Pages

Monday, 28 April 2014

கம்பனின் உவமைகள் - 6 : மருதம் என்னும் மாது

கம்பனின் உவமைகளில் சில துளிகள் - 6

மருதம் என்னும் மாது
-    அன்பு ஜெயா, சிட்னி


இதுவரை சரயு நதியோடு மிதந்து வந்த நாம் இப்போது கோசல நாட்டின் மருத நிலத்திற்குள் நுழைகின்றோம். கம்பன் நம்மைக் கைபிடித்து அழைத்துச் செல்லுவான், நாம் அந்த மருத நிலத்தின் அழகைச் சற்றுச் சுவைக்கலாம் வாருங்கள்.

அதோ அங்கே மருத நிலத்தில் தெரிகின்ற சோலை நடன மேடையாகக் காட்சியளிக்கின்றது. அதன் மீது வண்ண மயில்கள் அழகான நாட்டியப் பெண்களைப் போல நாட்டியம் ஆடிக்கொண்டிருக்கின்றன. அந்தச் சோலையின் குளத்திலே உள்ள நீரின் மீது வீசுகின்ற குளிர்ந்த காற்றினால் உண்டாகின்ற சீரான அலைகள் திரைச்சீலையாக விளங்குகின்றன. அக்குளத்தில் மலர்ந்திருக்கின்ற தாமரை மலர்கள், அந்த நாட்டிய நிகழ்ச்சியைக் கண்டு களிப்பவர்களுக்காக தங்கள் தலைகளைத் தூக்கி விளக்குகளாகத் தோன்றுகின்றன.

அங்கே மத்தள ஓசையும் கேட்கின்றதே! அது எங்கேயிருந்து வருகின்றது?

ஓ.... மேகக் கூட்டங்கள் இக்காட்சியைக் காண்பதற்காகத் தங்களுக்குள் போட்டி போட்டுக்கொண்டு வரும்பொழுது, ஒன்றோடு ஒன்று இடித்துக்கொண்டு, மத்தள ஓசையை எழுப்புகின்றனவோ?

அச்சோலையிலே உள்ள மலர்களில் மொய்க்கின்ற வண்டுகள் மகர யாழின் இசையைப் போல ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கின்றன. அங்கே வளரும் குவளைக் கொடிகளில் உள்ள குவளை மலர்கள் தங்கள் கண்களை அகல விரித்து அந்த நாட்டிய நிகழ்ச்சியைக் கண்டு ரசித்துக் கொண்டிருக்கின்றன. இதுபோன்ற அழகியக் காட்சிகளை இவ்வுலகிற்குக் காட்டிக் கொண்டு மருதம் என்ற நாயகி பெருமிதத்துடன் அங்கே வீற்றிருக்கின்றாள். என்னே அந்த மருதநிலத்தின் அழகு!

கம்பனின் அந்தப் பாடல் :

தண்டலை மயில்கள் ஆட, தாமரை விளக்கம் தாங்க,
கொண்டல்கள் முழவின் ஏங்க, குவளை கண் விழித்து நோக்க,
தெண் திரை எழினி காட்ட, தேம் பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட, - மருதம் வீற்றிருக்கும் மாதோ.

   (பாலகாண்டம், நாட்டுப் படலம், 36)

இந்தப் பாடலிலே, மருத நிலத்திலே உள்ள சோலையை நாட்டிய மேடையாகவும், மயில்களை நடன மாதர்களாகவும், குளங்களில் உண்டாகும் அலைகளைத் திரைச்சீலையாகவும், தாமரை மலர்களை விளக்குகளாகவும், மேகக் கூட்டங்களை மத்தளங்களாகவும், வண்டுகளின் ரீங்காரத்தை மகர யாழின் இசையாகவும், குவளை மலர்களை இக்காட்சிகளை யெல்லாம் கண்டுகளிக்கின்ற பார்வையாளர்களாகவும் சித்தரித்து மருத நிலத்தின் சிறப்பைக் கம்பன் நம் கண் முன்னே கொண்டுவந்து நிறுத்துகின்றான்.


(உவமைகள் தொடரும்)

Friday, 25 April 2014

கம்பனின் உவமைகள் - 5 : பரம்பொருளும் சரயு நதியும்

கம்பனின் உவமைகளில் சில துளிகள் - 5

- பரம்பொருளும் சரயு நதியும்-
-    அன்பு ஜெயா, சிட்னி

இமயத்திலிருந்து புறப்பட்டு நால்வகை நிலங்களிலும் உள்ள ஏரிகள், குளங்கள், கால்வாய்கள் முதலிய பல இடங்களில் பாய்ந்து ஒடி வந்து கடலில் கலக்கும் முன் பல இடங்களில் பல பெயர்களில் அழைக்கப்பட்டாலும் அந்தச் சரயு நதியின் வெள்ளம் (நீர்) ஒன்றே தான். அதேபோல, பல சமயத் தத்துவங்களால் வெவ்வேறு பெயர்களாலும், உருவங்களாலும் விவரிக்கப்பட்டாலும் பரம்பொருள் ஒன்றேதான் என்று கம்பன் சரயுநதி வெள்ளத்தைப் பரம்பொருளுடன் ஒப்பிட்டுக் கூறுகின்றான்.

கம்பனின் அந்தப் பாடல் :

கல்லிடைப் பிறந்து, போந்து, கடலிடைக் கலந்த நீத்தம்,
எல்லைஇல் மறைகளாலும் இயம்அரும் பொருள் ஈது என்னத்
தொல்லையில் ஒன்றே ஆகி, துறைதொறும், பரந்த சூழ்ச்சிப்
பல்பெருஞ் சமயம் சொல்லும் பொருளும்போல், பரந்துஅன்றே.

(பாலகாண்டம், ஆற்றுப்படலம் – 31)


இவ்வாறு மகரந்தத் தூள் சிந்துகின்ற சோலைகள் வழியாகவும், சண்பக மரங்கள் நிறைந்த காடுகள் வழியாகவும், அரும்புகள் மலர்கின்ற பொய்கைகள் வழியாகவும், தடாகங்கள் வழியாகவும், பாக்கு மரங்கள் நிறைந்த தோட்டங்கள் வழியாகவும், நெல் வயல்கள் வழியாகவும் உலாவி ஓடிவந்தாலும் சரயு நதியின் நீர் ஒன்றேதான். அதேபோல், ஒரே ஆன்மாதான், நாம் "நாற்கதிகள்"* என்று நூல்களில் கூறப்பட்டப் பிறவிகளில் எடுக்கின்ற, பல உடல்களிலேயும் உலாவி வருகின்றது என்று கம்பன் சரயு நதியின் வெள்ளத்தை ஆன்மாவிற்கு ஒப்பிட்டுக் கூறுகின்றான்.

(*நான்கு கதிகள் : நரகர், விலங்கு, மனிதர், தேவர் – சூளாமணி, துறவுச் சருக்கம்,1922)

கம்பனின் அந்தப் பாடல் :

தாது உகு சோலைதோறும், சண்பகக் காடுதோறும்,
போது அவிழ் பொய்கைதோறும், புது மணல் தடங்கள்தோறும்,
மாதவி வேலிப் பூக வனம்தொறும், வயல்கல்தோறும்,
ஓதிய உடம்புதோறும் உயிர் என, உலாயது அன்றே.

                (பாலகாண்டம், ஆற்றுப்படலம், 32)

இவ்விரண்டு பாடல்களிலும் சமய தத்துவக் கோட்பாடுகளில் அடங்கிய, நாம் நம் கண்களால் காணமுடியாதப் பரம்பொருளையும் ஆன்மாவையும், காணக் கூடிய இயற்கைக் காட்சிகளுக்கு உவமையாக்கிக் கம்பன் விளக்கி இருப்பது அவன் கவித்துவத்தை எவ்வளவு அழகாக உணர்த்துகின்றது! அவனிடம்தான் எவ்வளவு கற்பனை வளம் மிகுந்திருக்கின்றது! அந்தச் சரயு நதியை முதலில் விலைமகளுக்கு ஒப்பிட்டான், பின்பு ஒரு தாய்க்கு ஒப்பிட்டான், இப்போது இறைவனுக்கும் ஆன்மாவிற்கும் ஒப்பிட்டுக் கூறுகின்றான். என்னே அவன் புலமை!


(உவமைகள் தொடரும்)

Tuesday, 22 April 2014

கம்பனின் உவமைகள் - 4 : தாயும் சரயு நதியும்


கம்பனின் உவமைகளில் சில துளிகள் - 4

- தாயும் சரயு நதியும் -
          -    அன்பு ஜெயா, சிட்னி

இமயத்திலிருந்து இறங்கி ஓடி வந்த அந்த வெள்ளம் நிலப்பகுதிக்கு வந்ததும் சரயு என்று புதுப் பெயர் பெறுகின்றது. இப்படித் தரையிறங்கி வந்த சரயு நதியின் வெள்ளம், நான்கு வகை நிலங்களான குறிஞ்சி, முல்லை, மருதம் மற்றும் நெய்தல் நிலங்களின் ஊடாகப் வளைந்து, திரிந்து, பாய்ந்து ஓடி அங்கு வாழும் மக்களுக்குப் பலனளிக்கிறது.

·         குறிஞ்சி – மலையும் மலையைச் சார்ந்த இடங்களும்
·         முல்லை – காடும் காடு சார்ந்த இடங்களும்
·         மருதம் – வயலும் வயல் சார்ந்த இடங்களும்
·         நெய்தல் – கடலும் கடல் சார்ந்த இடங்களும்

எப்படித் தாயின் முலைப்பால் குழந்தைக்கு உணவாகி அதை வளர்ப்பது போல, சரயு நதி தன்னுடைய நீர் வளத்தால் இந்த உலகத்திலுள்ள மக்களுக்கு உணவுப் பொருட்களை உற்பத்தி செய்ய உதவி புரிந்து அவர்கள் வாழ்க்கையை வளப்படுத்துகின்றது என்று கம்பன் சரயு நதியை ஒரு தாய்க்கு ஒப்பிட்டுக் கூறுகின்றான்.

கம்பனின் அந்தப் பாடல் :

“இரவிதன் குலத்து எண் இல் பல வேந்தர் தம்
பரவு நல் ஒழுக்கின் படி பூண்டது,
சரயு என்பது தாய் முலை அன்னது, இவ்
உரவுநீர் நிலத்து ஓங்கும் உயிர்க்கு எலாம்.”

(பாலகாண்டம், ஆற்றுப்படலம் – 24)

(உவமைகள் தொடரும்)


Monday, 21 April 2014

கம்பனின் உவமைகள் - 3 : வெள்ளப் பெருக்கும் விலைமகளும்

கம்பனின் உவமைகளில் சில துளிகள் - 3

- வெள்ளப் பெருக்கும் விலைமகளும் -

-    அன்பு ஜெயா, சிட்னி

அவையடக்கத்தில் இமயத்தின் உச்சிக்குச் சென்ற கம்பன் அங்கு பெய்த மழையைப் பார்க்காமல், அதன் அழகைப் பார்த்து சுவைக்காமல் இருந்திருப்பானா? இமய மலையின் மீது மழை பெய்து கொண்டே இருக்கிறது. அதனால் நீர் பெருக்கெடுத்து, அது மலையின் உச்சியையும், இடைப் பகுதியையும், அடிப் பகுதியையும், ஆரத் தழுவிக்கொண்டு வேகமாக ஓடி வருகின்றது. அப்படி ஓடி வருகையில் அம்மலையில் விளைந்துள்ள பொருட்களைத் தன்னகத்தே ஏந்திக்கொண்டு கீழே வந்த பின்னர், அந்தப் பொருட்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு அவை விளைந்த மலையிலிருந்து  விரைவாக விலகி வெகு தூரம் சென்றுவிடுகிறது. அதேபோல, ஒரு விலைமகளும், காமுகனின் உச்சி முதல் பாதம் வரைத் தழுவி அவனுக்கு இன்பம் கொடுத்துவிட்டு, பின்னர் அவனிடம் உள்ள பொருட்களையெல்லாம் பறித்துக்கொண்டு அவனை விட்டு விரைந்து ஓடிவிடுகின்றாள் என்று கம்பன், காமுகனுக்கு மலையையும், காமுகனின் செல்வத்தை மலையில் விளைந்த பொருட்களுக்கும், வெள்ளப் பெருக்கினை விலைமகளுக்கும் ஒப்பிட்டுக் கூறுகின்றான்.

கம்பனின் அந்தப் பாடல்:

தலையும் ஆகமும் தாளும் தழீஇ, அதன்
நிலை நிலாது, இறை நின்றது போலவே,
மலையின் உள்ள எலாம் கொண்டு மண்டலால்,
விலையின் மாதரை ஒத்தது, அவ் வெள்ளமே.”

                 (பாலகாண்டம், ஆற்றுப்படலம் – 18)

(உவமைகள் தொடரும்)


Saturday, 19 April 2014

கம்பனின் உவமைகள் - 2 : கம்பனின் அவையடக்கம்


கம்பனின் உவமைகளில் சில துளிகள் 2

- கம்பனின் அவையடக்கம் -
-    அன்பு ஜெயா, சிட்னி

குழந்தைகளும் சிறு பிள்ளைகளும் சித்திரங்கள் வரைவதாகச் சுவர்களிலும் தரையிலும் கிறுக்குவதைப் பார்த்திராதவர்கள் இவ்வுலகில் இருப்பது அரிது. அவ்வாறு குழந்தைகள் வீடுகள் என்றும், ஆடல் அரங்குகள் என்றும் வரைகின்ற சித்திரங்களைப் பார்த்து அச்சித்திரங்கள் சிற்பச் சாஸ்திரத்திற்கு உட்பட்டவை அல்ல, முரணானவை என்று சிற்பக்கலை வல்லுனர்கள் குறை கூறமாட்டார்கள். அதுபோல, நூல்கள் எழுதும் அறிவு அதிகமில்லாத தன்னுடைய கவிகள், காவிய இலக்கணத்திற்குள் அமையவில்லை என்று முறையாகத் தமிழ் கற்ற அறிஞர்கள் கோபங் கொள்ள மாட்டார்கள் என்று கம்பன் கூறுகின்றான். இந்தப் பாடலில், இராமாயணத்தைக் குழந்தைகள் வரையும் சித்திரத்திற்கும், தன்னுடைய கவித் திறனைக் குழந்தைகளின் சித்திரம் வரையும் திறனுக்கும், தமிழ் கற்ற அறிஞர்களை சிற்பக்கலை வல்லுனர்களுக்கும் ஒப்பிட்டு அடக்கத்துடன் கூறிக்கொள்கின்றான் கம்பன். இதைத்தான் வள்ளுவன்,
“நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.”
 – என்று கூறியிருப்பானோ!

கம்பனின் அந்தப் பாடல் :

“அறையும் ஆடரங்கும் படப் பிள்ளைகள்
தரையில் கீறிடின், தச்சரும் காய்வரோ?
இறையும் ஞானம் இலாத என் புன் கவி
முறையின் நூல் உணர்ந்தாரும், முனிவரோ?”
(பாயிரம், அவையடக்கம் – 9)

இவ்வாறு கம்பனின் அவையடக்கம் இமய உச்சிக்கு உயர்ந்திருப்பதைக் கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை.

(உவமைகள் தொடரும்)

ஆஸ்திரேலியாவில் தமிழ்க் கல்வி


(இந்த ஆண்டு ஜனவரி மாதம் கோவை மாநகரில் நடைபெற்ற 'தாயகம் கடந்த தமிழ்' மாநாட்டில் படைக்கப்பட்டு, மாநாட்டு மலரில் வெளியிடப்பட்டு கட்டுரை., பின்னர், இதன் சுருக்கம் 3-02-2014 'புதிய தலைமுறை கல்வி' யிலும் வெளியிடப்பட்டது))

ஆஸ்திரேலியாவில் தமிழ்க் கல்வி
– வளர்ச்சி, வாய்ப்புகள், சவால்கள்.
அன்பு ஜெயா, பாலர் மலர் தமிழ்ப் பள்ளிகள், சிட்னி

 தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்” என்று பாரதி சொன்னான் அன்று. அவனுடைய கனவு இன்று நனவாகி உலகின் பல நாடுகளில் புலம் பெயர்ந்து வாழ்கின்ற தமிழர்களின் முயற்சியால் தமிழ் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இதற்குப் பெருந்துணை புரிபவை தமிழ் ஊடகங்களும், தமிழ் அமைப்புகளும். புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் நமது இளைய தலைமுறையினருக்கு தமிழைக் கொண்டு செல்லும் முயற்சியில் பெரும் பணியாற்றுபவை தமிழ்ப் பள்ளிகள் என்று கூறினால் அது மிகையாகாது. இவ்வாறு ஆஸ்திரேலியாவில் இயங்கிவரும் தமிழ்ப் பள்ளிகள் பற்றியும், தமிழ்க் கல்வி வளர்ச்சி, அதற்கான வாய்ப்புகள், மற்றும் சவால்கள் பற்றியும் இக்கட்டுரையில் சற்று நோக்குவோம்.

தமிழ்க் கல்வி வளர்ச்சியும் கல்விக்கான வாய்ப்புகளும்

நியூ சவுத் வேல்ஸ் மாநிலப் பள்ளிகள்

ஆஸ்திரேலியாவில் 36 ஆண்டுகளாகத் தமிழ்ச் சிறுவர்களுக்குத் தமிழ் மொழியைக் கற்பிக்கும் பணி நடைபெற்று வருகின்றது. ஆயிரத்துத் தொள்ளாயிரத்தி எழுபதாம் ஆண்டுகளில் தமிழகத்திலிருந்து புலம்பெயர்ந்து சிட்னி நகரில் குடியேறிய தமிழர்கள் தங்கள் பிள்ளைகள் தமிழில் உரையாடுவதை சிறிது சிறிதாக மறக்கத் தொடங்கி மிகுதியாக ஆங்கிலத்தில் மட்டுமே உரையாடுகிறார்கள் என்பதைக் கண்ணுற்றார்கள். இந்த உண்மை, தாய் மொழியைத் தம் பிள்ளைகளுக்குக் கற்றுத் தருவதற்கு அவர்கள் தவறிவிட்டதை அவர்களுக்குச் சுட்டிக் காட்டியது. அந்தத் தவற்றைத் திருத்திக்கொள்ள என்ன செய்யலாமென்று சில நண்பர்கள் கூடி சிந்திக்க ஆரம்பித்தனர்.
அந்தச் சிந்தனையின் விளைவாக, ஆஸ்திரேலியாவின் முதல் தமிழ்ப் பள்ளியாக 1977-ஆம் ஆண்டு பாலர் மலர் தமிழ் பள்ளிசிட்னி மாநகரில் தொடங்கப்பட்டது. அப்போது வார இறுதி நாட்களில் நண்பர்கள் மகிழ்விற்காக ஒன்று கூடும்போது அவர்களது பிள்ளைகளுக்குத்  தமிழ் வகுப்புகளும் நடத்தப்பட்டன. இவ்வாறு ஒவ்வொரு வாரம் ஒவ்வொருவர் வீட்டில் வகுப்புகள் நடந்தன. அதன் பிறகு நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசிடம் ஒப்பம் பெற்று சிட்னியின் புறநகர்களில் ஒன்றான ஆஷ்பீல்டில் உள்ள அரசுப் பள்ளியில் வகுப்புகள் நடைபெறத் தொடங்கின. இப்படித் தொடங்கப் பட்ட பாலர் மலர் இன்று சிட்னியின் மற்றப் புறநகர்களான செவன்ஹில்ஸ், ஹோல்ஸ்வொர்தி, டெனிஸ்டோன், குவாக்கல்ஸ் ஹில், ஹார்ன்ஸ்பி ஆகிய இடங்களையும் சேர்த்து 6 கிளைகளாக விரிந்து தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் வளர்த்து வருகின்றது.
பாலர் மலர் ஆரம்பித்து பத்து ஆண்டுகளுக்குப்பின், 1987 ஆண்டு சிட்னி சைவ மன்றத்தினர் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வந்து வாழ்ந்த தமிழ்ச் சிறார்களுக்கு உதவும் நோக்கத்துடன் ஹோம்புஷ் புறநகரில் தமிழ்க் கல்வி நிலையம் ஒன்றை ஆரம்பித்தனர். அப்பள்ளியும் இப்போது நல்ல முறையில் வளர்ந்து தமிழ்ப்பணி செய்துவருகின்றது. அதன் பின்னர், சிட்னி மாநகரின் மற்ற புறநகர்களான் வெண்ட்வொர்த்வில், ஈஸ்ட்வுட், மவுண்ட்ருவிட், ஆவ்பர்ன், நியு காசில் ஆகிய இடங்களில் தமிழ்ப் பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டன. தற்பொழுது சிட்னியில் மொத்தம் 12 பள்ளிகளில் ஏறத்தாழ 1400 மாணவர்கள் தமிழ் பயின்று வருகின்றனர்.

மற்ற மாநிலப் பள்ளிகள்
ஆஸ்திரேலியாவின் மற்றொரு பெரிய மாநிலமான விக்டோரியாவின் மெல்பெர்ன் நகரில் 1979-ஆம் ஆண்டு ஈழத் தமிழ்க் கழகத்தினரால் ஒரு தமிழ்ப் பள்ளி தொடங்கப்பட்டு இன்று பல கிளைகளுடன் பணியாற்றி வருகின்றது. மெல்பெர்னில் மீண்டும், 1994-ஆம் ஆண்டில் பாரதி தமிழ்ப் பள்ளி என்ற பெயரில் ஒரு பள்ளி ஆரம்பிக்கப்பட்டு இப்போது பல கிளைகளாக அதுவும் வளர்ந்துள்ளது.
குயீன்ஸ்லாந்து மாநிலத்தின் தலைநகரமான பிரிஸ்பேனில் தாய்த் தமிழ்ப் பள்ளி 3 கிளைகளுடனும், பிரிஸ்பேன் தமிழ்ப் பாடசாலை 3 கிளைகளுடனும் தமிழைக் கற்பித்து வருகின்றன.
தெற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தின் தலைநகரான அடிலெய்டு நகரில் 1988ஆம் ஆண்டு இலங்கை தமிழ்ச் சங்கம் ஒரு தமிழ்ப் பள்ளியை ஆரம்பித்து இந்த ஆண்டு வெள்ளிவிழா கொண்டாடுகிறது. இதுமட்டுமின்றி, அடிலெய்டு தமிழ்ச் சங்கம்  ஒரு பள்ளியை நடத்தி வருகின்றது..
மேற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தின் பெர்த் நகரத்தில் மேற்கு ஆஸ்திரேலிய தமிழ்ச் சங்கம் பெர்த்தின் தெற்கு, வடக்கு பகுதிகளில் இரண்டு பள்ளிகளை நடத்தி வருகிறார்கள்.
ஆஸ்திரேலியாவின் வடக்கில் அமைந்துள்ள வட மண்டல ஆட்சிப் பகுதியின் (Northern Territory) தலைநகரான டார்வினில் அங்குள்ள தமிழ்ச் சங்கம் ஒரு பள்ளியை நடத்தி வருகின்றது.
ஆஸ்திரேலியாவின் தலைநகரமான கான்பராவில் சென்னை தமிழ்ப் பள்ளி, கான்பரா தமிழ்ப் பள்ளி என்று இரண்டு பள்ளிகள் தமிழ் கற்பித்து வருகின்றன.

 

மொழி வளர்ச்சிக்கு ஆஸ்திரேலிய அரசின் ஆதரவு

ஆஸ்திரேலிய அரசின் மொழிக்கொள்கை ஆஸ்திரேலியாவில் ஆங்கிலமும் பிற மொழிகளும் வளர பெருந்துணையாக இருந்து வருகின்றது. 1980-ஆம் ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவிற்கென்று ஒரு மொழிக் கொள்கை தேவை என்பதன் முக்கியத்துவம் ஆட்சியாளர்களால் உணரப்பட்டது. அந்த மொழிக் கொள்கையை, நடுவணரசு  நான்கு முக்கியக் கோட்பாடுகளுடன் உருவாக்கி, தேசிய அளவில் அதை ஒழுங்குமுறைப் படுத்துவதற்கும் வழிவகுக்கப்பட்டுள்ளது.

அந்த நான்கு கோட்பாடுகள்:
  1. ஆங்கில மொழியில் ஆற்றலை வளர்த்தல்.
  2. ஆங்கிலமல்லாத மற்ற மொழிகளைக் காத்தல்.
  3. மற்ற மொழிகளிலும் அரசியல் சேவைகள் கிடைக்க வழிவகுத்தல்.
  4. இரண்டாவது மொழி கற்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துதல்.

இதன்படி, 1987-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் தேசிய மொழிக் கொள்கை1 நடுவணரசால் அங்கீகரிக்கப்பட்டது. இந்தக் கொள்கை அங்கீகரிக்கப்பட்டதின் மூலம், ஆங்கிலம் பேசும் நாடுகளில் இப்படி ஒரு பன்மொழிக் கொள்கையை வகுத்த முதலாவது நாடாக ஆஸ்திரேலியா விளங்குகின்றது.2 தேசிய மொழிக் கொள்கையிலிருந்து இரண்டு முக்கியக் கொள்கைகளை இங்கு மேற்கோள் காட்டுவது பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகின்றேன்:

·        “Access to services and information by Australians who do not speak English or who are disabled in ways which involve language ought to be provided in appropriate ways which maximise the rights and opportunities of these people.”1
·        “Bilingualism will be promoted as positive value to individuals and society. It will be advocated that children who are potentially bilingual ought to be assisted by schools to develop this potential. Schools should be encouraged and assisted to make concerted efforts to foster the bilingualism of their pupils during normal schooling arrangements preferably, or in concert with community organizations or by other arrangements where this is not possible.”1

இந்த மொழிக் கொள்கையின் அடிப்படையில் ஆஸ்திரேலியாவின் மாநில அரசுகள் ஆங்கிலமல்லாத சமூக மொழிகளின் (Community Languages) வளர்ச்சிக்கு பின்வரும் முக்கியமான ஆதரவுகளை அளித்து வருகின்றன:
  • வார இறுதி நாட்களில் அரசுப் பள்ளிகளில் வகுப்புகள் நடத்த இலவச அனுமதி.
  • சமூக மொழி கற்பிக்கும் பள்ளிகளுக்கு (Community Language Schools) நிதி உதவி.
  • மொழிக்கல்வி கற்பித்தலுக்கான ஆசிரியர் பயிற்சிக்காகப் பல்கலைக்கழகங்கள் வசூலிக்கும் கட்டணத்தில் சலுகை.
  • ஆசிரியர்களின் மேலதிகப் பயிற்சிக்காகப் பயிலரங்குகள் (workshops/short courses) நடத்துதல்.
அரசாங்கத்தின் உதவிகளைப் பெறுவதற்கான நிபந்தனைகளும் பல உள்ளன. அவற்றில் முக்கியமானவை:
  • சமூக மொழியைக் கற்பிக்கும் நிறுவனங்கள் இலாப நோக்கில்லாத நிறுவனங்களாகப் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
  • மொழியைக் கற்பிப்பதற்கு நன்றாக வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டங்களைப் பயன்படுத்த வேண்டும்.
  • பாடத்திட்டங்கள் மாநில பாடத் திட்டக் குழுமத்தால் (Board of Studies) அங்கீகரிக்கப் பட்டதாக இருக்க வேண்டும்.
  • ஆசிரியர்கள் மொழிக்கல்வி கற்பிக்கும் முறைகளில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
  • வாரத்தில் குறைந்தது 2 மணி நேரம் வீதம் ஓர் ஆண்டில் 40 வாரங்கள் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.

பாடத்திட்டங்கள்
இங்கு அரசாங்கத்தின் உதவியைப் பெறுவதற்கான முக்கிய நிபந்தனைகளில் ஒன்று நன்றாக வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டங்களைப் பயன்படுத்துவதாகும். மற்ற மாநிலங்களில் ஆங்கிலமல்லாத மற்ற மொழிகளுக்கான பொதுப் பாடத்திட்டம் (Syllabus for Languages Other Than English – LOTE) பயன்பாட்டில் உள்ளது. ஆனால், நியு சவுத் வேல்ஸ் மாநிலத்தில் அனைத்துத் தமிழ்ப் பள்ளிகளும் ஒருங்கிணைந்துநியு சவுத் வேல்ஸ் தமிழ்ப் பாடசாலைகள் கூட்டமைப்பு(NSW Federation of Tamil Schools) என்ற நிறுவனத்தை உருவாக்கின. இந்த நிறுவனத்தின் கீழ் பாடத்திட்டக் குழு ஒன்றை அமைத்து, தமிழ்க் கல்விக்கென இரண்டு பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. ஒன்று, மழலையர் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரைக்கும் (K - 10)3 உரியது. மற்றொன்று, மேல் நிலை வகுப்புகளுக்கு [Higher Secondary (Year 11-12)]4 உரியது.

முதல் பாடத்திட்டத்தின்படி, மழலையர் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரையிலுள்ள வகுப்புகள் ஐந்து நிலைகளாகப் (Stages 1 to 5) பிரிக்கப்பட்டுள்ளன (உ-ம்: நிலை 1 - மழலையர், 1, 2 ஆம் வகுப்புகள், நிலை 5 - 9, 10ஆம் வகுப்புகள்). நியு சவுத் வேல்ஸ் மாநில பாடத் திட்டக் குழுமம் (NSW Board of Studies)5 இந்த பத்து வகுப்புகளில் மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டியனவற்றை வரைமுறை படுத்தியுள்ளது (K-10 Curriculum Framework)6. இவற்றிற்கு உட்பட்டு இப்பாடத்திட்டம் அமைந்துள்ளது. இவ்வரைமுறைகள் கல்வி கற்றலில் மாணவர்கள் அடைய வேண்டிய முக்கியமானத் திறமைகளையும் (Key Competencies) வலியுறுத்துகின்றன.
இரண்டாவது பாடத்திட்டத்தின் கீழ் பதினொன்றாம் வகுப்பு ஆரம்ப நிலையாகவும், பன்னிரண்டாம் வகுப்பு மேல் நிலையாகவும் இரண்டு நிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி, மாணவர்கள் ஒவ்வொரு நிலையிலும் 120 மணி நேரங்களாவது வகுப்பறையில் தமிழ் பயின்றிருக்க வேண்டும். இந்நிலையின் இறுதியில் மாணவர்கள் அடையவேண்டிய திறமைகளும் வரையறுக்கப் பட்டுள்ளன.

பாடப்புத்தகங்கள்
நியு சவுத் வேல்ஸ் தமிழ்ப் பாடசாலைகள் கூட்டமைப்பின் கீழ் ஒரு புத்தகக் குழுவும் அமைக்கப்பட்டது. இக்குழுவின் உதவியால் பாடத்திட்டத்தின் அடிப்படையில் தமிழ் கற்பிக்க இதுவரை ஏழு வகுப்புகளுக்கானப் பாடப்புத்தகங்களும், அவற்றிற்கான பயிற்சிப் புத்தகங்களும் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன.  இப்புத்தகங்கள் ஆஸ்திரேலியச் சூழலைப் பின்னணியாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளன. மற்ற வகுப்புகளுக்கு வேண்டிய புத்தகங்களுக்கான பணி தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது. இங்கு தயாரிக்கப்பட்ட புத்தகங்கள் இல்லாத வகுப்புகளுக்குச் சிங்கப்பூர், ஐரோப்பா போன்ற நாடுகளின் புத்தகங்களும் பயன்படுத்தப்படுகின்றன.

கற்பிக்கும் ஆசிரியர்கள்

பயிற்றுவிக்கும் ஆசிரியர்களாக பல பெற்றோர்கள், தமிழன்பர்கள் முன்வந்து தன்னார்வலர்களாக தமிழ்க் கல்வியின் வளர்ச்சிக்குப் பாடுபட்டு வருகின்றனர். ஆசிரியர்களுக்குத் தேவையான இந்தப் பயிற்சியை அளிக்க இங்கு உள்ள பல்கலைக்கழகங்கள் (உ-ம்: சிட்னி பல்கலைக்கழகம், நியு சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம், உள்ளங்காங் பல்கலைக்கழகம்) அவ்வப்போது சான்றிதழ் வகுப்புகள் நடத்திவருகின்றன.
நியு சவுத் வேல்ஸ் தமிழ்ப் பாடசாலைகள் கூட்டமைப்பு ஆண்டுதோறும் அனைத்துப் பள்ளி ஆசிரியர்களுக்குமாக பயிலரங்குகள் நடத்தி ஆசிரியர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள வசதிகள் செய்துவருகின்றது. இந்தப் பயிலரங்குகளில் ஆசிரியர்கள் தாங்கள் தமிழ் கற்பிக்க உபயோகிக்கும் முறைகளையும் உத்திகளையும் தாராளமாகப் பகிர்ந்து கொள்ளுதல் ஒரு சிறப்பு அம்சமாகும்.

தமிழ் பயிற்றுவிக்கும் உத்திகள்

இதுவரை குறிப்பிட்ட எல்லாவற்றையும்விட முக்கியமான ஒன்று மாணவர்களை ஊக்குவித்து தமிழ்ப் பள்ளிக்கு அவர்கள் விருப்பத்துடன் வரும்படிச் செய்வதாகும்.  மாணவர்களின் தமிழார்வத்தை ஊக்குவிக்கத் தமிழ்ப் பள்ளிகள் பல புதிய உத்திகளையும் படிப்பிக்கும் முறைகளையும் கையாளுகின்றன. இவற்றில் சில: காட்சி அட்டைகளை (Flashcards) பயன்படுத்துதல்; தமிழில் பிங்கோ (Bingo game) விளையாட்டுகள்; தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்தி கொலையாளி (Hangman) விளையாட்டு; கட்டங்களில் ஒளிந்திருக்கும் வார்த்தைகளைக் கண்டுபிடித்தல் (Find the Words); இடம் மாற்றி அமைக்கப்பட்ட எழுத்துகளையும், வார்த்தைகளையும் இனங்கண்டு சரியான வார்த்தைகளையும், வாக்கியங்களையும் கண்டுபிடித்தல் (Jumbled words & sentences) மற்றும் `பெரிய புத்தகம்` (Big Book Concept) வழிமுறையில் பாடம் நடத்துதல். இந்த முறைகள் மாணவர்களின் முழுநேரப் பள்ளிகளில் பயன்படுத்தப்படும் முறைகளைத் தழுவி இருப்பதால், புரிந்து கொள்ளுதல் மாணவர்களுக்கு எளிதாக உள்ளது. இது போன்ற விளையாட்டுகளை (Interactive Games) உள்ளடக்கி வகுப்புகளை நடத்துதல் மாணவர்களுக்கு உற்சாகத்தை அளித்து உரையாடல்களில் பங்குபெற வைக்கின்றது. மேலும் அவர்கள் பள்ளிக்குத் தொடர்ந்து வருவதற்கு ஊக்கமளிக்கின்றது.

மாணவர்களுக்கு மற்ற வாய்ப்புகள்

பள்ளிகள் ஆண்டுதோறும் மாணவர்களுக்கு போட்டிகள் வைத்து பரிசு வழங்குதல், ஒவ்வொரு பள்ளியும் ஆண்டு விழாக்கள் நடத்தி மாணவர்களுக்கு மேடை நிகழ்ச்சிகளில் பங்கு பெற வாய்ப்பளித்தல் அவர்களது ஆர்வத்தை மேலும் தூண்டுகிறது. இது தவிர, மாணவர்களின் திறமையை ஊக்குவிக்க இங்குள்ள சில தமிழ் அமைப்புகள் மாணவர்களுக்காக பவிதமான போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்குவதுடன் அவர்களுடைய திறமைகளுக்கு மேடைகள் அமைத்துத் தருகின்றன. இம்முயற்சிகள் அனைத்தும் ஆஸ்திரேலியாவில் தமிழ்க்கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கின்றன.

தமிழ்க் கல்விக்கு உள்ள சவால்கள்

முற்றிலும் வேற்று மொழிச் சூழலில் வளரும் பிள்ளைகளுக்குத் தமிழ் கற்பித்தல் என்பது எளிதான செயல் இல்லை. அதற்காகப் பல விதமான சவால்களையும் தமிழ்ப் பள்ளி நிர்வாகிகளும் ஆசிரியர்களும் எதிர் நோக்க வேண்டியுள்ளது. சில சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடிகின்றது. சில சவால்களுக்குச் சரியான தீர்வுகள் கிடைப்பதில்லை.

·         தமிழ்மொழி தமிழர்களின் அடையாளம் என்பதைத் தங்கள் பிள்ளைகளுக்கு உணர்த்த முயலாத, சில சமயங்களில் தாங்களே உணராத பெற்றோர்கள்.
·         தமிழைப் படிப்பதால் என்ன பயன் என்று பொருளாதார நோக்கில் எழும் கேள்வி.
·         வீட்டில் பிள்ளைகளுடன் எப்போதும் தமிழில் பேசவேண்டியதின் அவசியத்தை உணராது இருத்தல்.
·         தற்போது இங்கு துவக்கப் பள்ளிகளில் இரண்டாவது மொழியைக் கற்கவேண்டிய கட்டாயம் இல்லாமல் இருப்பது.
·         வார இறுதி நாட்களில் பாட்டு, நடனம், விளையாட்டு, நீச்சல் போன்ற பிள்ளைகளின் மற்ற வகுப்புகளுக்கு முக்கியத்துவம் அளித்தல்.
·         என் பிள்ளைக்கு தமிழ் பேசத் தெரிந்தால் மட்டும் போதும் என்று கூறும் பெற்றோர்களின் மனப்பாங்கு.
·         வாரத்தில் இரண்டு மணி நேரம் தமிழ் படித்தாலே பிள்ளைகளுக்கு தமிழில் முழு திறமையும் வரவேண்டுமென்ற எதிர்பார்ப்பு.
·         பல்கலைக்கழகத்தில் தமிழைப் பாடமாக எடுத்துப் படிக்க தற்போது வாய்ப்பு இல்லாத சூழ்நிலை.

சில சவால்களுக்கான தீர்வுகள்

·         சமீபத்தில் நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசின் பரிசீலனையில் உள்ள புதிய பாடத்திட்டத்தின்படி துவக்கப் பள்ளிகளில் இரண்டாம் மொழி கற்றல் கட்டாயமாக்கப்படும். இதன் மூலம் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பிள்ளைகள் தமிழ் படிப்பதற்கான அவசியமும் வாய்ப்பும் ஏற்படும்.
·         மாணவர்கள் மேல் நிலை வகுப்புப் பாடங்களில் (Higher Secondary – Year 11 and  12)  குறைந்தது பத்து பிரிவுகளைக் (Units) கட்டாயமாக எடுத்தப் படிக்கவேண்டும். அதிகமான பிரிவுகளையும் எடுத்துப் படித்து தேர்வு எழுத வாய்ப்பு உள்ளது. அந்த நிலையில் அதிகப்படியான மதிப்பெண்கள் பெற்றுள்ள பிரிவுகளில் முதல் பத்தின் கூட்டுத்தொகை  அவர்கள் பல்கலைக்கழகத்தில் நுழைவதற்காகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இப்போது நியு சவுத் வேல்ஸ், விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா மாநிலங்களில் பள்ளி மேல் நிலை வகுப்புகளில் தமிழை ஒரு பாடமாக எடுத்துப் படிக்க அனுமதி உள்ளது. இவ்வகுப்பில் தமிழில் எடுக்கும் மதிப்பெண்கள் பல்கலைக்கழகத்தில் நுழைவதற்கு பெரும் உதவியாக இருக்கும். இந்த வாய்ப்பு பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் தமிழைப் பாடமாக எடுத்துப் படிக்க ஊக்கமளித்துள்ளது.
·         இங்குள்ள தமிழ் ஆர்வலர்களும், சமூக அமைப்புகளும் சிட்னியில் ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்திலாவது தமிழ்த் துறையைத் தொடங்கவேண்டுமென்ற முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். இதற்காக தமிழக அரசு, இந்திய அரசு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் ஆகியவற்றின் உதவியை நாடவும் திட்டமிட்டு வருகின்றனர். அதற்குத் தேவையான அடிப்படைப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

முடிவுரை

தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் பல தடைகளும் சவால்களும் இருந்தாலும் தமிழ்க் கல்வி வளர்ந்துகொண்டுதான் உள்ளது. அவற்றை இன்னும் வெற்றிகரமாக எதிர்கொள்ளப் பெற்றோர்களின் பங்களிப்பு அதிகமாகத் தேவைப்படுகிறது. பெற்றோர்கள் தமிழ் மொழியின் இன்றியமையாமையைப் பிள்ளைகளுக்கு உணர்ந்த வேண்டும்; வீட்டில் தங்கள் பிள்ளைகளுடன் தமிழிலேயே பேசவேண்டும்; அவர்களைத் தமிழ்ப் பள்ளிகளுக்குத் தவறாது அழைத்துவர வேண்டும். தமிழ்ச் சமுக அமைப்புகள் தமிழ் நிகழ்ச்சிகளை நடத்துவது மட்டுமின்றி மேன்மேலும் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் போட்டிகளையும் நடத்தவேண்டும். இவ்வாறு தமிழ்ச் சமூகத்தின் ஒவ்வொரு அங்கமும் தங்களால் முடிந்த பங்களிப்பைத் தவறாது செய்தார்களானால் அயல்நாடுகளில் தமிழ்மொழி தலைமுறை தலைமுறைகளாகச் செழித்தோங்கும் என்பது உறுதி.

சான்றுக் குறிப்புகள் / References

1.    Lo Bianco J (1987), National Policy On Languages, Canberra. Australian Government Publishing Services or  http://www.multiculturalaustralia.edu.au/doc/lobianco_2.pdf
2.    Ingram DE (2000), Language Policy and Language Education in Australia; http://www.islpr.org/PDF/Language_Policy_Language_Education_Australia.pdf
3.    Tamil K-10 syllabus adopted from Generic Framework (2007): http://www.balarmalar.org/Tamil%20K-10%20Syllabus%20updated_0107.pdf   
4.    Higher Secondary (Year 11-12) - NSW Tamil Continuers Syllabus - http://www.boardofstudies.nsw.edu.au/syllabus_hsc/pdf_doc/tamil-continuers-st6-syl-from2010.pdf
5.    NSW Board of Studies: http://www.boardofstudies.nsw.edu.au/
 ------------------------------------