Pages

Tuesday 5 November 2024

அன்பு ஜெயாவின் மரபுப் பாக்கள் - 12

 மரபுப் பாக்கள் -  தொகுதி 12 


34) கிழக்கெனப் புலர்வாய்.

 கழி நெடிலடி ஆசிரிய எழுசீர் மண்டிலம்.

(விளம் +விளம்+ விளம்+ விளம்-

விளம்+ விளம்+ காய் )

 

நறுமணம் வீசிடும் மலர்களும் அவைகளின்

    நல்மணம் பரப்பிட மறுப்பதில்லை;

வறுமையில் மாந்தரும் வாடிடும் போதவர்

    வாட்டமும் போக்கிட உதவிடுவோம்;

பெறுவதில் பகுதியைப் பகிர்ந்திடல் என்றுமே

    பெருமையைத் தந்திடும் கொடையன்றோ?

உறுதியாய்க் கூறலாம் உதவியைச் செய்வதால்

    உள்ளமும் மகிழ்ச்சியில் திளைத்திடுமே!

--------------------------------------------------------------------

35) கீரியாய் நஞ்சை முறி.

கழி நெடிலடி ஆசிரிய எழுசீர் மண்டிலம்.

(விளம் +விளம்+ விளம்+ விளம்-

விளம்+ விளம்+ காய் )

 

நஞ்சினை நெஞ்சிலே வைத்தவர் உன்னிடம்

    நயமுடன் நெருங்குவர் நம்பிடாதே;

கெஞ்சுவர் கொஞ்சுவர் நம்பினால் உனக்குமே

    கேடுதான் விளைந்திடும் மறந்திடாதே;

நஞ்சினைக் கீரியும் முறிப்பதே போலநீ

    நாளுமே கருத்துடன் நடப்பாயே;

நெஞ்சிலே துணிவுடன் நீயுமே வாழ்ந்திடில்

    நெருங்குமோ உன்னையும் ஊறுபாடே!

-------------------------------------------------------------------


36) குன்றென நிமிர்ந்து நில்.

கழி நெடிலடி ஆசிரிய எழுசீர் மண்டிலம் 

(விளம்+விளம்+விளம்+விளம்

விளம்+விளம்+காய்)

 

அறம்தனைப் பற்றுதல் தங்களின் கடமையாய்

    அனைவரும் வாழ்ந்திடில் மகிழ்ச்சிதானே?

உறவினுக் கெதிரியாய் உழன்றுநீ அலைவதால்

    உண்மையில் இழப்பது நீயன்றோ?

உறவுமே உன்னையே ஒதுக்கியே வைத்திடில்

    உலகினில் உனக்கென இருப்பதேது?

பறவையும் இனத்துடன் பகிர்ந்துதான் வாழ்ந்திடும்

    பார்த்ததைப் போலநீ திருந்துவாயே!   (1)

 

என்றுமே உறவுகள் இணைந்துடன் வாழ்வதால்

    எய்துவர் வாழ்வினில் இன்பமதே;

நன்றென நம்மவர் நவின்றநன் மொழிகளை

    நாளுமே பற்றுதல் நன்மைதானே;

இன்றுநான் உரைப்பவை ஏற்றிட மறுத்திடில்

    இனியவுன் உறவுகள் இழந்துநிற்பாய்;

என்றுமே மாந்தரும் தீவினை யாளரை

    ஏற்பதே உலகினில் இல்லைதானே?    (2)

-------------------------------------------------------------


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்: