Pages

Monday, 30 December 2024

அன்பு ஜெயாவின் மரபுப் பாக்கள் - தொகுதி 26

   மரபுப் பாக்கள் -  தொகுதி 26


76) பண்பாடு மறவேல்.

பா வகை: வஞ்சி மண்டிலம்.

பா வகைக்கான வாய்பாடு:

(ஓரடியில் மூன்று இயற்சீர்களைக் கொண்டு, நான்கு அடிகள். நான்கடிக்கும் ஓரெதுகை, முதல் சீருக்கும் மூன்றாம் சீருக்கும் பொழிப்பு மோனை. அடி தோறும் ஈரசைக் கொண்ட இயற்சீராக அமையும். ஆனால், மூன்றாம் அடியின் மூன்றாம் சீர் காய்ச் சீராக அமையும்.)

           

உண்பதும் உடுப்பதும் உயர்வழி

மண்ணில் நம்மின மாண்பே,

கண்ணின் மணிபோல் காத்திடுவோம்,

எண்ணம் தூய்மையில் இருத்தியே!   (1)

 

ஒருவனுக் கொருத்தியாம் உயர்ந்தயிப்

பெருமை இங்கே பெற்றிடும்

அருமை என்றும் அழியாமல்

பெருவாழ் வுதனைப் பேணுவோம்!  (2)

 

அன்பெனும் அருவியில் ஆழ்ந்திட

என்றுமே விரும்புவர் யாவரும்!

அன்பினைப் பொழிந்தே ஆள்வீரே

இன்பமாய் அவர்மனம் ஏற்கவே!  (3)

------------------------

77)  பார் போற்ற வாழ்.

பா வகை: வஞ்சி மண்டிலம்.


உன்றன் வழிதான் ஒழுக்கமாய்

என்றும் அமைந்தே இருந்திடில்

உன்னைப் போற்றும் உலகம்தான்,

பொன்னைப் போன்றே பொலிந்திடு!  (1)

 

உன்றன் எண்ணமும் உயர்வாய்

என்றும் நிலைத்தே இருந்திடில்,

நன்றே செய்வாய் நாட்டினிற்கே

நன்மை எங்கும் நிலைத்திட!  (2)

 

தன்னலம் தன்னைத் தவிர்த்தே

நன்றாய் பிறர்நலம் நாடுவோர்

இன்றும் எம்மிடை இருக்கின்றார்

நன்றே அவர்வழி  நடந்திடு!     (3)

 

நிலமகள் அளித்தநல் லறிவே

உலகினில் காக்குமே உன்னையும்

உலகிலுன் மாண்பை உயர்த்திநீயும்

நிலமதில் வாழ்வாய் நீடு!       (4)

----------------------------------------

78)  பிழைபட வாழேல்.

பா வகை: வஞ்சி மண்டிலம்.


தன்னலம் மட்டுமே சரியென

உன்னை உயர்த்திட ஒதுங்கினால்

என்றுமே வெற்றிதான் இல்லையென்றே

நன்றாய் நெஞ்சினில் நாட்டுவாய்!        (1)

 

செய்யும் தொழிலைச் செம்மையாய்

செய்து வாழ்தலே சிறப்பாம்,

பொய்யை அதிலே புகுத்தினாலே

எய்தும் வெற்றிதான் இல்லையே!   (2)

 

உன்வழி நேர்வழி ஒன்றுதான்

என்றே வாழ்தலில் இன்பமே!

இன்றே அவ்வழி ஏற்றிடுவாய்

நன்றே வாழ்வாய் நாளுமே!        (3)

-----------------------------------------


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்: