Pages

Wednesday 16 October 2024

அன்பு ஜெயாவின் மரபுப் பாக்கள்

 மரபுப் பாக்கள் -  தொகுதி 6


16) சற்றும் அறமும் தவறேல்.

 பா வகை: கழி நெடிலடி ஆசிரிய அறுசீர் மண்டிலம் - மா+மா+காய்.


நாளை நாளை என்றிடாமல்

       நல்ல அறம்தான் செய்திடுவாய்;

நாளை என்றே நாள்கடத்தும்

       நலிவு உள்ளம் தகர்த்திடுவாய்;

நாளை நம்கை தனிலில்லை

       நன்றா யிதையும் உணர்வாயே;

நாளை விடிந்தால் நல்வினையால்

       நன்றா யறமும் தொடர்வாயே!

 

----------------------------------------------------------------------------

 

17) ஞயத்தைப் பேச்சில் குறையேல்.

 பா வகை: கழி நெடிலடி ஆசிரிய அறுசீர் மண்டிலம் - மா+மா+காய்

 

உருவு கண்டே எள்ளாமை

உன்பால் வளர்த்தே உயர்ந்திடுவாய்;

அருமை யுள்ளம் கொண்டுநீயும்

அரவ ணைப்பாய் அனைவரையும்,

ஒருநாள் அவரும் உறுதுணையாய்

ஓடி வந்தே உதவிடுவர்;

பெருமை பெற்றே இவ்வாழ்வில்

பேரன் புடனே வாழ்ந்திடலாம்!

 

-----------------------------------------------------------------------------------

 

18) 'டங்கமறு  தருக்கிற்கு (திமிருக்கு).

 பா வகை: கழி நெடிலடி ஆசிரிய அறுசீர் மண்டிலம். ( மா+மா+காய்)

 

அன்பு பொங்கத் துணைநின்றால்

       அடியும் பணிந்து நடந்திடுவோம்;

அன்பை மறந்தே ஆட்சிசெய்தால்

       அறத்தைக் காக்க அடக்கிடுவோம்;

என்றும் மாந்த நேயமுடன்

எழிலாய் நாமும் வாழ்ந்திடுவோம்;

இன்றும் என்றும் தருக்கின்றி

       இணைந்தே வாழ்வில் உயர்ந்திடுவோம்!  (1)

 

அன்பால் நாமும் கூடுகட்டி

அணைந்தே வாழ வாருங்கள்;

       என்றும் அன்பின் பிடிதன்னில்

             எழிலாய் நாமும் வாழலாமே!

இன்பம் அங்கே இருப்பதைத்தான்

இணைந்தே என்றும் காணலாமே!

       நன்றே கூறி நானழைத்தேன்

             நண்பர் எல்லாம் வரலாமே! (2)

------------------------------------------------------------------------


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்: