபோல் கொடுத்தேநீ வாழ்ந்தாலுன்

    வாழ்வதுவும் விளங்கிடும்தான் சிறந்தே – உறுதி

    வாழ்வினிலே நல்வினைதான் காக்கும்!

வாழ்க்கையினில் வந்ததெல்லாம் எனக்கென்றே நீவாழ்ந்தால்

    வந்திடுமோ செல்வமும்உன் வழிக்கே? – பகிர்ந்து

    வாழ்வதிலே இன்பம்தான் உண்டே!        (1)

 

செல்வம்தான் செல்வோம்செல் வோமென்றே நமைநீங்கிச்

    சென்றிடுமே ஓர்நாளில் நினைப்பாய் – அன்று

    செய்தவுன்றன் நல்வினைகள் காக்கும்!

பல்லாண்டு நம்பெரியோர் கூறிவந்த வாழ்மொழியும்

    பகலவனின் ஒளிபோல விளங்கும் – என்றும்

    பயனளிக்கும் நல்வினையே நம்பு!       (2)

 -----------------------------------------

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்: