Pages

Wednesday, 15 October 2014

சங்க இலக்கியத் தூறல் - 6 : குழலிசையும் வருத்துமோ...?


சங்க இலக்கியத் தூறல் - 6

குழலிசையும் வருத்துமோ...?

--- அன்பு ஜெயா, சிட்னி

(சிட்னி சங்கத்தமிழ் மாநாடு 2014 - மலரில் வெளியிடப்பட்டது)

“குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர். – திருவள்ளுவர்



தம்முடைய பிள்ளைகளின் மழலைச் சொல்லைக் கேட்டு மகிழ்ச்சியுறாதவர்களே குழலின் இசை இனிது’, யாழின் இசை இனிது என்று கூறுவார்கள் என்று வள்ளுவப் பெருந்தகை கூறிவிட்டுச் சென்றார். பிள்ளைகளின் மழலைச் சொற்கள் அளிக்கின்ற இன்பத்திற்கு அடுத்த நிலையில் இன்பமளிப்பவையாக குழலின் இசையையும், யாழின் இசையையும் வைத்திருக்கின்றார் வள்ளுவர். அப்படிப்பட்ட குழலின் இசைகூட ஒருவரை வருத்துமா என்ற கேள்வி எழுகின்றது அல்லவா? ஆம், குழலின் இசைகூட வருத்தும் காலங்களும் உண்டு என்று சங்க காலப் புலவர்கள் சில காட்சிகளை நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகின்றனர்.


குழலின் இசை வருத்துமா?

“வினைவலம் படுத்த வென்றியொடு மகிழ்சிறந்து,
-----------------------------------------------------------------------
புன்கண் மாலையொடு பொருந்திக், கொடுங்கோற்
கல்லாக் கோவலர் ஊதும்
வல்லாய்ச் சிறுகுழல் வருத்தக்காலே!   

(மதுரைக் கவுணியன் பூதனார்: அகநானூறு, 74: 1-17)

இப்பாடலின் சாரம்: தலைமகன் போர் நிமித்தம் தலைவியைப் பிறிந்து செல்லுகின்றான். அந்தப் பிரிவை நினைத்துத் தலைவி வருந்துகிறாள். அதைக் கண்ணுற்ற தோழி, “போரில் வெற்றிபெற்று மகிழ்ச்சியுடன் நமது வீரர்கள் திரும்புவார்கள். தலைவனும் தேர்ப்பாகனிடம் தன் தேரினை விரைவாக ஓட்டச்சொல்லி வந்துசேருவார். அதுவரை நீ பொறுத்திரு”, என்று தலைவியைத் தேற்றுவதற்காகக் கூறுகின்றாள்.  அதற்குத் தலைவி, “நீ கூறுவதைக்கேட்டு நான் வருத்தப்படாமல் இருப்பேன். ஆனால், இந்த மாலை நேரத்தில் மற்ற தொழில் எதையும் கற்க விரும்பாத ஆயர்கள் தங்கள் பசுக்களை மேய்த்தபடி, தங்களின் சிறு குழலினை வாசித்துக்கொண்டு வருகிறார்கள். அந்தக் குழலின் ஓசையும், இந்த மாலைப் பொழுதுடன் சேர்ந்து என்னை வருத்துகின்றனவே”, என்று கூறுகின்றாள்.

இனிமையான குழலிசை வருத்தும் நேரம்:

“பகலினும் அகலா தாகி யாமம்
--------------------------------------------------------
ஒரு தனி அன்றில் உயவுக்குரல் கடைஇய
உள்ளே கனலும் உள்ளம்மெல்லெனக்
கனைஎரி பிறப்ப ஊதும்
நினையா மாக்கள் தீங்குழல் கேட்டே?     

(வடம வண்ணக்கண் பேரிச்சாத்தனார்: அகநானூறு, 305:1-15)

இப்பாடலின் சாரம்: தலைமகன் ஒருவன் பொருள் தேடுவதற்காகத் தன் தலைவியை விட்டுப் பிரிந்து வேற்றூருக்குச் சென்றிருக்கிறான். அவனைப் பிரிந்திருக்கும் கவலையில் உள்ள தலைவியை அவள் தோழி தேற்றுதற்கு முயல்கிறாள். ஆனால் தலைவியோ, “அருள் இல்லாதவராகக் காதலர் பொருள் தேடச் சென்றுவிட்டார். அதனால் மனம் நொந்து வேதனையில் மூழ்கியவளாக இருக்கிறேன். அங்கே பருத்த அடியுடைய பனைமரத்தில் துணையின்றி தனித்து நிற்கும் அன்றில் பறவையின் அவலக்குரல் கேட்கிறது. அந்தக் குரல் கொதிக்கின்ற என் நெஞ்சத்தினுள்ளே தீயை மூட்டுகின்றது. என்னுடைய இந்த நிலையை அறியாமல் அங்கே கோவலர்கள் (ஆயர்கள்) ஊதிக்கொண்டிருக்கிற குழலின் ஓசை மேலும் என்னை வருத்தும்போது நான் எப்படி என் மனத்தைத் தேற்றிக்கொள்ள முடியும் தோழி?, என்று வினவுகிறாள். இவ்வாறு இனிமையான குழலினிசைகூட தன் தலைவனுடன் இருந்த இன்பமான சூழல்களை அவளுக்கு நினைவுபடுத்தி அவளை வருத்துகின்றது.

கார்காலத்து மழையும் வாடையும் வருத்துகின்றன:

“சொல்லிய பருவம் கழிந்தன்று எல்லையும்
மயங்கிருள் நடுநாள் மங்குலோடு ஒன்றி
------------------------------------------------------------------
பல்லான் தந்த கல்லாக் கோவலர்
கொன்றையந் தீங்குழல் மன்றுதோ றிசைப்ப
உயிர்செலத் துணிதரு மாலை
செயிர்தீர் மாரியொடு ஒருங்குதலை வரினே. 

(கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார்: நற்றிணை, 364: 1-12)

இப்பாடலின் சாரம்: ஒரு தலைவனும் தலைவியும் களவொழுக்கத்திலே திளைத்திருந்தார்கள். தலைவியின் காதலை நன்கு உணர்ந்த தலைவன் அவளை மணம் புரிந்து கொள்வதற்குத் தேவையான பொருள் தேடுவதற்காக வெளியூர் செல்ல முடிவு செய்தான். செல்லும்போது தலைவியிடம் தன் வேலை முடித்து தான் வேனில் பருவத்தில் திரும்பிவிடுவதாகக் கூறிச் சென்றான். தங்கள் திருமணத்திற்குப் பொருள் தேடத்தானே தலைவன் வேற்றூர் செல்கிறான் என்பதனால் தலைவியும் அந்தப் பிரிவை ஏற்றுக்கொண்டு தலைவனை வழியனுப்பி வைத்தாள். தலைவனோ தன் வேலை முடியாததால் கார்காலம் தொடங்கியும் திரும்பவரவில்லை. அதனால் கவலையுற்ற தலைவிக்கு தன்னைச் சுற்றியுள்ளவையெல்லாம் அவளை வருத்துவதாகத் தோன்றுகின்றது. அப்போது அவள் தன் தோழியிடம், “தலைவன் கூறிச்சென்ற நேரத்தில் திரும்பி வரவில்லை. இந்தக் கார்காலத்து மழையும், வாடைக்காற்றும் என்னை வருத்துகின்றன. இதனால் என் வாழ்க்கையின்மீது வெறுப்பு ஏற்படுகிறது. இத்துடன், மாலையில் பசுக்களை மேய்த்துக் கொண்டிருக்கின்ற கோவலர்களின் குழலிசையும் சேர்ந்து என்னை வருத்தினாள் நான் பல நாள் இவ்வுலகில் வாழமுடியாது”, என்று கூறுகிறாள்.

தலைவியின் முன் ஊதும் குழல் வருத்தும்:

காயாங் குன்றத்துக் கொன்றை போல
மாமலை விடாகம் விளங்க மின்னி
------------------------------------------------------------------
அழல்தொடங் கினளே ஆயிழை அதன்எதிர்
குழல்தொடங் கினரே கோவலர்
தழங்குகுரல் உருமின் கங்கு வானே.
(ஔவையார்: நற்றிணை, 371: 1-9)

இப்பாடலின் சாரம்: கற்புநெறியில் கணவனும் மனைவியுமாக வாழ்ந்த வந்த இணையரில், கணவன் தங்கள் வாழ்விற்காகப் பொருள் தேடும் பொருட்டு மனைவியைப் பிரிந்து சென்றான். செல்லும் முன் தன் தலைவியிடம் தான் கார்காலத்தில் திரும்பிவிடுவேன் என்று கூறி விடைபெற்றான். தலைவன் தான் சென்ற இடத்தில் திறமையுடன் பணியாற்றி குறித்த காலத்தில் தேவையான பொருள் சேர்த்துக்கொண்டு திரும்பி வர முடிவு செய்கின்றான். அப்பொழுது வேனில் காலம் முடிந்து கார்காலம் துவங்குவற்கான அறிகுறிகள் தெரிகின்றன. கொன்றை, காயா முதலிய மரங்கள் தழைத்து பூக்கள் மலர்ந்து கார்காலத்தின் வரவை எடுத்துக் காட்டுகின்றன.  வானத்தில் கரிய மேகக் கூட்டங்கள் தோன்றி தலைவனின் நாடு இருந்த திசை நோக்கி நகர்ந்து செல்லுகின்றன. அவற்றைக் கண்ட தலைவனுக்குத் தலைவியின் காதல் நினைவு வருகின்றது. இந்த மேகங்கூட்டங்களின் வரவைக் கண்டால் கார்காலம் துவங்கிவிட்டது இன்னும் நம் தலைவன் வரவில்லையே என்று தலைவி வருந்துவாள் என்று அவனுக்குத் தோன்றியது.  அதனால் தன் தேர்ப்பாகனிடம், “பாகனே, இந்த மேகக்கூட்டங்கள் என் தலைவி இருக்கும் இடம் நோக்கிச் சென்று அங்கு மழையைப் பொழிவிக்கும். அதைக் கண்டால் நான் அவளிடம் வாராமல் இருப்பதை எண்ணி வருந்தி அழுவாள். அதை அதிகமாக்கும் வகையில், மாலைப் பொழுதில் கோவலர்கள் ஊதும் குழலிசை அவள் மனதில் காதல் வேட்கையைத் தூண்டி அவளைத் துன்புறுத்தும். எனவே நாம் விரைந்து செல்வது இன்றியமையாதாகும். நீ தேரினை வேகமாக ஓட்டுவாயாக”, என்று கூறினான்.

வருத்தும் மாலை நேரம்

“வெல்புகழ் மன்னவன், விளங்கிய ஒழுக்கத்தால்,
நல்லாற்றின் உயிர் காத்து, நடுக்கறத் தான்செய்த
-------------------------------------------------------------------------------------
மாலை நீ – தையெனக் கோவலர் தனிக்குழல் இசைகேட்டுப்
பையென்ற நெஞ்சத்தேம் பக்கம்பா ராட்டுவாய்,
----------------------------------------------------------------------------------
உள்ளில் உள்ளம், உள்ளுள் உவந்தே.

(நல்லந்துவனார்: கலித்தொகை, 118:1-25)

இப்பாடலின் சாரம்: தலைவன் தலைவியைப் பிரிந்து செல்கிறான். அந்தப் பிரிவின் துயரத்தைத் தாங்க முடியாத தலைவி பலவாறு தன் துயரத்தை வெளிப்படுத்துகிறாள். பலகாலம் மக்களைக் காத்த மன்னவன் தன் நல்வினைகளின் பயன்களை அடைவதற்காக துறவு மேற்கொள்வதுபோல, பகலெல்லாம் ஒளி வீசிய சூரியன் மாலையில் மறைந்தான். அந்த மன்னன் சென்றபின் மற்றொருவன் நாட்டை ஆள்வதுபோல், கதிரவன் மறைந்தபின் வானிலே சந்திரன் தோன்றினான். இந்த பகலுக்கும் இரவிற்கும் இடையில் மயக்கம் நிறைந்த மாலை வந்தது. அதை நோக்கித் தலைவி தன் மனநிலையைக் கூறுகின்றாள். “ஏ மாலையே! என் தலைவனைப் பிரிந்து நான் மனம் குவிந்து போயிருக்கும்போது நீ வந்து என் அழகைச் சிதைக்கின்றாய். மனம் நெகிழ்ந்து காதலருடன் கூடியிருக்கும் மங்கையரின் அழகை நீ நீக்க மாட்டாய். இந்த வேளையில் கோவலர் ஊதும் குழலிசை கேட்கிறது. அது தை என்ற ஓசையோடு ஒலிக்கிறது. அந்த ஓசை கேட்கையில் நான் என் காதலருடன் கூடி இருக்க இயலாமல் போயிற்றே என்று மனம் நொந்து இருக்கும்போதும் என் உயிரை வாங்காமல் வேடிக்கைப் பார்க்கிறாய்,” என்று தலைவி மாலை நேரத்தை கடிந்துகொள்கின்றாள்.

குழல்கூட வருந்துகின்றதோ!

“தொல்ஊழி தடுமாறித் தொகல்வேண்டும் பருவத்தால்
பல்வயின் உயிரெல்லாம் படைத்தான்கண் பெயர்ப்பான்போல்
-----------------------------------------------------------------------------------------------------
பனிஇருள் சூழ்தரப் பைதல்அம் சிறுகுழல்
இனிவரின் உயரும்மன் பழிஎனக் கலங்கிய
தனியவர் இடும்பைகண்டு இனைதியோ?- எம்போல
இனியசெய்து அகன்றாரை உடையாயோ நீ? எனவாங்கு.
---------------------------------------------------------------------------------
அருந்தியோர் நெஞ்சம் அழிந்துஉக விடினே.

(கலித்தொகை, 129: 1-25)

இப்பாடலின் சாரம்: களவு நெறியிலே தன் தலைவனுடன் வாழ்ந்துவந்த தலைவி இப்போது தலைவனைப் பிரிந்து வாடுகின்றாள். தன்னைச் சூழ்ந்துள்ள பல பொருள்களிடம் அவை தன்னுடைய உணர்வைப் புரிந்து கொண்டு பேசும் என்ற எண்ணத்தில் அவற்றிடம் பேசுகின்றாள். அதில் ஒன்றாக, புல்லாங்குழலைப் பார்த்து, “வருத்தத்தையுடைய குழலே! என் தலைவர் இந்த நேரத்திலே திரும்ப வந்தாலும் ஊர் மக்களின் பழிச்சொல் நீங்கிவிடுமே. என்னைப்போல் தலைவரின் வரவுக்காக ஏங்கும் மங்கையரின் துன்பத்தைக் கண்டு வருந்துகிறாயோ? ஒருவேளை என்னை மகிழ்வித்த என் தலைவர் பிரிந்து சென்றதுபோல் உனக்குரியவரும் உன்னைப் பிரிந்து சென்றாரோ?” என்று கேட்கிறாள். தான் வருத்தத்தில் உள்ளபோது தான் பார்க்கும் பொருள்களெல்லாம் வருந்துவதாகத் தோன்றுகின்றது தலைவிக்கு. இப்படிப் பலவிதமாக தலைவி புலம்பி, வருந்துகின்ற நிலையை தலைவனுக்கு எடுத்துரைத்துத் தலைவியைத் திருமணம் செய்துகொள்ளும்படி அவளுடைய தோழி தலைவனிடம் கூறுகின்றாள்.


இவ்வாறு, இனிமை பயக்கக்கூடிய குழலின் இசைகூட மனதிற்கு இன்பம் தராமல் வருத்தம் அளிக்கும் சூழ்நிலைகள் மனித வாழ்க்கையில்  உண்டென்பதைச் சங்க காலப் புலவர்கள் அழகாக இக்காட்சிகள் மூலம் எடுத்துக் கூறியுள்ள சிறப்பை என்னென்று புகழ்வது!
---------------------------

3 comments:

  1. அருமையான அவதானம். ஆசையின் விசை இவ்வாறும் செல்லும். பாலும் கசந்ததோ?

    ReplyDelete
  2. அருமையான பதிவு...வழக்கம் போல்....

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்: