Pages

Tuesday, 26 November 2024

அன்பு ஜெயாவின் மரபுப் பாக்கள் - தொகுதி 23

 மரபுப் பாக்கள் -  தொகுதி 23 


67)  நினைப்பதை முடி.

  பா வகை: கலி மண்டிலம்.


எண்ணியதில் நல்லவையே ஏற்றமுடன் வெற்றிகாணும்

வண்ணமாகச் செயல்படுத்த வலிமையுடன் முயன்றிடுவாய்!

திண்ணமுடன் எடுத்திட்ட திறமான முயற்சியும்தான்

வண்ணங்கள் ஒளிர்வதுபோல் வாழ்வுதனில் ஒளிர்ந்திடுமே! (1)

 

சிந்தித்தே எடுத்திட்ட சீரியவோர் முடிவானால்

எந்தவொரு தடைவந்தும் எடுத்தவடி மாறாமல்

அந்தவழி நடைபோடு, ஐயமின்றி வெற்றியுமே

வந்துன்னைச் சேர்ந்தென்றும் வளமுடனே வாழ்விக்கும்!   (2)

 

-----------------------------------------------

68)  நீர்நிறை புவி நீடு.

 பா வகை: கலி மண்டிலம்.

 

செல்வம்தான் பெரிதென்று சேமிக்கும் மாந்தரேஉம்

செல்வத்தின் உயர்ந்தவையே செழிப்பான நீர்நிலைகள்!

இல்லையிங்கே விடாய்தீர்க்க எளியதொரு வழியென்றால்,

எல்லையற்ற செல்வங்கள் இருந்தாலும் என்னபயன்?

 

இன்றுவரை அழித்தவற்றில் எஞ்சியுள்ள நீர்நிலைகள்

என்றுமிங்கே நிலைத்திருக்க ஏற்றவழி கண்டிடுவோம்!

குன்றுகள்போல் தோன்றிட்ட குடியிருப்புகள் இனிமேலும்

இன்றுள்ள குளங்களிலே எழுவதனைத் தடுத்திடுவோம்!

 ------------------------------------------------------

 

 69) நுண்ணறிவால் நலன்விளை.

பா வகை: கலி மண்டிலம்.


எண்ணத்தில் தோன்றுகின்ற எல்லையற்ற கருத்துகளில்

வண்ணமுடன் நலமளிக்கும் வளமான ஒன்றைநாடு!

நுண்ணறிவின் துணைகொண்டு நூலறிவை ஆய்ந்துமேநீ

திண்ணமான முடிவுதன்னைத் தேர்ந்தெடுத்தால் வென்றிடுவாய்! (1)

 

தேர்ந்தெடுத்த முடிவினையும் திறமையுடன் செயல்படுத்தி

நேர்மையுடன் வாழ்ந்தாலே நிறைந்திடுமே உன்னுள்ளம்!

பார்தன்னில் புகழ்பெற்ற பைந்தமிழர் பலருண்டே,

ஆர்ந்தவொரு நுண்ணறிவால் அவர்களும்தான் உயர்ந்தனரே!  (2)

---------------------------------------


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்: