மரபுப் பாக்கள் - தொகுதி 24
70) நூல்துணை நாளும்
கொள்.
பா வகை: சந்தக் கலி மண்டிலம்.
நல்லோருமே நாமுய்யவே நமக்கீந்தநற் கொடையே
எல்லோர்க்குமே பயன்தந்திடும் ஏற்றம்நிறை
நூலே!
சொல்லோவியம் என்றேபலர் சொற்கள்வழி போற்றும்
நல்லோவியம் நாம்கற்றிடும் நன்னூலெனத்
தேற்றம்! )1)
பெற்றோருமே தம்பிள்ளைகள் பெயர்பெற்றுமே வளர
கற்றோருமே நூல்கள்தனில் காட்டும்வழி உளவே!
பற்றோடுநாம் கற்போமினிப் பலநூல்களைப்
பாங்காய்
வற்றாதநம் தாயீந்தநல் வளமானநம்
தமிழாய்! (2)
-----------------------------------------
71) நெருங்கி வாழ நினை.
பா வகை: சந்தக் கலி மண்டிலம்.
பறக்கின்றதோர் பறவைக்குழு படையாகவே திரியும்,
உறவுக்கென ஓர்நாளிலே உன்னுள்ளமும் விரியும்;
உறவென்பதன் உயரின்பமே உன்வாழ்வினில் பெருக்கு!
உறவாகவே மற்றோரையும் உணர்ந்தால்பல மிருக்கு!
வேர்விட்டவோர் ஆல்போலநீ விழுதோடுமே வாழ்வாய்!
ஊர்போற்றநீ எப்போதுமே ஒன்றாகவே வாழ்வாய்!
நீர்போலவே தெளிவானதோர் நெஞ்சத்துடன் வாழ்வாய்!
பார்போற்றுமே, பகைநீக்கியே பார்தன்னிலே வாழ்வாய்!
----------------------------------------
72) நேர்மையில் நில்.
பா வகை: சந்தக் கலி மண்டிலம்.
உள்ளத்திலே உயர்நேர்மையே உரமாகநீ கொள்வாய்!
எள்ளளவினில் மாறாமலே ஏற்றம்பெற வாழ்வாய்!
பள்ளங்களே வாழ்வில்மிகை பலர்போற்றவாழ் கருத்தாய்!
உள்ளத்தினில் நல்லோருமே உனைவாழ்த்திட உயர்வாய்!
----------------------------
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்: