மரபுப் பாக்கள் - தொகுதி 22
64) தோல்வியே
வெற்றிக்குப் பாடம்.
பா வகை: கலி மண்டிலம்.
தோல்வி கண்டுடன் துவண்டுநீ வாழ்வதால்
தோல்வி உன்னையும்
தொடர்வதும் உறுதியே!
தோல்வி சூழ்கையில்
துணிவினைக் கொண்டிடு,
தோல்வி, வெற்றியின்
தொடக்கமாய் நோக்கிடு!
வாழ்க்கை என்பது
வாழ்வதற் காகவே,
வாழ்ந்தோர் அனைவரும்
வழியினைக் காட்டினர்,
வாழ்க்கை முழுவதும்
வருபவை வாய்ப்புகள்,
வாழ்ந்து பெற்றிடு
வளமுடன் வெற்றியை!
---------------------------------------------------
65) நன்றியுணர்வே
உயர்த்தும்.
பா வகை: கலி மண்டிலம்.
அடி தோறும் பன்னிரண்டு எழுத்துகள் என்ற கணக்கில் அமைந்தப் பா.
நன்றி என்பது நம்முளே உறைவதே
என்றும் உதவியை ஈன்றவர் போற்றவே!
அன்றே நம்மவர் ஆய்ந்தபின் உரைத்தனர்
நன்றும் இன்றுசெய், நன்றியும் அதன்படி! (1)
உன்னை ஈன்றவள் உனக்கென நாளுமே
தன்னை வருத்தியே தாயென வாழ்ந்தவர்!
அன்னை
யினுள்ளமும் அன்பினில் மூழ்கிட
என்றும் நன்றியை இனிமையாய்க் காட்டிடு! (2)
------------------------------------
66) நாடுயர உயர்வோம்.
பா வகை: கலி மண்டிலம்.
அடி தோறும் பதிமூன்று எழுத்துகள் என்ற கணக்கில் அமைந்தப் பா.
நாட்டை
உயர்த்திட நாமெலாம் உழைத்திடின்
நாட்டின்
உயர்வினால் நாமுமே உயரலாம்!
காட்டில்,
குளிரினில் காக்கிறார் மறவரே
நாட்டில்
குடிகளும் நலமுடன் வாழவே! (1)
அடி தோறும் பன்னிரண்டு
எழுத்துகள் என்ற கணக்கில் அமைந்தப் பா.
ஏற்றத்
தாழ்வுகள் எதுவுமே அற்றதோர்
போற்றும்
காலமும் புலருமே இன்பமாய்,
மாற்றுச்
சூழலும் மலருமே நாட்டினில்
போற்றி
அன்றுநாம் புவியினில் வாழுவோம்! (2)
---------------------------
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்: