Pages

Showing posts with label கலித்தொகை. Show all posts
Showing posts with label கலித்தொகை. Show all posts

Friday, 16 June 2017

சங்க இலக்கியத் தூறல் 12 - காதலியும் காடைகளும்



காதலியும் காடைகளும்
--- அன்பு ஜெயா, சிட்னி

தன்னுடைய கணவன் விலைமகள் வீட்டிற்குச் சென்று தன் நேரத்தை இன்பமாகக் கழித்துவிட்டு வீட்டில் நுழைவதைப் பார்க்கிறாள் தலைவி. அவன் தனக்குத் துரோகம் செய்து வருகிறான் என்பதை நினைத்து அவளுக்கு சரியான கோபம். தான் ஏமாற்றப் படுகிறோம் என்று அவள் மனதில் ஆத்திரம் பொங்குகிறது.




ஆத்திரத்துடன், “அங்கேயே நில். உள்ளே வராதே. எப்போதும் விலைமகள்  வீட்டிற்குச் செல்பவன்தானே நீ. அந்தப் பாதையை மறந்து இங்கு வந்து விட்டாயோ? கருமையான, மணக்கும் கூந்தலை உடைய அந்த விலைமகளின் வீட்டிற்கே போய்விடு. நீ இங்கு நடந்த வந்தபோது சிவந்த போன உன் பாதங்கள் மீண்டும் சிவந்து போக அவள் வீட்டிற்கே திரும்பி நடந்து போய்விடு,” என்று அவன் முகத்தில் அடித்தது போலக் கூறுகிறாள்.
அதற்கு அவள் கணவன், “வெண்மையான பல்வரிசைக்குச் சொந்தக்காரியான என் காதலியே! நீ தவறாக நினைத்துக் கொண்டு இப்படிப் பேசுகிறாய். நான் விலைமகள் வீட்டிலிருந்து வரவில்லை. வேறு ஓர் இடத்திற்குச் சென்றிருந்தேன். அங்கே ஒருவன் சில காடைகளைக் கொண்டு வந்திருந்தான். சேவல் கோழிச் சண்டை பார்ப்பது போல காடைச் சண்டை பார்த்துக் கொண்டிருந்தேன். தாமதமாகிவிட்டது. நீ ஏதேதோ கற்பனை செய்துகொண்டு இருக்கிறாயே,” என்று அவளைச் சமாதானப் படுத்த முயன்றான்.

அவன் சொல்வதை நம்பாத அவள் ஏளனமாக, ” ஓ! காடைச் சண்டைப் பார்த்தாயா?! கேள்விப்பட்டேன், கேள்விப்பட்டேன். எப்படிப்பட்ட காடைகள் என்றும் கேள்விப்பட்டேன். அந்த யாழிசைக்கும் பாணன் புதிது புதிதாகக் காடைகளைக் கொண்டு வந்திருந்தானாம்! அவனுடைய யாழிசைக்கு ஏற்றதுபோல அந்தக் காடைகள் அவை சண்டைபோட்டனவாம்! ஆமாம், ஆமாம்! அந்தச் சண்டையைப் பார்த்தவன் போலத்தான் நீ காணப்படுகிறாய்! அந்தச் சண்டையால் உன் உடம்பில்தான் எத்தனை புண்கள். அந்தப் புண்களெல்லாம் காடைகள் சண்டையை நீ பார்த்தற்குச் சாட்சி சொல்கின்றனவே!,” என்று கூறியவள், மீண்டும் தொடர்ந்தாள்.
“நீதான் அந்தக் காடைகளுடனேயே எல்லா இடங்களிலும் சுற்றுவதைப் பார்த்துத்தான் இந்த ஊரே சிரிக்கிறதே! நீ திருந்த மாட்டாய்! ஊர் சிரிப்பதையும் பொருட்படுத்தாமல், அந்தக் காடையை உன் மார்போடு அணைத்துக் கொண்டிருக்கிறாய். அதனால் கர்வம் கொண்ட அந்தக் காடை மற்ற காடையுடன் சண்டையிட்டது. அதனால் அந்தக் காடையை விட்டுவிட்டு பாணனிடம் சொல்லி வேறொரு காடையைக் கொண்டு வரச்சொன்னாய். அவனும் வேறொரு காடையைக் கொண்டு வந்தான். அந்தக் காடையும் கர்வம் கொண்டு மற்ற காடையுடன் சண்டையிட்டது. இப்படிப் பல காடைகளின் சண்டையை நீ பார்த்ததை எல்லாம்தான் உன் முகம் காட்டிக் கொடுக்கிறதே!,” என்று அவளுடைய ஆத்திரத்தைக் கொட்டித் தீர்த்தாள்.

இன்னும் அவளைச் சமாதானம் படுத்த முடியும் என்று நம்பிய அவள் கணவன், “ என் ஆருயிரே! நீ நினைப்பதைப் போல் ஒன்றும் நடக்கவில்லை என்று உன் உடலைத் தொட்டு சத்தியம் செய்யட்டுமா?,” என்று கேட்டான்.

அதற்கு அவள், “ ஐயோ! வேண்டாமப்பா. நீ பொய்யை மெய்யாக மாற்றி வஞ்சிக்கக் கூடிய திறமைசாலி ஆயிற்றே. வேண்டவே வேண்டாம்,” என்று கூறினாள்.

அதற்கு அவன், “ நல்லவளே! என்னுடைய தவறுகளை எல்லாம் கண்டுபிடித்து, என்னைக் கையும் களவுமாகப் பிடித்துவிட்டாய். என் தவறுகளை மன்னித்து விடு,” என்று கூறினான்.
அதற்கு அவள், “மன்னிப்பேன் மன்னிப்பேன். உன்னை மன்னிக்க நான்யார்? நீ முன்பு பழகிக் கைவிட்ட அந்தக் காடைகளெல்லாம் இன்னும் உனக்காக ஏங்கிக் காத்துக் கொண்டிருக்கின்றன. உன்னுடைய பாணனை யாழ் வாசிக்கச் சொல்லி, அந்தக் காடைகளின் சண்டையைக் கண்டு ஆடிப் பாடு. என்னை ஏமாற்றியது போல அந்தக் காடைகளையாவது ஏமாற்றாமல் இரு,” என்று சொல்லி அவனை வெளியே அனுப்பிக் கதைவைச் சாத்திவிட்டாள்.

இந்தக் காட்சியைப் பாலைபாடிய பெருங்கடுங்கோ என்ற புலவர் பின்வரும் பாடலில் அழகாகச் சித்தரிக்கின்றார்.

தலைவி
நில் ஆங்கு, நில் ஆங்கு; இவர்தரல்; எல்லா! நீ
நாறு இருங் கூந்தலார் இல் செல்வாய், இவ் வழி
ஆறு மயங்கினை போறி! நீ வந்தாங்கே
மாறு, இனி நின் ஆங்கே – நின் சேவடி சிவப்ப

தலைவன்
செறிந்து ஒளிர் வெண் பல்லாய்! யாம் வேறு இயைந்த    5
குறும்பூழ்ப் போர் கண்டேம், அனைத்தல்லது, யாதும்
அறிந்ததோ இல்லை, நீ வேறு ஓர்ப்பது.

தலைவி
குறும்பூழ்ப் போர் கண்டமை கேட்டேன், நீ என்றும்
புதுவன ஈகை வளம் பாடி, காலின்
பிரியாக் கவி கைப் புலையன் தன் யாழின்    10
இகுத்த செவி சாய்த்து, இனிஇனிப் பட்டன
ஈகைப் போர் கண்டாயும் போறி; மெய் எண்ணின்
தபுத்த புலர்வில் புண்.
ஊரவர் கவ்வை உளைந்தீயாய், அல்கல் நின்
தாரின்வாய்க் கொண்டு முயங்கி, பிடி மாண்டு,   15
போர் வாய்ப்பக் காணினும் போகாது கொண்டு, ஆடும்
பார்வைப் போர் கண்டாயும் போறி; நின் தோள் மேலாம்
ஈரமாய் விட்டன புண்.
கொடிற்றுப் புண் செய்யாது, மெய்ம் முழுதும் கையின்
துடைத்து, நீ வேண்டினும் வெல்லாது கொண்டு, ஆடும்   20
ஒட்டிய போர் கண்டாயும் போறி; முகம்தானே
கொட்டிக் கொடுக்கும் குறிப்பு.

தலைவன்
ஆயின், ஆயிழாய்! அன்னவை யான்ஆங்கு அறியாமை
போற்றிய நின்மெய் தொடுகு.

தலைவி
‘அன்னையோ!’ ‘மெய்யைப் பொய் என்று மயங்கிய, கை ஒன்று  25
அறிகல்லாய் போறிகாண், நீ’.

தலைவன்
‘நல்லாய்! பொய் எல்லாம் ஏற்றி, தவறு தலைப்பெய்து
கையொடு கண்டாய்; பிழைத்தேன்; அருள், இனி’.

தலைவி
அருளுகம்; யாம்; யாரேம், எல்லா! தெருள?
அளித்து, நீ பண்ணிய பூழ் எல்லாம் இன்னும்    30
விளித்து, நின் பாணனோடு ஆடி அளித்தி
விடலை! நீ நீத்தலின் நோய் பெரிது ஏய்க்கும்
நடலைப்பட்டு, எல்லாம் நின் பூழ்.  

  --- (கலித்தொகை – 95)


தனக்குத் துரோகம் செய்துவிட்டு விலைமகள் வீட்டிற்குச் செல்லுகின்ற கணவனை விரட்டிய அடித்த ஒரு பெண்ணை சங்க காலத்திலும் காண்பது பெருமையாக உள்ளது. ஒரு வேளை கண்ணகி இந்தப் பெண்ணின் கதையைப் படித்திருக்க மாட்டாளோ?!

Wednesday, 15 October 2014

சங்க இலக்கியத் தூறல் - 6 : குழலிசையும் வருத்துமோ...?


சங்க இலக்கியத் தூறல் - 6

குழலிசையும் வருத்துமோ...?

--- அன்பு ஜெயா, சிட்னி

(சிட்னி சங்கத்தமிழ் மாநாடு 2014 - மலரில் வெளியிடப்பட்டது)

“குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.” – திருவள்ளுவர்



தம்முடைய பிள்ளைகளின் மழலைச் சொல்லைக் கேட்டு மகிழ்ச்சியுறாதவர்களே ‘குழலின் இசை இனிது’, ‘யாழின் இசை இனிது’ என்று கூறுவார்கள் என்று வள்ளுவப் பெருந்தகை கூறிவிட்டுச் சென்றார். பிள்ளைகளின் மழலைச் சொற்கள் அளிக்கின்ற இன்பத்திற்கு அடுத்த நிலையில் இன்பமளிப்பவையாக குழலின் இசையையும், யாழின் இசையையும் வைத்திருக்கின்றார் வள்ளுவர். அப்படிப்பட்ட குழலின் இசைகூட ஒருவரை வருத்துமா என்ற கேள்வி எழுகின்றது அல்லவா? ஆம், குழலின் இசைகூட வருத்தும் காலங்களும் உண்டு என்று சங்க காலப் புலவர்கள் சில காட்சிகளை நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகின்றனர்.


குழலின் இசை வருத்துமா?

“வினைவலம் படுத்த வென்றியொடு மகிழ்சிறந்து,
-----------------------------------------------------------------------
புன்கண் மாலையொடு பொருந்திக், கொடுங்கோற்
கல்லாக் கோவலர் ஊதும்
வல்லாய்ச் சிறுகுழல் வருத்தக்காலே!   

(மதுரைக் கவுணியன் பூதனார்: அகநானூறு, 74: 1-17)

இப்பாடலின் சாரம்: தலைமகன் போர் நிமித்தம் தலைவியைப் பிறிந்து செல்லுகின்றான். அந்தப் பிரிவை நினைத்துத் தலைவி வருந்துகிறாள். அதைக் கண்ணுற்ற தோழி, “போரில் வெற்றிபெற்று மகிழ்ச்சியுடன் நமது வீரர்கள் திரும்புவார்கள். தலைவனும் தேர்ப்பாகனிடம் தன் தேரினை விரைவாக ஓட்டச்சொல்லி வந்துசேருவார். அதுவரை நீ பொறுத்திரு”, என்று தலைவியைத் தேற்றுவதற்காகக் கூறுகின்றாள்.  அதற்குத் தலைவி, “நீ கூறுவதைக்கேட்டு நான் வருத்தப்படாமல் இருப்பேன். ஆனால், இந்த மாலை நேரத்தில் மற்ற தொழில் எதையும் கற்க விரும்பாத ஆயர்கள் தங்கள் பசுக்களை மேய்த்தபடி, தங்களின் சிறு குழலினை வாசித்துக்கொண்டு வருகிறார்கள். அந்தக் குழலின் ஓசையும், இந்த மாலைப் பொழுதுடன் சேர்ந்து என்னை வருத்துகின்றனவே”, என்று கூறுகின்றாள்.

இனிமையான குழலிசை வருத்தும் நேரம்:

“பகலினும் அகலா தாகி யாமம்
--------------------------------------------------------
ஒரு தனி அன்றில் உயவுக்குரல் கடைஇய
உள்ளே கனலும் உள்ளம்மெல்லெனக்
கனைஎரி பிறப்ப ஊதும்
நினையா மாக்கள் தீங்குழல் கேட்டே?     

(வடம வண்ணக்கண் பேரிச்சாத்தனார்: அகநானூறு, 305:1-15)

இப்பாடலின் சாரம்: தலைமகன் ஒருவன் பொருள் தேடுவதற்காகத் தன் தலைவியை விட்டுப் பிரிந்து வேற்றூருக்குச் சென்றிருக்கிறான். அவனைப் பிரிந்திருக்கும் கவலையில் உள்ள தலைவியை அவள் தோழி தேற்றுதற்கு முயல்கிறாள். ஆனால் தலைவியோ, “அருள் இல்லாதவராகக் காதலர் பொருள் தேடச் சென்றுவிட்டார். அதனால் மனம் நொந்து வேதனையில் மூழ்கியவளாக இருக்கிறேன். அங்கே பருத்த அடியுடைய பனைமரத்தில் துணையின்றி தனித்து நிற்கும் அன்றில் பறவையின் அவலக்குரல் கேட்கிறது. அந்தக் குரல் கொதிக்கின்ற என் நெஞ்சத்தினுள்ளே தீயை மூட்டுகின்றது. என்னுடைய இந்த நிலையை அறியாமல் அங்கே கோவலர்கள் (ஆயர்கள்) ஊதிக்கொண்டிருக்கிற குழலின் ஓசை மேலும் என்னை வருத்தும்போது நான் எப்படி என் மனத்தைத் தேற்றிக்கொள்ள முடியும் தோழி?”, என்று வினவுகிறாள். இவ்வாறு இனிமையான குழலினிசைகூட தன் தலைவனுடன் இருந்த இன்பமான சூழல்களை அவளுக்கு நினைவுபடுத்தி அவளை வருத்துகின்றது.

கார்காலத்து மழையும் வாடையும் வருத்துகின்றன:

“சொல்லிய பருவம் கழிந்தன்று எல்லையும்
மயங்கிருள் நடுநாள் மங்குலோடு ஒன்றி
------------------------------------------------------------------
பல்லான் தந்த கல்லாக் கோவலர்
கொன்றையந் தீங்குழல் மன்றுதோ றிசைப்ப
உயிர்செலத் துணிதரு மாலை
செயிர்தீர் மாரியொடு ஒருங்குதலை வரினே.’ 

(கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார்: நற்றிணை, 364: 1-12)

இப்பாடலின் சாரம்: ஒரு தலைவனும் தலைவியும் களவொழுக்கத்திலே திளைத்திருந்தார்கள். தலைவியின் காதலை நன்கு உணர்ந்த தலைவன் அவளை மணம் புரிந்து கொள்வதற்குத் தேவையான பொருள் தேடுவதற்காக வெளியூர் செல்ல முடிவு செய்தான். செல்லும்போது தலைவியிடம் தன் வேலை முடித்து தான் வேனில் பருவத்தில் திரும்பிவிடுவதாகக் கூறிச் சென்றான். தங்கள் திருமணத்திற்குப் பொருள் தேடத்தானே தலைவன் வேற்றூர் செல்கிறான் என்பதனால் தலைவியும் அந்தப் பிரிவை ஏற்றுக்கொண்டு தலைவனை வழியனுப்பி வைத்தாள். தலைவனோ தன் வேலை முடியாததால் கார்காலம் தொடங்கியும் திரும்பவரவில்லை. அதனால் கவலையுற்ற தலைவிக்கு தன்னைச் சுற்றியுள்ளவையெல்லாம் அவளை வருத்துவதாகத் தோன்றுகின்றது. அப்போது அவள் தன் தோழியிடம், “தலைவன் கூறிச்சென்ற நேரத்தில் திரும்பி வரவில்லை. இந்தக் கார்காலத்து மழையும், வாடைக்காற்றும் என்னை வருத்துகின்றன. இதனால் என் வாழ்க்கையின்மீது வெறுப்பு ஏற்படுகிறது. இத்துடன், மாலையில் பசுக்களை மேய்த்துக் கொண்டிருக்கின்ற கோவலர்களின் குழலிசையும் சேர்ந்து என்னை வருத்தினாள் நான் பல நாள் இவ்வுலகில் வாழமுடியாது”, என்று கூறுகிறாள்.

தலைவியின் முன் ஊதும் குழல் வருத்தும்:

காயாங் குன்றத்துக் கொன்றை போல
மாமலை விடாகம் விளங்க மின்னி
------------------------------------------------------------------
அழல்தொடங் கினளே ஆயிழை அதன்எதிர்
குழல்தொடங் கினரே கோவலர்
தழங்குகுரல் உருமின் கங்கு வானே.
(ஔவையார்: நற்றிணை, 371: 1-9)

இப்பாடலின் சாரம்: கற்புநெறியில் கணவனும் மனைவியுமாக வாழ்ந்த வந்த இணையரில், கணவன் தங்கள் வாழ்விற்காகப் பொருள் தேடும் பொருட்டு மனைவியைப் பிரிந்து சென்றான். செல்லும் முன் தன் தலைவியிடம் தான் கார்காலத்தில் திரும்பிவிடுவேன் என்று கூறி விடைபெற்றான். தலைவன் தான் சென்ற இடத்தில் திறமையுடன் பணியாற்றி குறித்த காலத்தில் தேவையான பொருள் சேர்த்துக்கொண்டு திரும்பி வர முடிவு செய்கின்றான். அப்பொழுது வேனில் காலம் முடிந்து கார்காலம் துவங்குவற்கான அறிகுறிகள் தெரிகின்றன. கொன்றை, காயா முதலிய மரங்கள் தழைத்து பூக்கள் மலர்ந்து கார்காலத்தின் வரவை எடுத்துக் காட்டுகின்றன.  வானத்தில் கரிய மேகக் கூட்டங்கள் தோன்றி தலைவனின் நாடு இருந்த திசை நோக்கி நகர்ந்து செல்லுகின்றன. அவற்றைக் கண்ட தலைவனுக்குத் தலைவியின் காதல் நினைவு வருகின்றது. இந்த மேகங்கூட்டங்களின் வரவைக் கண்டால் கார்காலம் துவங்கிவிட்டது இன்னும் நம் தலைவன் வரவில்லையே என்று தலைவி வருந்துவாள் என்று அவனுக்குத் தோன்றியது.  அதனால் தன் தேர்ப்பாகனிடம், “பாகனே, இந்த மேகக்கூட்டங்கள் என் தலைவி இருக்கும் இடம் நோக்கிச் சென்று அங்கு மழையைப் பொழிவிக்கும். அதைக் கண்டால் நான் அவளிடம் வாராமல் இருப்பதை எண்ணி வருந்தி அழுவாள். அதை அதிகமாக்கும் வகையில், மாலைப் பொழுதில் கோவலர்கள் ஊதும் குழலிசை அவள் மனதில் காதல் வேட்கையைத் தூண்டி அவளைத் துன்புறுத்தும். எனவே நாம் விரைந்து செல்வது இன்றியமையாதாகும். நீ தேரினை வேகமாக ஓட்டுவாயாக”, என்று கூறினான்.

வருத்தும் மாலை நேரம்

“வெல்புகழ் மன்னவன், விளங்கிய ஒழுக்கத்தால்,
நல்லாற்றின் உயிர் காத்து, நடுக்கறத் தான்செய்த
-------------------------------------------------------------------------------------
மாலை நீ – தையெனக் கோவலர் தனிக்குழல் இசைகேட்டுப்
பையென்ற நெஞ்சத்தேம் பக்கம்பா ராட்டுவாய்,
----------------------------------------------------------------------------------
உள்ளில் உள்ளம், உள்ளுள் உவந்தே.

(நல்லந்துவனார்: கலித்தொகை, 118:1-25)

இப்பாடலின் சாரம்: தலைவன் தலைவியைப் பிரிந்து செல்கிறான். அந்தப் பிரிவின் துயரத்தைத் தாங்க முடியாத தலைவி பலவாறு தன் துயரத்தை வெளிப்படுத்துகிறாள். பலகாலம் மக்களைக் காத்த மன்னவன் தன் நல்வினைகளின் பயன்களை அடைவதற்காக துறவு மேற்கொள்வதுபோல, பகலெல்லாம் ஒளி வீசிய சூரியன் மாலையில் மறைந்தான். அந்த மன்னன் சென்றபின் மற்றொருவன் நாட்டை ஆள்வதுபோல், கதிரவன் மறைந்தபின் வானிலே சந்திரன் தோன்றினான். இந்த பகலுக்கும் இரவிற்கும் இடையில் மயக்கம் நிறைந்த மாலை வந்தது. அதை நோக்கித் தலைவி தன் மனநிலையைக் கூறுகின்றாள். “ஏ மாலையே! என் தலைவனைப் பிரிந்து நான் மனம் குவிந்து போயிருக்கும்போது நீ வந்து என் அழகைச் சிதைக்கின்றாய். மனம் நெகிழ்ந்து காதலருடன் கூடியிருக்கும் மங்கையரின் அழகை நீ நீக்க மாட்டாய். இந்த வேளையில் கோவலர் ஊதும் குழலிசை கேட்கிறது. அது ‘தை’ என்ற ஓசையோடு ஒலிக்கிறது. அந்த ஓசை கேட்கையில் நான் என் காதலருடன் கூடி இருக்க இயலாமல் போயிற்றே என்று மனம் நொந்து இருக்கும்போதும் என் உயிரை வாங்காமல் வேடிக்கைப் பார்க்கிறாய்,” என்று தலைவி மாலை நேரத்தை கடிந்துகொள்கின்றாள்.

குழல்கூட வருந்துகின்றதோ!

“தொல்ஊழி தடுமாறித் தொகல்வேண்டும் பருவத்தால்
பல்வயின் உயிரெல்லாம் படைத்தான்கண் பெயர்ப்பான்போல்
-----------------------------------------------------------------------------------------------------
பனிஇருள் சூழ்தரப் பைதல்அம் சிறுகுழல்
இனிவரின் உயரும்மன் பழிஎனக் கலங்கிய
தனியவர் இடும்பைகண்டு இனைதியோ?- எம்போல
இனியசெய்து அகன்றாரை உடையாயோ நீ? எனவாங்கு.
---------------------------------------------------------------------------------
அருந்தியோர் நெஞ்சம் அழிந்துஉக விடினே.

(கலித்தொகை, 129: 1-25)

இப்பாடலின் சாரம்: களவு நெறியிலே தன் தலைவனுடன் வாழ்ந்துவந்த தலைவி இப்போது தலைவனைப் பிரிந்து வாடுகின்றாள். தன்னைச் சூழ்ந்துள்ள பல பொருள்களிடம் அவை தன்னுடைய உணர்வைப் புரிந்து கொண்டு பேசும் என்ற எண்ணத்தில் அவற்றிடம் பேசுகின்றாள். அதில் ஒன்றாக, புல்லாங்குழலைப் பார்த்து, “வருத்தத்தையுடைய குழலே! என் தலைவர் இந்த நேரத்திலே திரும்ப வந்தாலும் ஊர் மக்களின் பழிச்சொல் நீங்கிவிடுமே. என்னைப்போல் தலைவரின் வரவுக்காக ஏங்கும் மங்கையரின் துன்பத்தைக் கண்டு வருந்துகிறாயோ? ஒருவேளை என்னை மகிழ்வித்த என் தலைவர் பிரிந்து சென்றதுபோல் உனக்குரியவரும் உன்னைப் பிரிந்து சென்றாரோ?” என்று கேட்கிறாள். தான் வருத்தத்தில் உள்ளபோது தான் பார்க்கும் பொருள்களெல்லாம் வருந்துவதாகத் தோன்றுகின்றது தலைவிக்கு. இப்படிப் பலவிதமாக தலைவி புலம்பி, வருந்துகின்ற நிலையை தலைவனுக்கு எடுத்துரைத்துத் தலைவியைத் திருமணம் செய்துகொள்ளும்படி அவளுடைய தோழி தலைவனிடம் கூறுகின்றாள்.


இவ்வாறு, இனிமை பயக்கக்கூடிய குழலின் இசைகூட மனதிற்கு இன்பம் தராமல் வருத்தம் அளிக்கும் சூழ்நிலைகள் மனித வாழ்க்கையில்  உண்டென்பதைச் சங்க காலப் புலவர்கள் அழகாக இக்காட்சிகள் மூலம் எடுத்துக் கூறியுள்ள சிறப்பை என்னென்று புகழ்வது!
---------------------------

Monday, 15 September 2014

சங்க இலக்கியத் தூறல் - 5: மருந்தறிந்தவன்---------------?


சங்க இலக்கியத் தூறல் - 5

(ஆஸ்திரேலிய தமிழ்முரசு வலைப்பூவில் http://www.tamilmurasuaustralia.com/ 15-09-2014 அன்று வெளியிடப்பட்டது )


மருந்தறிந்தவன் நோய்தீர்க்க மறுப்பானோ……?

--- அன்பு ஜெயா, சிட்னி

காதலனின் பிரிவினால் தவிக்கின்ற காதலி தன் செயலற்ற நிலையை எண்ணித் தனக்குள்ளே புழுங்குகின்றாள். இதைக் கண்ணுற்ற அவள் தோழி தலைவியின் இந்தப் பிரிவாற்றாமையைப் போக்க வேண்டி தலைவனைச் சந்தித்துத் தலைவி மற்ற பொருள்களையும் உயிரினங்களையும் அழைத்து அவற்றால் பேசவும்,  கேட்கவும் முடியும் என்று நினைத்துக்கொண்டு அவற்றிடம் தன் வருத்தத்தின் உச்சத்தில் பலவாறு புலம்புகின்ற அவல நிலையை எடுத்துக் கூறுகின்றாள்.





தலைவியின் புலம்பல்

“உலகத்து உயிர்களெல்லாம் தம் வாழ்நாளின் இறுதியில் இறந்து, மறபடியும் பிறந்து, பல பிறவிகள் எடுத்து, உலக முடிவு காலத்தில் (ஊழி) தம்மைப் படைத்த இறைவனிடம் சென்று ஒடுங்குகின்றன. அதன் பின் பேரிருள் சூழும். அதுபோலப் பகல் நேரத்தில் தன்னுடைய ஒளியினால் இவ்வுலகத்தை வாழ்வித்த சூரியன், அந்நாளின் முடிவில் தன் ஒளிக்கதிர்களைத் தன்னுள்ளே அடக்கிக்கொண்டு மலைகளிடையே மறைந்திடுவான். அப்போது எங்கும் இருள் சூழும். நல்ல நெறியுடன் ஆட்சி செய்த மன்னனுக்குப்பின் அவனுக்கு நேர்மாறான, வலிமையற்ற ஓர் அரசனின் ஆட்சிக்காலம் வருவதுபோல, அந்த இருளுக்கும் பகலுக்கும் எல்லையாக இருக்கும் மாலை நேரம் வந்துசேரும். அந்த மாலை நேரம்தான் எனக்கு எவ்வளவு துன்பத்தைத் தருகின்றது.”

சங்க இலக்கியப் பாடல்:

தொல்ஊழி தடுமாறித் தொகல்வேண்டும் பருவத்தால்
பல்வயின் உயிரெல்லாம் படைத்தான்கண் பெயர்ப்பான்போல்
எர்உறு தெறுகதிர் மடங்கித்தன் கதிர்மாய
நல்லற நெறிநிறீஇ உலகாண்ட அரசன்பின்
அல்லது மலைந்திருந்து அறநெறி நிறுக்கல்லா
மெல்லியான் பருவம்போல்  மயங்குஇருள் தலைவர
எல்லைக்கு வரம்பாய இடும்பைகூர் மருண்மாலை ;    
(கலித்தொகை,129: 1-7)


கடலினிடம் பேசுகிறாள்

 “எப்போதும் அலைகளினால் ஓசையிட்டுக் கொண்டிருக்கும் பரந்து விரிந்த கடலே! ‘எங்கள் வலிமை போய்விட்டது’ என்பது போல எண்ணி எங்களைக் கைவிட்டுப் பிரிந்த தலைவர்களால் நாங்கள் படுகின்ற வேதனையைக் கண்டு நீயும் வருந்துகின்றாயோ? அதனால்தான் ஓசை எழுப்பி உன் வருத்தத்தைத் தெரிவிக்கின்றாயோ?  அல்லது, எங்களைப் போலவே, நீயும் உன்னைக் காதலித்துப் பின் பிரிந்து போன காதலனை நினைத்து வருந்துகின்றாயோ?”

பாய்திரை பாடுஓவாப் பரப்புநீர்ப் பனிக்கடல்!
தூஅறத் துறந்தனன் துறைவன்என்று  அவன்திறம்
நோய்தெற உழப்பார்கண் இமிழ்தியோ? - எம்போலக்
காதல்செய்து அகன்றாரை உடையையோ நீ?            
(கலித்தொகை,129: 8-11)


அன்றில் பறவையினிடம் பேசுகிறாள்

“முற்றத்தில் நின்கின்ற பனைமரத்திலே உள்ள அன்றில் பறைவையே! தலைவர் நன்றி மறந்தார் என்று நான் வருந்துவதால் ஏற்படுகின்ற என் துயரத்தை அறிந்துதான் எனக்காக நீ ஓசை எழுப்புகின்றாயோ? இல்லை, என்னுடைய தலைவர் எனக்கு இன்பம் அளித்துப்பின் பிரிந்து சென்றதைப்போல உன் காதலரும் உன்னைப் பிரிந்து சென்றதனால் ஓசை எழுப்பி உன் துயரத்தை வெளிப்படுத்துகின்றாயோ?”

மன்றுஇரும் பெண்ணை மடல்சேர் அன்றில்!
நன்றுஅறை கொன்றனர் அவர்எனக் கலங்கிய
என்துயர்  அறிந்தனை நரறியோ? - எம்போல
இன்துணைப் பிரிந்தாரை உடையையோ நீ?   
(கலித்தொகை,129: 12-15)


புல்லாங்குழலினிடம் பேசுகிறாள்

தலைவி ஒரு புல்லாங்குழலைப் பார்த்து, “வருத்தத்தையுடைய குழலே! என் தலைவர் இந்த நேரத்திலே திரும்ப வந்தாலும் ஊர் மக்களின் பழிச்சொல் நீங்கிவிடுமே. இப்போது வருவாரோ மாட்டாரோ என்று என்னைப்போல் தலைவரின் வரவுக்காக ஏங்கும் மங்கையர் அனைவருடைய துன்பத்தையும் கண்டு நீ வருந்துகின்றாயோ? ஒருவேளை என்னை மகிழ்வித்த என் தலைவர் என்னைத் தனியேவிட்டுப் பிரிந்து சென்றதுபோல உன்னை மகிழ்வித்த உன்னுடைய காதலரும் உன்னைவிட்டுப் பிரிந்து சென்றாரோ?” என்று வினவுகிறாள்.

பனிஇருள் சூழ்தரப் பைதல்அம் சிறுகுழல்!

இனிவரின் உயரும்மன்  பழிஎனக் கலங்கிய

தனியவர் இடும்பைகண்டு  இனைதியோ? - எம்போல

இனியசெய்து அகன்றாரை உடையையோ நீ?  
      
(கலித்தொகை,129: 16-19)

இவ்வாறு தான் வருத்தத்தில் உள்ளபோது தான் பார்க்கும் பொருள்களெல்லாம் வருந்துவதாகத் தோன்றுகின்றது தலைவிக்கு.


தோழியின் கூற்று

தலைவனைச் சந்தித்த தோழி அவனிடம், “தலைவனே! இவ்வாறெல்லாம் என் தலைவி புலம்புகின்றாள். அவளுடைய மனம் ஒடிந்து, அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு இது தெரிந்துபோனதால் அவள் வருத்தம் அதிகமாகிப் பித்துப்பிடித்தவள் போல இருக்கின்றாள். அவளுடைய வருத்தத்தை விரைந்து வந்து நீக்குவாயாக. அப்படிச் செய்யாமல் உன்னைச் சேர்ந்தோரின் மனம் அழிந்து சிதறும்படி விட்டுவிடுவாயானால், அது நோயால் வருந்தும் ஒருவனுக்கு அதைத் தீர்க்கும் மருந்தைத் தெரிந்திருந்தும் கூறாமல் மறைப்பதைவிடக் கொடுமையான செயலாகும்”, என்று கூறினாள். இப்படிப் பலவிதமாகத் தலைவி புலம்பி, வருந்துகின்ற நிலையைத் தலைவனுக்கு எடுத்துரைத்துத் தலைவியைத் திருமணம் செய்துகொள்ளும்படி தோழி தலைவனிடம் வேண்டிக்கொள்கின்றாள்.

எனவாங்கு;

அழிந்துஅயல் அறிந்த எவ்வம் மேற்படப்

பெரும்பே துறுதல் களைமதி பெரும

வருந்திய செல்லல் தீர்த்த திறன்அறி ஒருவன்

மருந்துஅறை கோடலின் கொடிதே – யாழநின்

அருந்தியோர் நெஞ்சம் அழிந்துஉக விடினே.  

     (கலித்தொகை, 129: 20-25)


சங்க இலக்கியங்களில் ஒரு தலைவன்-தலைவியினுடைய வாழ்க்கையில் தோழியின் பங்கு எவ்வளவு சிறப்பானதாக இருந்தது என்பதற்கு இது போன்ற சங்க இலக்கியப் பாடல்கள் பல சான்று பகர்கின்றன.
---------------------------------------