Pages

Monday, 30 December 2024

அன்பு ஜெயாவின் மரபுப் பாக்கள் - தொகுதி 25

  மரபுப் பாக்கள் -  தொகுதி 25 


73)  நைந்த வாழ்வை நிமிர்த்து.

பா வகை: கலி மண்டில மண்டிலம்.

பா வகைக்கான வாய்பாடு:

ஓரடியில் நான்கு சீர்களைக் கொண்டு, நான்கு அடிகள். நான்கடிக்கும் ஓரெதுகை, முதல் சீருக்கும் மூன்றாம் சீருக்கும் பொழிப்பு மோனை . காய்+காய்+காய்+காய். *காய்ச் சீர்களாக அமைந்தாலும் அந்தந்த அடியில் பொருள் முடிபு வந்து அடிமறி ஆசிரியப்பாப் போல, அடிமறியாய் முடியும்.*

 

வாழ்க்கையினில் ஏற்றமொன்றே வாடிக்கை இல்லைதானே!

தாழ்வென்பதும் நம்வாழ்வில் தவிர்க்கவுமே இயலாதே!

தாழ்வினிலே தளராதே! தவிர்த்திடவே போராடு!

வாழ்க்கையெனில் வெற்றிதோல்வி வந்துபோகும் மறவாதே!   (1)

 

என்றுமில்லை வென்றோரோ எப்போதும் தோற்றவரோ!

இன்றையநம் வாழ்வினிலே இயற்கைதானே வெற்றிதோல்வி!

ஒன்றுமாற்றி ஒன்றுவரும் உலகவாழ்வின் உண்மையீதே!

இன்றுதோற்போர் நாளைவெல்வர் இறைவனவன் எழுதியதே!   (2)

 

தோல்வியில்தான் நடைபயின்றாய், தூளிவிட்டே இறங்கிவந்தே!

தோல்விகண்டு நைந்திடாதே தொடர்வதுமே வெற்றிதானே!

தோல்விக்குப் பின்னுண்டே தொடர்கின்ற படிப்பினையே!

தோல்விதந்த படிப்பினையில் தொடர்முயற்சி வெற்றியுண்டே!  (3)

---------------------------------------

74) நொந்தும் துணிவுகொள்.

பா வகை: கலி மண்டில மண்டிலம்.

 

நடந்தவொன்று நடந்ததாக நழுவட்டும், துணிவேகொள்!

கடந்துவந்த வழியினிலே கற்றவையே பாடமாகும்!

படர்கின்ற கொடியறுந்தால் படர்வதுமே நிற்பதில்லை!

அடர்ந்தகாடும் அழிவினின்றும் ஆர்த்தெழுமே அறிந்திடுவாய்!  (1)

 

இன்னல்கள் நம்வாழ்வில் எப்போதும் வருவதுதான்!

இன்னல்கள் வரும்போது எதிர்கொண்டு போரிடுவாய்!

உன்னுறுதி குறையாமல் உலகினிலே வாழ்ந்திடுவாய்!

உன்வாழ்க்கை உன்கையிலே, உணர்ந்தாலே வெற்றிதானே!  (2)


----------------------------------------  

75) நோயை விரட்ட உழை.

பா வகை: கலி மண்டில மண்டிலம்.


உழைப்பாலே இவ்வுலகில் உயர்ந்தோரும் பலருண்டே!

உழைப்போரை நெருங்காதே ஒருநோயும் உணர்வீரே!

பிழைப்பிற்கே உழைப்போரும் பெருமளவில் உள்ளாரே!

உழைப்பொன்றே உறுதியினை உடலுக்கும் தந்திடுமே!     (1)

 

வருமுன்னர் காத்திடுவீர் வாராமல் நோய்களுமே!

மருந்துகளும் தேவைதானே மாளாத நோயென்றால்!

அருமருந்தே உடற்பயிற்சி அறிந்திடுவீர் வாழ்வினிலே!

மருந்துடனே உடலுழைப்பும் மக்களைத்தான் காத்திடுமே!    (2)

 

தடுப்பூசி என்பதுவும் தவறில்லை உணர்வாயே!

அடுக்கடுக்காய் வருகின்ற அரியநோயும் அடங்கிடுமே!

எடுத்திடுவீர் தடுப்பூசி எதிர்த்திடவே நோய்களையே!

விடுபடுவோம், வெற்றியினை விளைத்திடுவோம் ஒன்றுபட்டே!  (3)

-------------------------------------------



No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்: