Pages

Tuesday 5 November 2024

அன்பு ஜெயாவின் மரபுப் பாக்கள் - தொகுதி 11

மரபுப் பாக்கள் -  தொகுதி 11 

32) கடலாய் மனத்தை விரி.

கழி நெடிலடி ஆசிரிய எழுசீர் மண்டிலம். 

(மா+மா+மா+மா- 

மா+மா+காய்)

 

காற்றும் மழையும் கலந்தே அடித்தும்

    கலங்கா அந்தக் கடல்போல,

ஏற்றம் இறக்கம் என்று வாழ்வில்

    ஏது வந்தும் கலங்கிடாதே!

தூற்றல் போலத் துன்பம் ஓர்நாள்

    துவண்டே அழியும் துணிவுபெற்று,

நாற்றம் தரும்நன் மலர்போல் யாவர்க்கும்

    நன்மை செய்தே மகிழ்ந்திருப்பாய்!

 

----------------------------------------------------------------------------------------------------------------------------

33) காத்தல் கடனே.

 

கழி நெடிலடி ஆசிரிய எழுசீர் மண்டிலம். 

(மா+மா+மா+மா- 

மா+மா+காய்)


பெற்ற பிள்ளை நலமாய் வளரப்

    பேணிக் காத்தல் பெற்றோர்க்கு,

பெற்றோர் நலமும் பிந்நாள் தன்னில்

    பெரிதும் காத்தல் பிள்ளைக்கு,

உற்ற கல்வி உவந்தே அளித்து

    உயர்த்தல் கல்வி யாளர்க்கு,

சற்றே அவர்தம் கடமை உணர்ந்தால்

    சார்ந்தே வாழ்வும் சிறந்திடுமே!

------------------------------------------------------------------------------------



அன்பு ஜெயாவின் மரபுப் பாக்கள் - 12

 மரபுப் பாக்கள் -  தொகுதி 12 


34) கிழக்கெனப் புலர்வாய்.

 கழி நெடிலடி ஆசிரிய எழுசீர் மண்டிலம்.

(விளம் +விளம்+ விளம்+ விளம்-

விளம்+ விளம்+ காய் )

 

நறுமணம் வீசிடும் மலர்களும் அவைகளின்

    நல்மணம் பரப்பிட மறுப்பதில்லை;

வறுமையில் மாந்தரும் வாடிடும் போதவர்

    வாட்டமும் போக்கிட உதவிடுவோம்;

பெறுவதில் பகுதியைப் பகிர்ந்திடல் என்றுமே

    பெருமையைத் தந்திடும் கொடையன்றோ?

உறுதியாய்க் கூறலாம் உதவியைச் செய்வதால்

    உள்ளமும் மகிழ்ச்சியில் திளைத்திடுமே!

--------------------------------------------------------------------

35) கீரியாய் நஞ்சை முறி.

கழி நெடிலடி ஆசிரிய எழுசீர் மண்டிலம்.

(விளம் +விளம்+ விளம்+ விளம்-

விளம்+ விளம்+ காய் )

 

நஞ்சினை நெஞ்சிலே வைத்தவர் உன்னிடம்

    நயமுடன் நெருங்குவர் நம்பிடாதே;

கெஞ்சுவர் கொஞ்சுவர் நம்பினால் உனக்குமே

    கேடுதான் விளைந்திடும் மறந்திடாதே;

நஞ்சினைக் கீரியும் முறிப்பதே போலநீ

    நாளுமே கருத்துடன் நடப்பாயே;

நெஞ்சிலே துணிவுடன் நீயுமே வாழ்ந்திடில்

    நெருங்குமோ உன்னையும் ஊறுபாடே!

-------------------------------------------------------------------


36) குன்றென நிமிர்ந்து நில்.

கழி நெடிலடி ஆசிரிய எழுசீர் மண்டிலம் 

(விளம்+விளம்+விளம்+விளம்

விளம்+விளம்+காய்)

 

அறம்தனைப் பற்றுதல் தங்களின் கடமையாய்

    அனைவரும் வாழ்ந்திடில் மகிழ்ச்சிதானே?

உறவினுக் கெதிரியாய் உழன்றுநீ அலைவதால்

    உண்மையில் இழப்பது நீயன்றோ?

உறவுமே உன்னையே ஒதுக்கியே வைத்திடில்

    உலகினில் உனக்கென இருப்பதேது?

பறவையும் இனத்துடன் பகிர்ந்துதான் வாழ்ந்திடும்

    பார்த்ததைப் போலநீ திருந்துவாயே!   (1)

 

என்றுமே உறவுகள் இணைந்துடன் வாழ்வதால்

    எய்துவர் வாழ்வினில் இன்பமதே;

நன்றென நம்மவர் நவின்றநன் மொழிகளை

    நாளுமே பற்றுதல் நன்மைதானே;

இன்றுநான் உரைப்பவை ஏற்றிட மறுத்திடில்

    இனியவுன் உறவுகள் இழந்துநிற்பாய்;

என்றுமே மாந்தரும் தீவினை யாளரை

    ஏற்பதே உலகினில் இல்லைதானே?    (2)

-------------------------------------------------------------


அன்பு ஜெயாவின் மரபுப் பாக்கள் - தொகுதி 10

  மரபுப் பாக்கள் -  தொகுதி 10 


29) ளமையிலேயே கற்பாய் அறம்.


கழி நெடிலடி ஆசிரிய எழுசீர் மண்டிலம். 

(விளம் +மா+ விளம்+ மா- 

விளம் + விளம்+ மா)


இளமையில் கல்வி இணைந்துடன் நிற்கும்

      இதையுணர் வெற்றியும் உறுதி;

உளம்நிறை அறத்தை உறுதியாய்ச் செய்வாய்

      உன்மனம் மகிழ்ச்சியில் திளைக்கும்;

உளவியல் கூறும் உண்மையும் அதுவே

      உறுதியாய் அதனைநீ ஏற்பாய்;

அளவிலா இன்பம் அணைக்குமே உன்னை

      அறம்தனைத் தொடர்ந்துநீ புரிவாய்!

-----------------------------------------------------------

30) 'றவம் காத்தல் மாண்பு. (மறவம் – வீரம்)


கழி நெடிலடி ஆசிரிய எழுசீர் மண்டிலம்.

(விளம் +மா+ விளம்+ மா- 

விளம் + விளம்+ மா)

 

உரிமையைக் காக்கும் நிலையென வந்தால்

    உலகமே வியந்திட எதிர்ப்போம்;

அரியநம் மொழியை அழிப்பவர் செருக்கை

    அழித்துநம் மொழிதனைக் காப்போம்;

தெரிந்துமே எமக்குத் தீங்கினை இழைப்போர்

    திருந்திட எதிரடி கொடுப்போம்;

உரிமையே எங்கள் இனமதன் மூச்சாய்

    உலகினில் போற்றியே வாழ்வோம்!

--------------------------------------------------

31) னகரமாய் ஈற்றில் இராதே.

 

கழி நெடிலடி ஆசிரிய எழுசீர் மண்டிலம்.

(விளம் +மா+ விளம்+ மா- 

விளம் + விளம்+ மா)

 

வாழ்வில் என்றோ வருமே அந்த

    வாய்ப்பு தன்னைப் பற்றிக்கொள்;

தாழ்ந்தே இருக்கும் ன’கரம் போல்நீ

    தவற விட்டே வருந்தாதே;

தாழ்ந்தோர் தமக்கும் உதவி நல்கித்

    தகுதி அளித்துக் காத்திடுவாய்;

வாழ்க்கை என்றும் நில்லா ஓடை

    வாழ்ந்து காட்டி உயர்ந்திடுவாய்!


---------------------------------------- 

Monday 4 November 2024

அன்பு ஜெயாவின் மரபுப் பாக்கள் - தொகுதி 9

 மரபுப் பாக்கள் -  தொகுதி 9


25) 'ரணாக விளங்கு.

 கழி நெடிலடி ஆசிரிய அறுசீர் மண்டிலம். 

(காய்+ காய்+ காய்+ காய்- 

 மா+மா.)

              

பெற்றோர்தம் நலமென்றும் பெற்றபிள்ளை காப்பதுதான்

   பெரிய கடனாம்!

உற்றகல்வி மாணவர்க்கே உவந்தளித்தல் கற்பிப்போர்

   உயர்ந்த கடனாம்!

பெற்றசெல்வம் உழைத்தவர்க்கும் பகிர்ந்தளித்தால் தொழில்தன்னில்

   பெருமை உண்டே!

ஏற்றதொழில் சிறந்திடவே என்றும்நீ உழைத்திட்டால்

   ஏற்றம் உண்டே!

--------------------------------

26) லவயம் இழிவு. (இலவசம் இழிவு)

 கழி நெடிலடி ஆசிரிய அறுசீர் மண்டிலம். 

(காய்+ காய்+ காய்+ காய்- 

மா+மா)

 

உழைக்கின்ற மக்களெல்லாம் உறுதியுடன் தம்தொழிலை

    உயர்வாய்க் காண்பர்;

பிழைத்திடநல் வழியறிந்த பலர்தங்கள் பாதையிலே

    பெருமை கொள்வர்;

மழைநீரைச் சேர்த்துவைத்து  மண்மீதில் விளைவிப்போர்

    மகிழ்வும் அடைவர்;

பிழையென்று உணர்பவரோ இலவயத்தை நாடாமல்

    புவியில் வாழ்வர்.

-------------------------------

27) வஞ்சம் அழித்திடும் தவிர்.

கழி நெடிலடி ஆசிரிய அறுசீர் மண்டிலம். 

(காய்+ காய்+ காய்+ காய்- 

மா+மா)

 

வஞ்சமுனை எந்நாளும் வாட்டிவிடும் இதையென்றும்

    வாழ்வில் மறப்பாய்;

நெஞ்சத்தில் அன்புகொண்டு நிலையற்றுத் தவிப்போர்க்கு

    நிழலாய் நிற்பாய்;

செஞ்சோற்றுக் கடனுக்காய்ச் செயல்புரிந்த கன்னன்போல்

    சிறப்பே சேரும்;

அஞ்சாதே உனையென்றும் ஆறுமுகன் காத்திடுவான்

    அறிவாய் நன்றே!

-----------------------------



Friday 1 November 2024

அன்பு ஜெயாவின் மரபுப் பாக்கள் - தொகுதி 8

 மரபுப் பாக்கள் -  தொகுதி 8


22) பண்போடு நட.

  

கழி நெடிலடி ஆசிரிய அறுசீர் மண்டிலம். (விளம்+ மா+தேமா)

 

கடலெனச் செல்வம் பெற்றும்

    கனிவுடன் வாழ வேண்டும்!

மடமையைத் தவிர்த்தே இந்த

    மண்ணிலே வாழ்வாய் என்றும்!

தடமது பதித்தே நீயும்

    தண்மனம் கொண்டு வாழ்க!

அடக்கமே உன்னை என்றும்

    அமைதியில் ஆழ்த்திக் காக்கும்!

---------------------------------------------------------------

23) மணந்திருப்பா யென்றும்.

கழி நெடிலடி ஆசிரிய அறுசீர் மண்டிலம். (விளம்+ மா+தேமா)

 

கன்னலின் சுவைபோல் என்றும்

   கனிவினைக் காட்டி வாழ்வாய்!

இன்னலின் பிடியில் வாழ்வோர்

   இன்பமும் அடையச் செய்வாய்;

தன்னல மின்றி வாழ்வில்

   தாழ்ந்தவர் நலத்தைக் காப்பாய்;

நன்மலர் நாற்றம் போல்நீ

   நற்செயல் செய்தே வாழ்வாய்!

--------------------------------------------------------

24) யற்கையைப் போலியங்கு


கழி நெடிலடி ஆசிரிய அறுசீர் மண்டிலம். (விளம்+ மா+தேமா)

 

அலைகளோ என்றும் ஓயா

   அப்படி இறைவன் அன்பும்!

கலைகளும் அழியா ஒன்றே

   கற்றநம் கல்வி போல!

தலைவரும் வருவார் ஓர்நாள்

   தாழ்ந்தவர் எழுவர் அந்நாள்;

மலையென இருந்த துன்பம்

   மணலென நொறுங்கி வீழும்!

---------------------------------------------------------

அன்பு ஜெயாவின் மரபுப் பாக்கள் - தொகுதி 7

 மரபுப் பாக்கள் -  தொகுதி 7

19) இணங்கமறு  பகைக்கு.

 

பா வகை: கழி நெடிலடி ஆசிரிய அறுசீர் மண்டிலம். (காய்+ மா+மா)

 

நட்பினையே வணங்கி வாழ்வாய்;

நஞ்சுபோன்ற பகையை எதிர்ப்பாய்;

திட்டமிட்டே அடக்க வந்தால்

திறமுடனே விரட்டி அடிப்பாய்;

கட்டமைப்பே எதிராய் நின்றால்

கலங்காதே! துணிவாய் எதிர்கொள்;

பட்டத்து யானைக் கிணையாய்

பகைவரையும் வென்று வாழ்வாய்!

-----------------------------------------------------

20) தழைத்திட தன்னலம் துற.

 

 பா வகை: கழி நெடிலடி ஆசிரிய அறுசீர் மண்டிலம். (காய்+ மா+மா)

 

பிறர்நலம்தான் பேண வேண்டும்,

     பிள்ளைகளும் அறிய வைப்போம்,

பிறப்பால்நாம் எல்லாம் ஒன்றே,

     பித்தனவன் படைத்த நிலையே!

பிறவிதனில் தனக்கே எல்லாம்

     பிரித்தளிக்க மாட்டேன் என்பான்

பிறவியினால் பயன்தான் உண்டோ?

     பிறர்க்களித்தே அறம்தான் வளர்ப்போம்!

----------------------------------------------------------

21) நன்மையை நாடிச் செய்.

பா வகை: கழி நெடிலடி ஆசிரிய அறுசீர் மண்டிலம். (காய்+ மா+மா)

 

உலகெங்கும் ஏழை மக்கள்

    உணவுமின்றி வாடும் காட்சி;

பலருக்கும் இணைந்தே நாமும்

    பயன்தன்னை அளித்துக் காப்போம்!

சிலர்மட்டும் இணைந்தால் கூடச்

    செம்மையானச் செயலாய் முடியும்;

மலர்ந்திடுமே அவர்கள் வாழ்வும்

    மனமுவந்தே தொண்டு செய்வோம்!

 -------------------------------------------------------------------------