மரபுப் பாக்கள் - தொகுதி 27
79) பீடுடன்
நிமிர்ந்து நட.
பா வகை: வஞ்சி மண்டிலம் – மா + விளம் + விளம்
நான்கடிகளுக்கும் ஓரெதுகை, 1, 3 ம் சீர்களில் பொழிப்பு மோனை.
உன்றன் பெருமையை உயர்வென
என்றும் எண்ணியே இருந்திடு,
தன்னை நம்புவோர் தரைதனில்
என்றும் பெறுவது ஏற்றமே! (1)
நன்றாய் நல்வழி நடந்துமே
என்றும் பீடுடன் இருந்திடு,
நன்றே பெரியவர் நயமுடன்
அன்றே உரைத்தனர் அறிந்திடு! (2)
உன்னை நாளுமே உயர்த்திட
என்றும் உழைத்திடின் ஏற்றமே!
இன்றே உறுதியும் எடுத்திடு
நன்றே வாழ்ந்திடு நாளுமே! (3)
நயன்மை காத்துநீ நாட்டினில்
உயர்ந்தே நின்றிடில் ஊருமே
வியந்தே போற்றிடும் வென்றிடு
நயன்மை உயர்ந்ததே நாட்டினில்! (4)
------------------------------------
80) புகழைத்
தகுதியின்றி விரும்பேல்.
பா வகை: வஞ்சி மண்டிலம்.
போற்றும் செயலினால் புகழ்வரும்
ஏற்றம் பெற்றிட எண்ணிடு
போற்றும் செயல்களே புரிந்துநீ
ஏற்றம் பெற்றுமே இன்புறு! (1)
உன்னை உயர்த்திடும் உழைப்புமே
என்றும் அவ்வழி ஏற்றிடு,
நன்றாய்ப் போற்றிடும் நாடுமே
இன்பம் பெருகிடும் என்றுமே! (2)
உழைப்பால் ஆயிரம் உயர்ந்தவர்
தழைத்து வாழ்ந்திடும் தளமிது,
பிழைகள் விலக்கிநீ பெரிதுமே
உழைத்தால் போற்றிடும் உலகமே! (3)
-----------------------------------------
81) பூவுலகம்
இகழ வாழேல்.
பா வகை: வஞ்சி மண்டிலம்.
நன்றே செய்துநீ நானிலம்
என்றும் போற்றிட வாழ்ந்திடு!
நன்றும், நலிந்தவர் நலம்பெற
இன்றே செய்திடல் ஏற்றமே!
(1)
கல்விப் பணிதனைக் கள்ளமாய்
செல்வம் கொழித்திடச் செய்வதோ?!
கல்விப் பசியினைக் கலைந்திட
நல்ல வழிதனில் நடத்துவீர்!
(2)
கள்தான் உடல்நலம் காக்குமோ
கள்ளும் உன்னுளம் கலைத்திடும்
கள்ளாம் அரக்கனைக் காண்கையில்
உள்ளத் திலவனை ஒழித்திடு! (3)
-------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்: