Pages

Thursday, 18 June 2015

சங்க இலக்கியத் தூறல்_9: தந்தையின் அன்பும் இயற்கையன்றோ!தந்தையின் அன்பும் இயற்கையன்றோ!

--- அன்பு ஜெயா, சிட்னி

தலைவன் ஒருவன் விலைமகள் ஒருத்தியுடன் காலங்கழித்துவிட்டு தன் வீட்டிற்குத் திரும்புகிறான். தலைவியான தன் மனைவியை எப்படி சமாளிப்பதென்று தயங்கி அவளுடைய தோழியின் உதவியை நாடுகிறான். தோழியும் தலைவியிடம் சென்று, “உன் கணவன் திரும்பிவந்து உன்னுடன் சேர்ந்து வாழ்வதற்காக வாயிலிலே வந்து நிற்கின்றான். நீ அவனை ஏற்றுக்கொள்வாயா?”, என்று கேட்கிறாள். அதற்குத் தலைவி பதில் கூறுகிறாள்.தோழி, “குழந்தைச் செல்வம் பெற்றவர்கள் மட்டுமே அந்தப் பிறவியில் புகழும், மறுபிறவியில் மோட்சமும் அடைவார்கள்”, என்று பெரியவர்கள் கூறியுள்ளார்கள். அது எவ்வளவு உண்மை என்பதைக் கண்கூடாகக் கண்டு உணர்த்திருக்கிறேன். அது எப்படி என்பதைக் கூறுகிறேன் என்று சொல்லி முன்பு நடந்த நிகழ்ச்சி ஒன்றைத் தலைவி தன் தோழிக்கு கூறுகின்றாள்.

முன்பு ஒரு நாள் என் தலைவன், விலைமாது ஒருவளை மணம் புரிவதற்காக ஏற்பாடுகள் செய்துவிட்டு, மலர்மாலை அணிந்த மார்புடன் அலங்காரம் செய்துகொண்டு, தன்னுடைய தேரில் ஏறிப் புறப்பட்டான். அந்தத் தேரில் பூட்டப்பட்ட குதிரையின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த மணியானது ஒலிக்கத் தொடங்கியது. அந்த மணியோசைக் கேட்ட எங்கள் மகன் அதைப் பார்ப்பதற்காகத் தன் பிஞ்சுக் கால்களால் தடுமாறித் தடுமாறி நடந்து வீட்டு வாசலுக்குச் சென்றுவிட்டான்.

அவனைக் கண்டுவிட்ட என் தலைவன் பாகனிடம் தேரை நிறுத்தச் சொல்லி தேரிலிருந்து இறங்கினான். இறங்கியதும் புதல்வனைக் கையிலெடுத்து நெஞ்சாரத் தழுவிக்கொண்டு இனி நீ உள்ளே செல் என் செல்வமே” என்று கூறினான். ஆனால், எங்கள் புதல்வனோ அதை ஏற்றுக்கொள்ளமால் அழத்தொடங்கினான். அப்போது புதல்வனை நீ குபேரனல்லவா என்று பாராட்டியபடியே வீட்டிற்குள் அழைத்து வந்தான்.

தலைவனைத் தடுப்பதற்காக நான்தான் புதல்வனை அப்படி வெளியே அனுப்பினேன் என்று என் தலைவன் நினைப்பானோ என்று நான் கலங்கினேன். அதனால், மகனை அடிப்பதற்கென்று ஒரு கோலை எடுத்துக்கொண்டு என் புதல்வனை நெருங்கினேன். அப்போது மகனை நான் அடிக்கவிடாமல் என் தலைவன் அவனைத் தழுவி அணைத்துக்கொண்டான். 

அந்த நேரத்தில், தலைவனும் அந்த விலைமகளும் திருமணம் செய்துகொள்ள இருந்த வீட்டிலிருந்து  என் தலைவனை அழைப்பதைப் போன்று  முழவினுடைய ஓசை ஒலித்தது. அப்படி இருந்தும் என் தலைவன் மகனை விட்டுவிட்டுப் போகவில்லை.  நாங்கள் காதலித்த காலத்தின் நினைவுகெளல்லாம் அப்போது என் தலைவனின் மனத்திரையில் ஓடி அவனுடைய மனச்சாட்சியை வருத்தியதால் அந்த விலைமகள் வீட்டிற்குச் செல்லாது தவிர்த்துவிட்டான்.  அப்படிப்பட்ட மனமுள்ள என் தலைவனை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியேது தோழி, என்று தலைவி தன் தோழியிடம் கூறினாள்.தந்தைக்கும் தன் பிள்ளயின் மீது அன்பிருப்பது இயற்கைதானென்று அறிவுறுத்தும் இந்த அற்புதமானக் காட்சியைப் பின்வரும் அகநானூற்றுப் பாடலில் செல்லூர்க் கோசிகன் கண்ணனார் அழகாகச் சித்தரிக்கின்றார்.

''இம்மை உலகத்து இசையொடும் விளங்கி,
மறுமை உலகமும் மறுஇன்று எய்துப,
செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சிச்
சிறுவர்ப் பயந்த செம்மலோர்'' எனப்        5
பல்லோர் கூறிய பழமொழி எல்லாம்
வாயே ஆகுதல் வாய்த்தனம் தோழி?
நிரைதார் மார்பன் நெருநல் ஒருத்தியொடு
வதுவை அயர்தல் வேண்டி, புதுவதின்
இயன்ற அணியன், இத்தெரு இறப்போன்    10
மாண்தொழில் மாமணி கறங்க, கடைகழிந்து,
காண்டல் விருப்பொடு தளர்புதளர்பு ஓடும்
பூங்கண் புதல்வனை நோக்கி, 'நெடுந்தேர்
தாங்குமதி, வலவ,” என்று இழிந்தனன், தாங்காது,
மணிபுரை செவ்வாய் மார்பகம் சிவணப்       15
புல்லி, ''பெரும செல்இனி, அகத்து'' எனக்
கொடுப்போற்கு ஒல்லான் கலுழ்தலின், ''தடுத்த
மாநிதிக் கிழவனும் போன்ம்'' என, மகனொடு
தானே புகுதந் தோனே; யான்அது
படுத்தனென் ஆகுதல் நாணி, இடித்து, ''இவன்      20
கலக்கினன் போலும், இக் கொடியோன்'' எனச் சென்று
அலைக்கும் கோலொடு குறுக, தலைக்கொண்டு
இமிழ்கண் முழவின் இன்சீர் அவர்மனைப்
பயிர்வன போல்வந்து இசைப்பவும், தவிரான்,
கழங்கு ஆடு ஆயத்து அன்று நம் அருளிய      25
பழங்கண் ணோட்டமும் நலிய,
அழுங்கினன் அல்லனோ, அயர்ந்ததன் மணனே

--- செல்லூர்க் கோசிகன் கண்ண்ணார் (அகநானூறு, 66)

------------------------------------------------------