Pages

Monday, 15 June 2026

பிறப்பினில் உயர்வு தாழ்வு வேண்டா

 

பிறப்பினில் உயர்வு தாழ்வு வேண்டா!

- அன்பு ஜெயா

பா வகை: கண்ணாட்டிச் சிந்து

 

பாம்பிடத்தில் உள்ளமணி பழுதாய்ப் பார்ப்பரோ – கண்ணாட்டி

பழுதாய்ப் பார்ப்பரோ!

பாம்பிடத்தில் உள்ளநஞ்சின் பழுதையும் மறப்பரோ -  கண்ணாட்டி

பழுதையும் மறப்பரோ!                  (1)

 

உயர்வென்றும் தாழ்வென்றும் உள்ளம் உரைக்குமோ – கண்ணாட்டி

உள்ளம் உரைக்குமோ!

உயர்வதுவும் தாழ்வதுவும் உம்மைப் பிரிக்குமே – கண்ணாட்டி

உம்மைப் பிரிக்குமே!             (2)

 

உயர்வுதாழ்வும் பிறப்பினிலே உண்டோ கூறாய் – கண்ணாட்டி

உண்டோ கூறாய்!

உயர்த்துவதே அறிவென்றும் உணர்ந்திடு நன்றாய் – கண்ணாட்டி

உணர்ந்திடு நன்றாய்!            (3)

----------------------------

 

Tuesday, 9 June 2026

கல்வியைக் கரம்சேர்

 

கல்வியைக் கரம்சேர்

- அன்பு ஜெயா

(நிலைமண்டில ஆசிரியப்பா)

 

கல்வியைக் கருத்துடன் கற்றுமே தேர்ந்திடு

கல்வியே உன்னைக் கரைதனில் சேர்த்திடும்

கல்வியைக் கரம்சேர் காலமும் காத்திடும்

கல்வியே பெருக்கிடும் கருத்துடன் சிந்தனை

கருத்துடன் சிந்தனை காட்டுமே பல்வழி

கருத்துடன் ஓர்வழி கையினில் எடுப்பாய்

எடுத்த வழியினில் ஏற்றம் பெற்றிடு

தடுத்திடே எதிர்வரும் தடைகளை என்றும்

கல்வியே உன்னைக் காத்து நிற்குமே

நல்வழி காட்டுமே நாளும் சிறக்கவே!

 ----------------------- 


ஓட்டையிருந்தும் உயிர் போகாதது வியப்பு!

 

ஓட்டையிருந்தும் உயிர் போகாதது வியப்பு!

--- அன்பு ஜெயா

பா வகை:  ஏலப் பாட்டு என்ற சிந்து பாடல்.

 

ஓட்டையுள்ள குடத்தினிலே ஒன்றுமுள்ளே தங்கி

நாட்பட்டு நில்லாதே நாடறிந்த உண்மை;

ஓட்டையுமே உன்னுடலில் ஒன்பதுதான் உண்டே

நாட்பட்டே உயிரதுவும் நலம்பெறுதல் பெருமை;

கூட்டினிலே வாழ்கின்றக் குருவியதும் நாளும்

நாட்டினிலே திரிந்துகூட்டை நாடிடுதல் அருமை;

கூட்டினிலே அடைந்தவுயிர் கூட்டினையே பிரிந்தால்

மீட்டதனை உன்னுடலில் மீளவைத்தல் சேய்மை;

கூட்டினிலே உள்ளபோதே குற்றங்கள் நீக்கி

ஆட்டமிடும் உயிரினுக்கே அமைதியளி பெருமை!

ஏலேலோ! ஐலசா ஏலேல ஏலேலலோ!

------------------------------- 

Monday, 1 June 2026

மெய்யறிஞர்களைத் துன்பங்கள் நெருங்காது!

 

மெய்யறிஞர்களைத் துன்பங்கள் நெருங்காது!

அன்பு ஜெயா

பா வகை:  ஏலப் பாட்டு என்ற சிந்து பாடல்.

 

காற்றினிலே தனையிழந்தே கண்டயிடம் பறக்கும்

ஆற்றலுமே இல்லாத அத்துரும்பென் செய்யும்;

கற்றூணோ வலிமையினால் காற்றினையே எதிர்க்கும்

கற்றூணின் வலிமையினைக் காற்றென்ன செய்யும்;

கற்றறியா மக்களையே காலமெலாம் அழுத்தி

நற்பொறுப்பு பெற்றிடுவர் நாட்டினிலே சிலரும்;

கற்றவரும் எதிர்வந்தால் கண்முன்னே தோன்றார்

பெற்றசெல்வம் காத்திடவே பேசாரே அவரும்;

உற்றபுலன் ஐந்துமிங்கே உருக்கிடுமே சிலரை

நற்றறிவு பெற்றோரை நாடாவே இவையும்;

ஏலேலோ! ஐலசா ஏலேல ஏலேலலோ!

--------------------------

சினத்தை அடக்குவதே சிறந்த குணம்!

 சினத்தை அடக்குவதே சிறந்த குணம்!

(பா வகை: வேற்றின உடுக்கைப் பாட்டு என்ற சிந்து பாடல்)

--- அன்பு ஜெயா


கரையொன்று நம்மையெலாம்

காத்திடுமே வெள்ளத்தின்

கடுமையுமே தாக்கிடாதே!

கரைதானே வெள்ளத்தின்

கடுஞ்சினமும் அழித்திடாமல்

காவலுமே புரிகின்றதே!

கரைதாண்டி வெள்ளமதும்

கடந்திடுதல் அரிதாகும்

காத்திடுதல் அதன்பண்பே!

கரைபோன்றே உள்ளமதும்

கடுஞ்சினத்தை எந்நாளும்

காத்திடுதல் சிறப்பன்றோ!

கடுஞ்சினமும் வெளிப்படாது

காலமெல்லாம் அமைதியினைக்

காத்திடுதல் பெருமையன்றோ!

கடுஞ்சினத்தை அடக்குவோனே

களத்தினிலே வெற்றிதனைக்

காலமெல்லாம் காண்பானே!

--------------------- 

-