Pages

Wednesday, 20 November 2024

அன்பு ஜெயாவின் மரபுப் பாக்கள் - தொகுதி 19

 மரபுப் பாக்கள் -  தொகுதி 19 

 

55)  தாழாமல் மறவம் கொள். (மறவம் – வீரம்)

கழி நெடிலடி ஆசிரியப் பதின்(பத்துச்)சீர் மண்டிலம்.

 

உன்னை எதிர்க்கும் பகையை உறுதி கொண்டே எதிர்த்தால்

    உலகில் வெல்லும் செயலும் எளிதே!

முன்னை நரியால் காட்டு வேந்தன் அழிந்த கதையை

    முதலில் எண்ணி மறவம் கொள்வோம்!

இன்று வாழ்வில் இனத்தில் பிரிவும் வகுப்பில் பிரிவும்

    எமது வாழ்வை அழித்தல் எதிர்ப்போம்!

தொன்று தொட்டே ஒன்றாய் வாழ்ந்த குமுகா யமின்று

    தோல்வி பெறாமல் தடுத்துக் காப்போம்!

----------------------------------

56) திருவினை யாற்று.

 கழிநெடிலடி ஆசிரிய பதின்(பத்துச்) சீர் மண்டிலம்

 

எனக்கே எல்லாம் என்றே வாழும் வாழ்க்கை நீக்கி

    இணைந்தே நாமும் வாழ்வோம் சிறப்பாய்!

உனக்குள் உறையும் திறனை உணர்ந்து நீயும் முயன்றே

    உலகில் செயலும் ஆற்றி உயர்வாய்!

உனக்குள் ஒளிந்த ஆற்றல் தன்னை அறிவோ டிணைத்தே

    உலகும் உயர உழைத்தே உயர்வாய்!

தனக்கும், சாராப் பிறர்க்கும், பயன்தான் விளைய உழைத்தால்

    தாய்மண் விரைவில் உயர்வும் பெறுமே!

 -----------------------------------------------------------

57)  தீவினையை எரி.

கழிநெடிலடி ஆசிரிய பதின்(பத்துச்) சீர் மண்டிலம்

              

எல்லா வினைக்கும் ஏற்ற பலன்கள் என்றும் உண்டே

    இன்றே நல்ல செயல்கள் செய்வோம்!

நல்ல வினைகள் நம்மை என்றும் நலமாய்க் காக்கும்     

    நல்லோர் உரைத்த மொழிகள் இவையே!

பொல்லாத் தீமை புரிவோர் நினைவை மறவத் துடனே

    பொசுக்கி அழித்தே வெற்றி கொள்வோம்!

வல்லோர் எல்லாம் நல்லவ ராயின் உலகில் தீமை

    வளரும் நிலையும் தடுப்பார் அன்றோ?

---------------------------------------------------


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்: