Pages

Tuesday, 5 November 2024

அன்பு ஜெயாவின் மரபுப் பாக்கள் - தொகுதி 10

  மரபுப் பாக்கள் -  தொகுதி 10 


29) ளமையிலேயே கற்பாய் அறம்.

கழி நெடிலடி ஆசிரிய எழுசீர் மண்டிலம். 


இளமையில் கல்வி இணைந்துடன் நிற்கும்

      இதையுணர் வெற்றியும் உறுதி;

உளம்நிறை அறத்தை உறுதியாய்ச் செய்வாய்

      உன்மனம் மகிழ்ச்சியில் திளைக்கும்;

உளவியல் கூறும் உண்மையும் அதுவே

      உறுதியாய் அதனைநீ ஏற்பாய்;

அளவிலா இன்பம் அணைக்குமே உன்னை

      அறம்தனைத் தொடர்ந்துநீ புரிவாய்!

-----------------------------------------------------------

30) 'றவம் காத்தல் மாண்பு. (மறவம் – வீரம்)

கழி நெடிலடி ஆசிரிய எழுசீர் மண்டிலம்.

 

உரிமையைக் காக்கும் நிலையென வந்தால்

    உலகமே வியந்திட எதிர்ப்போம்;

அரியநம் மொழியை அழிப்பவர் செருக்கை

    அழித்துநம் மொழிதனைக் காப்போம்;

தெரிந்துமே எமக்குத் தீங்கினை இழைப்போர்

    திருந்திட எதிரடி கொடுப்போம்;

உரிமையே எங்கள் இனமதன் மூச்சாய்

    உலகினில் போற்றியே வாழ்வோம்!

--------------------------------------------------

31) னகரமாய் ஈற்றில் இராதே.

 கழி நெடிலடி ஆசிரிய எழுசீர் மண்டிலம்.

 

வாழ்வில் என்றோ வருமே அந்த

    வாய்ப்பு தன்னைப் பற்றிக்கொள்;

தாழ்ந்தே இருக்கும் ன’கரம் போல்நீ

    தவற விட்டே வருந்தாதே;

தாழ்ந்தோர் தமக்கும் உதவி நல்கித்

    தகுதி அளித்துக் காத்திடுவாய்;

வாழ்க்கை என்றும் நில்லா ஓடை

    வாழ்ந்து காட்டி உயர்ந்திடுவாய்!


---------------------------------------- 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்: