Pages

Tuesday, 11 November 2014

சங்க இலக்கியத் தூறல் - 7: காதல் முகிழ்த்திடும் அதிசயம்


('ஆஸ்திரேலிய தமிழ்முரசு' வலைப்பூவில் 10-11-2014 அன்று  வெளியிடப்பட்டது)

http://www.tamilmurasuaustralia.com/2014/11/blog-post_88.html



காதல் முகிழ்த்திடும் அதிசயம்


--- அன்பு ஜெயா, சிட்னி




அதோ அங்கே குளிர்ந்தகாற்று வீசிக்கொண்டிருக்கின்றது. அந்தக் காற்றினிலே மூங்கில்கள் அசைந்தாடிக் கொண்டிருக்கின்றன. அதுமட்டுமா? அப்படி வீசுகின்றக்காற்று அந்த மூங்கில்களில் உள்ள துளைகளின் வழியாகப் புகுந்து வரும்போது எழுகின்ற ஒலியானது குழலின் இசையைப்போன்று இன்பம் தருகின்றது.



அருகில் உள்ள பாறைகளிலிருந்து கீழே வீழ்கின்ற அருவி நீர் எழுப்புகின்ற ஒலியோ முழவின் இனிய இசையைப்போல உள்ளது. அங்கே சுற்றித்திரிகின்ற கலைமான்கள் எழுப்புகின்ற ஓசை பெருவங்கியத்திலிருந்து (பெருவங்கியம் = யானையின் துதிக்கைப் போன்ற வடிவுள்ள இசைக்குழல்) எழுகின்ற இசைபோன்று ஒலிக்கின்றது. அந்த மலைச்சாரலில் கண்ணுக்கழகாகப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. அப்பூக்களில் உள்ளத் தேனைப் பருகவருகின்ற வண்டுகளின் ரீங்காரம் இனிய யாழிசையாக ஒலிக்கின்றது. இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் ஒரு நடன நிகழ்ச்சிக்குப் பின்னணியாக அமைகின்றன. இப்பின்னணியில் அங்கே சுற்றித்திரிகின்ற மயில்கள் தங்கள் தோகையை விரித்து ஆடுகின்றன. இந்தக் காட்சியானது விறலியர் (பாணர்ப் பெண்கள்) மேடையில் ஆடுகின்ற ஆட்டத்தைப் போன்ற ஒரு தோற்றத்தைக் கண்முன்னே கொண்டுவருகின்றது. அந்த அழகிய நடனத்தைக் குரங்குகள் இன்று ஒரு மயக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்கின்றன. 



இத்தகைய இனிய காட்சிகள் நிறைந்த மலைநாட்டையுடைய ஒரு தலைவன், வில்லினைக் கையிலே ஏந்திக்கொண்டு, தான் எறிந்த அம்பு தைத்த யானை ஒன்று அந்தப் பக்கம் வந்ததைத் தேடிக்கொண்டு தினைப்புனத்தின் வழியாக வருகின்றான். அந்தத் தலைவன் அவனைச் சேர்ந்த மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் செயல்களைச் செய்பவனாம். அந்தத் தினைப்புனத்தின் வாயிற்பக்கம் வந்து நின்றான். அப்படி நின்றவனைப் பல மகளிர் பார்த்தனர். தலைவியும் அவளுடைய தோழியும்கூடப் பார்த்தனர். அவன் இதுபோலத் தான் அம்பெய்த விலங்குகளைத் தேடி வருவதும், மகளிர் பலர் அவனைப் பார்ப்பதும் புதிதான நிகழ்ச்சி அல்ல. ஆனால், பிறர்க்கெல்லாம் மகிழ்ச்சியை அளிக்கின்ற அந்தத் தலைவன் இன்று இந்த இரவிலே தன் நினைவிலே வந்து தன்னைமட்டும் வருத்துவது ஏன் என்று புரியாமல் தலைவி தோழியிடம் வினவுகிறாள். இந்தக் காட்சியைப் புலவர் கபிலர் பின்வரும் பாடலில் விவரிக்கின்றார்.

ஆடுஅமைக் குயின்ற அவிர்துளை மருங்கின்
கோடை அவ்வளி குழலிசை ஆகப்
பாடுஇன் அருவிப் பனிநீர் இன்னிசைத்
தோடுஅமை முழவின் துதைகுரல் ஆகக்
கணக்கலை இகுக்கும் கடுங்குரல் தூம்பொடு   (5)
மலைப்பூஞ் சாரல் வண்டியாழ் ஆக
இன்பல் இமிழ்இசை கேட்டுக் கலிசிறந்து
மந்தி நல்அவை மருள்வன நோக்கக்
கழைவளர் அடுக்கத்து, இயலிஆ டும்மயில்
நனவுப்புகு விறலியின் தோன்றும் நாடன்    (10)
உருவ வல்வில் பற்றி, அம்புதெரிந்து,
செருச்செய் யானை செல்நெறி வினாஅய்,
புலர்குரல் ஏனற் புழையுடை ஒருசிறை,
மலர்தார் மார்பன், நின்றோற் கண்டோர்
பலர்தில், வாழி தோழி அவருள்,          (15)
ஆர்இருட் கங்குல் அணையொடு பொருந்தி,
ஓர்யான் ஆகுவது எவன்கொல்,
நீர்வார் கண்ணொடு, நெகிழ்தோ ளேனே?

                                 --- கபிலர் (அகநானூறு, 82)

ஆனால் காதலைப்பற்றி இப்பாடலில் வெளிப்படையாக ஒன்றும் கூறப்படவில்லையே என்று நினைக்கத் தோன்றுகிறது அல்லவா? அதற்குப் பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன் அகமும் புறமும் என்ற தன்னுடைய நூலில் ஒரு நல்ல விளக்கத்தை அளிக்கின்றார்.

மூங்கிலில் காற்றடிக்கக் குழலோசை பிறப்பதும், அருவியில் முழவோசை எழுவதும், வண்டு இசைப்பதுவும், மயில் ஆடுவதும் அன்றாடம்  மலைச்சாரலில் சாதாரணமாக நடக்கின்ற நிகழ்ச்சி. தினமும் அந்தக் காட்சியைப் பார்க்கின்ற குரங்குகள் இன்று மட்டும் ஏன் அப்படி ஒரு மயக்கத்துடன் பார்க்கின்றன? ஏனெனில், அன்றாடம் நடைபெறும் நிகழ்ச்சியாக இருந்தாலும் இன்று மட்டும் ஒரு புதுமை நிகழ்ந்துள்ளது என்பதைக் குறிப்பால் உணர்த்தவே “மந்தி மருள்வன நோக்க” என்ற சொற்களைப் பயன்படுத்தியுள்ளார் கபிலர்.


கூர்ந்து நோக்கினால், தலைவன் அடிக்கடி விலங்குகளைத் தேடிவருவதும், தலைவியும் மற்ற மகளிரும் அவனைப் பலமுறை பார்த்திருத்தலும் பலமுறை நடந்த நிகழ்ச்சிதான். இன்று மட்டும், அதுவும் தலைவனைப் பார்த்த மற்ற மகளிரின் மனதைத் தாக்காத தலைவனின் நினைவு, தலைவியின் மனதைமட்டும் தாக்குவது ஏன்? அதுவே காதலின் தனிச்சிறப்பு. காதல் என்பது ஒரு மனநிலை என்பதனையும், அது திடீரெனத் தோன்றும் என்பதனையும், ஒரே சூழலில் பலர் இருப்பினும் குறிப்பிட்டவர்களையே அது தாக்குகிறது எனபதும் இக்காலத்திலும் நடைபெறும் நிகழ்வாகவே உள்ளது. இவ்வாறு தலைவியின் மனதில் காதல் முகிழ்த்திடும் அதிசயத்தைக் கபிலர் இப்பாடலில் எவ்வளவு நுட்பமாக வெளிப்படுத்தியிருக்கின்றார்!
------------------------------------------------------


8 comments:

  1. அருமையான நடையுரை. தற்காலம் இத்தகைய நடையில் சங்கத்தமிழ் வழங்கப்பட்டால், படிப்பவர்கள் அதிகம். என்னுடைய இங்கிருக்கும குழுவுடன், நன்றியுடன் பகிர்ந்து கொள்ளலாமா.
    வாழ்த்துக்கள் இன்னம்பூரான்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம், தங்கள் கருத்துக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா. என்னைக்கேட்கவேண்டியதே இல்லை. தரமானது என்று நீங்கள் கருதினால் தங்கள் குழுவினருடன் தாராளமாகப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

      Delete
  2. அருமை சார். அழகான, தெளிவான, சுவையான விளக்கங்கள். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம், தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. மீண்டும் வருகை தாருங்கள்.

      Delete
  3. பல்ப் அடிக்கிற விஷயத்தில் இவ்வளவு இருக்கா ? கவியின் கவித்துவத்தோடு உங்களின் விளக்கம் இரண்டறக் கலந்து எமக்குள்ளும் கவிக்காதலை உண்டு பண்ணியது உண்மை - வாழ்க நீவீர் வளர்க உமது தமிழ்த் தொண்டு

    ReplyDelete
    Replies
    1. வணக்கம். தங்கள் கருத்துக்கு நன்றி அண்ணா. நுட்பமான கவித்துவத்தால்தான் அவரைக் 'குறிஞ்சிக் கபிலன்' என்று கூறினார்கள்.

      Delete
  4. கபிலரின் அழகிய பாடலை தனியாக படித்தால் புரியாது.

    தங்களின் அருமையான விளக்கத்தின் மூலம் மலைச்சாரலில் தினம் நடக்கின்ற நிகழ்வுகளையும் தலைவியின் மனதில் காதல் பிறந்த அழகையும் புரிந்து கொள்ள முடிந்தது. தங்களின் விளக்கவுரை மிக அருமை திரு. அன்பு

    ReplyDelete
    Replies
    1. வணக்கம். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

      Delete

உங்கள் கருத்துக்கள்: