Pages

Saturday, 24 May 2014

கம்பனின் உவமைகள் - 10 : அயோத்திய மாநகரின் அகழி

 கம்பனின் உவமைகளில் சில துளிகள்  10

அயோத்தி மாநகரின் அகழி
- அன்பு ஜெயா, சிட்னி

அயோத்தி மாநகரின் மதிலின் அருகில் செல்வதற்கு நம்மை அழைக்கிறான் கம்பன். வாருங்கள் மதிலின் அருகில் சென்று பார்ப்போம்.

இதென்ன! இந்த மதிலைச் சுற்றி இவ்வளவு அகலமான, ஆழமான, தண்ணீர் உள்ள ஓர் அமைப்பு இருக்கிறதே! பண்டைக் காலத்தில் கோட்டையின் பாதுகாப்பிற்காக அகழி என்று ஒன்றை அமைப்பார்களே அதுதானா இது!  சற்றுப் பொறுங்கள் இந்த அகழியைப் பற்றி கம்பன் என்ன சொல்கிறான் என்று பார்க்கலாம்.



- அகழி -

புராணங்களில் கூறப்பட்டுள்ள, ஏழு தீவுகளையும் சூழ்ந்துள்ள ஏழு கடல்களுக்கும் அப்பால் அவற்றையெல்லாம் சுற்றித் தன்னுள் அடக்கிச் ‘சக்கரவாள கிரி’ என்னும் மலை இருக்கின்றது. அந்த மலையைப் போலவே ஓங்கி உயர்ந்துள்ள இந்த அயோத்தி மாநகரின் மதில் உள்ளதாம். அந்தச் சக்கரவாள கிரியையும் சுற்றி எப்படி ஒரு பெருங்கடல் உள்ளதோ அதேபோல, அயோத்தி மாநகரின் மதிலைச் சுற்றி அதனுடைய அகழி அமைந்திருக்கிறதாம். விலைமகள் ஒருத்தியின் மனம், தன்னிடம் வருவோரின் செல்வம் அனைத்தையும் கவரும் எண்ணத்துடன், எவ்வளவு கீழ்மையாக இருக்குமோ அதேபோல அந்த அகழியின் ஆழம் உள்ளதாம். இழிவான பாடல்கள் போல அகழியின் தண்ணீரும் தெளிவில்லாமல் இருக்கின்றதாம். கம்பன் காலத்திலும் இப்போது வரும் சில திரைப்படப் பாடல்கள் போலச் சிலர் எழுதியிருப்பார்களோ!

மேலும் அந்த அகழி, எவரும் நெருங்க இயலாத நற்குல மங்கையரின் கற்பைப் போலப் பாதுகாப்பானதாம். அதுமட்டுமல்ல,  ஐம்பொறிகளின் வயப்பட்டுத் தீய நெறியில் செல்லும் மானிடரின் மனம் போல, அகப்பட்ட பொருளை விரைவாகக் கவ்விக்கொண்டு மற்றவர்களைத் துன்புறுத்தும் முதலைகள் பல இருக்கும் இடமாம் அந்த அகழி.

இவ்வாறு, அந்த அகழியைச் சக்கரவாள மலையைச் சுற்றியுள்ள பெருங்கடலுக்கும், அதன் ஆழத்தை விலை மகளின் மனத்திற்கும், அதில் உள்ள கலங்கலான தண்ணீரை தெளிவில்லாத இழிவான பாடலுக்கும், அகழியின் பாதுகாக்கும் திறனை நற்குல மகளிரின் கற்பிற்கும், அகழியில் உறைகின்ற முதலைகளை மானிடரின் ஐம்பொறிகளுக்கும் உவமையாகக் கூறி அயோத்தி மாநகரைச் சுற்றியுள்ள அகழியின் சிறப்பைக் கம்பன் நமக்கு உணர்த்தியுள்ளான்.

கம்பனின் அந்தப் பாடல்:

அன்ன மா மதிலுக்கு ஆழி மால் வரையை
அலைகடல் சூழ்ந்தன அகழி,
பொன் விலை மகளிர் மனம் எனக் கீழ் போய்,
புன் கவி எனத் தெளிவு இன்றி,
கன்னியர் அல்குல்-தடம் என யார்க்கும்
படிவு அருங் காப்பினது ஆகி,
நல் நெறி விலக்கும் பொறி என எறியும்
கராத்தது;- நவிலலுற்றது நாம்.
 
 (பாலகாண்டம், நகரப் படலம், பாடல் - 107)

மதிலுக்கு அருகில் போகலாம் என்று நம்மை அழைத்து வந்து அதைச் சுற்றியுள்ள அகழியைப் படம் பிடித்துக் காட்டிவிட்ட கம்பனின் கவித் திறனை என்னென்று கூறுவது!

 (உவமைகள் தொடரும்)



Saturday, 17 May 2014

கம்பனின் உவமைகள் - 9 : மதிலின் மகிமை

கம்பனின் உவமைகளில் சில துளிகள் - 9

 மதிலின் மகிமை
        - அன்பு ஜெயா, சிட்னி

கோசல நாட்டு மருத நிலத்தின் அழகினையும் சிறப்பினையும் நமக்குக் காண்பித்த கம்பன், காட்டைப் பார்த்தது போதும் வாருங்கள் நாட்டைப் பார்க்கப் போகலாம் என்று, அழைக்கின்றான். வாருங்கள் அவனைத் தொடர்வோம்.

அதோ, அங்கே பிரமாண்டமாகத் தெரிகிறதே அது என்ன?, அயோத்தி மாநகரின் மதில்தானா அது. கம்ப நாட்டாரே, இவ்வளவு நீளமாக இருக்கிறதே அந்த மதில் அது எங்கே ஆரம்பித்து எங்கே முடிகிறது, அதனுடைய சிறப்பு என்ன?’ என்று கேட்டேன். அதற்குக் கம்பன் அந்த மதிலைப்பற்றி விவரித்தான்.

அந்த மதில் எங்கே ஆரம்பிக்கிறது, எங்கே முடிகிறது என்பது கண்ணுக்குத் தெரியாதபடி பரந்து இருக்கிறது. எப்படி வேதம் பல நுண்ணிய கருத்துக்களைத் தன்னுள்ளே அடக்கி, மிகப் பரந்து, எல்லை காணமுடியாதபடி இருக்கின்றதோ அதே போல இருக்கிறது. அதனால் அந்த மதில் வேதத்தை ஒத்து உள்ளது. அந்த மதில் உயரத்தில் விண்ணுலகை எட்டுவதால் தேவர்களை ஒத்து உள்ளது.
பகைவரை எதிர்கொண்டு தாக்கி அயோத்தி நகரைக் காப்பதற்காக அந்த மதில் தன் மேற்புரத்தில் பல இயந்திரப் பொறிகளை, வெளியே தெரியாதவாறு, உள்ளடக்கி வைத்திருப்பதால் புலன்களை அடக்கி வாழும் முனிவர்களை ஒத்து உள்ளது. அது அயோத்தி மக்களைக் காத்து நிற்பதால், காவல் தெய்வமாக உள்ள துர்க்கையை ஒத்திருக்கிறது. அந்த மதில் சூலம் முதலிய ஆயுதங்களை தன்னிடம் வைத்திருப்பதால் காளி தேவியை ஒத்துள்ளது. பிற அரசர்களால் அடைய முடியாதபடி இருப்பதால் அது தன் பத்தர்கள் தவிர மற்றவர்களால் அடைய முடியாத ஈசனை ஒத்திருக்கிறது. இவ்வாறு அந்த மதிலின் பெருமைகளைப் பல உவமைகளால் அவன் பாடலில் பாராட்டிக் கூறுகின்றான் கம்பன்.

கம்பனின் அந்தப் பாடல்:

“மேவ அரும் உணர்வு முடிவு இலாமையினால்
வேதமும் ஒக்கும்; விண்புகலால்,
தேவரும் ஒக்கும்; முனிவரும் ஒக்கும்,
திண் பொறி அடக்கிய செயலால்;
காவலின், கலை ஊர் கன்னியை ஒக்கும்;
சூலத்தால், காளியை ஒக்கும்;
யாவையும் ஒக்கும், பெருமையால், எய்தற்கு
அருமையால், ஈசனை ஒக்கும்.”  

(பாலகாண்டம், நகரப் படலம், பாடல் -101)


நாட்டைப் பார்க்கலாம் வாருங்கள் என்று அழைத்துவந்து நம்மை மதிலிடம் கொண்டுவந்து நிறுத்திவிட்டான் கம்பன். வேறு என்னவெல்லாம் செய்யப் போகிறான் என்று பொறுத்திருந்து பார்ப்போம் வாருங்கள்.


                              (உவமைகள் தொடரும்)

Monday, 12 May 2014

சங்க இலக்கியத் தூறல் - 2 : தாய்மையின் தனிச்சிறப்பு

சங்க இலக்கியத் தூறல் - 2


(தினமணி-தமிழ்மணி - 5 மே-2014 அன்று வெளியிடப்பட்ட கட்டுரை)
தாய்மையின் தனிச்சிறப்பு
-    அன்பு ஜெயா, சிட்னி


மன்னன் பணியை நிறைவேற்றுவதற்காக தலைவன் தன் காதல் தலைவியைப் பிரிந்து மன்னனுடன் போருக்குச் செல்கிறான். அங்குப் பகை அரசர்கள் அரிய பொருள்களையும், அணிகலன்களையும் திறைப் பணமாகச் செலுத்துகிறார்கள். அதனால் மன்னனின் பகைமை உணர்வு தணிந்து போர் நிறைவு பெறுகின்றது. போர் முடிந்ததால் தலைவனும் நாடு திரும்பவேண்டிய நேரம் வந்தது.
அது கார் காலத்திலே ஓர் இனிய மாலைப்பொழுது.  மேகக் கூட்டங்கள் இடியுடன் மழையைப் பொழிகின்றன. அப்பொழுது சிறந்த ஓவியத்தைப் போல, சிவந்த நிற இந்திரகோபப் பூச்சிகள் (தம்பலப் பூச்சிகள்) எல்லா இடங்களிலும் பரவித் திரிகின்ற காட்சி நிலத்தை செந்நிறமாக தோன்றச் செய்கின்றது. அந்த ஈரப்பசையுள்ள நிலத்தில், தேரின் சக்கரங்கள் பதிய, தேரை விரைந்து செலுத்துமாறு தலைவன் தேர்ப்பாகனிடம் கூறுகின்றான். அந்த நேரத்தில் தன்னுடைய ஊரிலே நடக்கின்றது போல சில காட்சிகள் அவன் மனத்திரையில் ஓடுகின்றன.

அரும்புகள் மலரும் அந்த மாலைப் பொழுதில். பசுக்கூட்டங்கள் முன்னே செல்ல, மேய்ப்பர்கள் புல்லாங்குழலை ஊதிக்கொண்டும், கையில் கோலுடனும் மெல்ல நடந்து செல்கின்றார்கள். பசுக்களோ தங்கள் பெருத்த மடிகளில் உள்ள பாலின் சுமையை, இல்லங்களிலே கட்டி வைக்கப்பட்டு பசியோடு இருக்கும் தம் கன்றுகளுக்கு ஊட்டுவதன் மூலம், இறக்கி வைக்க எண்ணித் தங்கள் கழுத்திலுள்ள மணிகள் ஒலிக்க வீடுகளை நோக்கி விரைந்து நடந்துகொண்டு இருக்கின்றன.
தனக்கென வாழாமல் பிறருக்காக வாழ்கின்ற பண்ணன் என்பவனின் தோட்டத்தில் உள்ள நெல்லிக்காய்களைத் தின்றபின் தண்ணீர் குடிக்கும்போது கிடைக்கின்ற சுவையைப் போல, தன் மகனுக்குத் தலைவி சோறு ஊட்டுகின்ற அழகிய காட்சி தலைவன் கண் முன்னே தோன்றுகின்றது.

தன் மகனுக்கு நிலவைக் காட்டி அந்த நிலவிடம், “நீ என் மகனுடன் விளையாட இங்கு வருவாயானால் உனக்கும் பால் தருவேன்” என்று அழைத்து, மகனுக்கு விளையாட்டு காட்டிச் சோறு ஊட்டுகின்றாள்.  அந்தக் காட்சியைத் தலைவன் நேரில் கண்டுகளிக்க வேண்டுமென்ற ஆசையில்  அதை பாகனிடம் தெரிவித்துத் தேரை விரைவாகச் செலுத்துமாறு கூறுகின்றான்.

இக்காட்சிகளை மாற்றூர்கிழார் மகனார் கொற்றங்கொற்றனார் பின்வரும் அகநானூற்றுப் பாடலில் அருமையாகப் படம் பிடித்துக் காட்டுகின்றார்.


(வினை முடிந்து மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது – அகநானூறு 54: 1-22)

“விருந்தின் மன்னர் அருங்கலம் தெறுப்ப,
வேந்தனும் வெம் பகை தணிந்தான்; தீம்பெயல்
காரும் ஆர்கலி தலையின்று, தேரும்
ஓவத் தன்ன கோபச் செந்நிலம்,
வள்வாய் ஆழி உள் உறுபு உருளக்     5
கடவுக காண்குவம்  பாக மதவு நடைத்
தாம்பு அசை குழவி வீங்கு சுரை மடியக்,
கனையலம் குரல கால் பரி பயிற்றிப்,
படு மணி மிடற்ற பய நிரை ஆயம்
கொடு மடி உடையர் கோல் கைக் கோவலர்    10
கொன்றை அம் குழலர் பின்றைத் தூங்க,
மனை மனைப் படரும் நனை நகு மாலைத்,
தனக்கென வாழாப் பிறர்க்கு உரியாளன்
பண்ணன் சிறுகுடிப் படப்பை நுண் இலைப்
புன் காழ் நெல்லிப் பைங்காய் தின்றவர்       15
நீர் குடி சுவையின் தீவிய மிழற்றி,
முகிழ் நிலாத் திகழ் தரும் மூவாத் திங்கள்!
பொன்னுடைத் தாலி என் மகன் ஒற்றி,
வருகுவை ஆயின், தருகுவென் பால் என,
விலங்கு அமர்க் கண்ணள் விரல் விளி பயிற்றித்,    20
திதலை அல்குல் எம் காதலி
புதல்வன் பொய்க்கும் பூங்கொடி நிலையே!“  (அகநானூறு – 54: 1-22)

இந்தப் பாடலில், பண்ணன் எப்படி தனக்கென வாழாமல் பிறருக்காக வாழ்கின்றானோ அதேபோல தலைவியும் தனக்கென  வாழாமல் தன் தலைவனுக்காகவும் பிள்ளைகளுக்காவும் வாழ்பவள் என்பதும், பசுக்களும் தங்கள் கன்றுகளுக்காக வாழ்கின்றன என்பதும் ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பசுக்கள் தங்கள் கன்றுகளுக்குப் பாலூட்ட விரைவதைப் போல, தலைவி தன் பிள்ளைக்கு எப்படி விளையாட்டுக் காட்டிச் சோறூட்ட விழைகின்றாள் என்று தாய்மையின் தனிச் சிறப்பு ஒப்பீடு செய்யப்படுவதுடன் விலங்கினங்களுக்கு உள்ள தாய்மை உணர்வும் அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.  
---------------------------------------------


Sunday, 11 May 2014

கம்பனின் உவமைகள் - 8 : நடை பயிலும் அன்னங்கள்

கம்பனின் உவமைகளில் சில துளிகள் - 8

 நடை பயிலும் அன்னங்கள் 
                           -    அன்பு ஜெயா, சிட்னி

கோசல நாட்டின் மருத நிலத்தில் கம்பன் காட்டிய மற்றொரு காட்சியைக் காணலாம் வாருங்கள்.

அம்மருத நிலத்து வயல்களிலே தங்களுடைய இளம் குஞ்சுகளை உறங்குவதற்காகப் படுக்க வைத்துவிட்டு அன்னப் பறவைகளெல்லாம் அழகாக நடப்பதற்குப் பயிற்சி எடுத்துக் கொள்வதற்காக எங்கோ செல்கின்றன. ஆமாம், அன்னத்தைத் தானே அழகான நடைக்கு உதாரணமாக நம் கவிஞர்களெல்லாம் கூறுவார்கள். அப்படியிருக்க யாரிடம்தான் அந்த அன்னங்களே நடையைக் கற்றுக்கொள்ளத், தங்கள் குச்சுகளைக்கூட விட்டு விட்டுச், செல்கின்றன?! பார்க்கலாம், கம்பன் எங்கேதான் அழைத்துச் செல்கின்றான் என்று!

அந்த அன்னப் பறவைகள் தங்கள் குச்சுகள் தூங்குவதற்காக எங்கே படுக்க வைத்தன தெரியுமா? தாமரை மலர்களான படுக்கையின் மீது கிடத்தினவாம்! தாய்மாரெல்லாம் அங்கில்லாத நேரத்தில் பிள்ளைகளுக்குப் பசியெடுத்தால் என்ன செய்யுமாம்? அந்த வயல்களிலே மேய்ந்து கொண்டிருக்கின்ற எருமை மாடுகள் வீட்டிலே கட்டி வைத்திருக்கின்ற தங்கள் கன்றுகளை நினைத்தனவாம். அப்படி நினைக்கும்போது அவை கனைத்தன. அந்த அழுத்தத்தில் கனத்த அவற்றின் மடியிலிருந்து தானாகப் பால் சொரிந்ததாம். அந்தப் பாலை அன்னக் குஞ்சுகள் பருகுகின்றன என்று கம்பன் கூறுகின்றான். 

இப்போது குஞ்சுகளுக்குப் பசி நீங்கிவிட்டது. அப்போது அங்கே உள்ள பச்சைத் தவளைகள் ஓசை எழுப்புகின்றன, அந்த ஓசை அன்னக் குஞ்சுகளுக்குத் தாலாட்டாக இருக்கவே அவை அயர்ந்து தூங்குகின்றனவாம். ஆமாம், இந்தக் குச்சுகளை இங்கே விட்டு விட்டுச் சென்ற அன்னப் பறவைகள் எங்கே சென்றன? மீன் போன்ற கண்களை உடைய மருத நிலத்துப் பெண்களைப் போல நடை பயிலுகின்ற அன்னப் பறவைகள் என்று கம்பன் தன் பாடலில் கூறுகின்றான். அதனால் அழகிய இம்மருத நிலத்துப் பெண்கள் எப்படி நடக்கிறார்கள் என்று பார்த்துத் தாமும் அப்படி அழகாக நடப்பதற்குக் கற்றுக்கொள்வதற்காகச் சென்றிருக்கின்றன போலும்!

கம்பனின் அந்தப் பாடல் :

சேல் உண்ட ஒண் கணாரின் திரிகின்ற செங் கால் அன்னம்,
மால் உண்ட நளினப் பள்ளி, வளர்த்திய மழலைப் பிள்ளை,
கால் உண்ட சேற்று மேதி கன்றுஉள்ளிக் கனைப்ப சோர்ந்த
பால் உண்டு, துயிலப், பச்சைத் தேரை தாலாட்டும் – பண்ணை.
(பாலகாண்டம், நாட்டுப்படலம், 45)

இந்தப் பாடலில் தாமரை மலர்களைப் படுக்கைக்கும், பச்சைத் தவளைகளின் சத்தத்தைத் தாலாட்டுக்கும் உவமையாக்கித்; தாய்மையின் கனிவான தன்மை விலங்குகளுக்கும் உண்டு என்பதைக் கன்றை நினைத்ததும் தன் மடியிலிருந்து தானாகப் பாலைச் சுரக்கும் எருமை வழி நமக்கெல்லாம் காண்பிக்கின்றான் கம்ப நாட்டான்.

முன்னொரு பாட்டில், மயில்களின் நாட்டியத்தைக் காண்பித்த கம்பன் இந்தப் பாடலில் தவளைகளின் தாலாட்டை நம்மைக் கேட்க வைத்திருக்கின்றான். இந்த மருத நிலத்தில் இன்னும் என்னென்ன காட்சிகளை நமக்குக் காண்பிக்கப் போகிறானோ. அவனைத் தொடர்ந்து செல்லுவோம் வாருங்கள்.


(உவமைகள் தொடரும்)

Saturday, 3 May 2014

கம்பனின் உவமைகள் -7 : களையெடுக்கா உழவர்கள்

கம்பனின் உவமைகளில் சில துளிகள் 7

- களையெடுக்கா உழவர்கள் -
-    அன்பு ஜெயா, சிட்னி

கோசல நாட்டின் மருத நிலச் சோலையிலே நடந்த காட்சிகளைக் கண்டுகளித்தோம். அவ்வாறு இயற்கை பொங்கும் அந்த நாட்டில் வேறு என்னவெல்லாம் நடக்கின்றது என்று தெரிந்துகொள்ள ஆவல் மிகுந்ததால் கம்பனைக் கேட்டேன். அவன் எனக்குக் காட்டிய காட்சியைக் காணலாம் வாருங்கள்.

கோசல நாட்டில் வாழ்கின்ற சில உழவர்கள் தங்கள் வயல்களில் வளர்ந்துள்ள களைகளை நீக்க வேண்டுமென்று முடிவு செய்கிறார்கள். போகின்ற வழியிலே கள் அருந்திவிட்டு தங்கள் நிலங்களுக்குச் செல்கிறார்கள். அங்கே குவளை, தாமரை, ஆம்பல் போன்ற மலர்கள் மட்டுமே களைகளாக உள்ளன. வேறு களைகளைக் காண முடியவில்லை. குடித்த கள் வாயோரங்களில் சற்று ஒழுகிபடி இருக்க, அக்களைகளை நீக்காமல், கள்ளுண்ட மயக்கத்தில், இங்குமங்குமாக உலாவிக் கொண்டிருக்கிறார்கள். வந்த வேளையைப் பார்க்காமல் ஏன் இப்படி உலாவிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு என்ன காரணம்? நம் கம்ப நாட்டான் சொல்கிறான், அந்த உழவர்களின் கண்களுக்கு அங்குள்ளக் களைகள் எல்லாம் இனிமையாகப் பேசுகின்ற, தங்கள் அன்பிற்குப் பாத்திரமான உழவ மகளிரின் உடல் உறுப்புக்களைப் போல உள்ளனவாம். அது எப்படி?

குவளை மலர்கள் அப்பெண்டிரின் கண்கள் போலவும், தாமரை அவர்களின் கை, கால், முகங்கள் போலவும், ஆம்பல் மலர்கள் அப்பெண்டிரின் வாய்கள் போலவும் காட்சி அளிக்கின்றன. அதனால் அவற்றைக் களைவதற்கு மனது வராமல் அங்குமிங்கும் உலாவிக் கொண்டிருக்கின்றனராம். இது எப்படி இருக்கின்றதென்றால், அற்ப அறிவுடையவர்கள் தவறான பெண்களின் காம வலையில் சிக்கிவிட்டால், அப்பெண்களை விட்டு விலக வேண்டிய நேரத்தில் கூட விலக முடியாமல் துன்பப்படுவார்கள் என்று ஓர் அறிவுரையையும் அங்கே தன் பாடலில் வைக்கிறான் கம்பன்!

கம்பனின் அந்தப் பாடல் :

பண்கள் வாய் மிழற்றும் இன்
சொல் கடைசியர் பரந்து நீண்ட
கண், கை, கால், முகம், வாய் ஒக்கும்
களை அலால் களை இலாமை,
உண் கள் வார் கடைவாய் மள்ளர்,
களைகலாது உலாவி நிற்பர்;-
பெண்கள்பால் வைத்த நேயம்
பிழைப்பாரோ, சிறியோர் பெற்றால்?
                   (பாலகாண்டம், நாட்டுப்படலம், 42)

கள் குடித்தால் உருப்பட மாட்டாய் என்று நேரடியாகச் சொல்லாமல்  அதற்கு உவமைகளைக் கூறிச் சொல்வதில் கம்பனை விஞ்சமுடியுமா?


(உவமைகள் தொடரும்.)